லாமா| Llama
தென்அமெரிக்காவைச் சேர்ந்த ஒட்டக வகையைச் சேர்ந்த லாமா போல்வியா நாட்டின் தேசிய விலங்காகும். சுமைகளை ஏற்றிச் செல்ல ஆண்டீய மலைத்தொடரை ஒட்டி வாழும் இன்காக்கள் முதலான இனக்குழு மக்களால் பயன்படுத்தப்படுகிறது. சுமைகளை ஏற்றிச் செல்வதற்காகவும் உரோமம், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகிறது.
அனிமலியா வகையினுள் கமலிடே(Camelidae) குடும்பத்தைச் சேர்ந்தன. 5.5 அடியிலிருந்து 6 அடி உயரம் வரை வளரும் லாமாக்கள் 130லிருந்து 200 கிலோ வரை எடை உடையனவாக இருக்கும். குட்டி லாமாக்கள் க்ரியா (Cria) என்றழைக்கப்படுகின்றன. க்ரியாக்கள் 9லிருந்து 14 கிலோ வரை எடைகொண்டதாக இருக்கும்.
கூட்டமாகக் கூடி வாழும் லாமாக்கள் புத்திசாலித்தனமான விலங்குகளாகும். இவற்றின் உரோமம் மென்மையாகவும் லனோனின் இல்லாமலும் இருக்கும். சிறு சிறு வேலைகளைக் கற்றுக் கொடுத்தால் அவற்றை எளிதில் கற்றுக் கொண்டு உடனே செய்யக்கூடியன. தங்கள் உடல் எடையில் 25லிருந்து 30 சதவிகிதம்வரை எடையுடைய சுமைகளைத் தூக்கிக் கொண்டு 5லிருந்து 8 மைல் தூரம்வரை நடந்துசெல்லும்.
வடஅமெரிக்காவின் நடுப்பகுதியில் உள்ள சமவெளிப் பகுதிகளில் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்துள்ளன.
காலநிலை மாற்றத்திற்கேற்ப வசிக்கும் இடத்தை மாற்றிக் கொள்ளும். இதன் இடப்பெயர்வை வைத்து மக்கள் மழை பெய்யப் போகிறது என்பதை அறிந்து கொள்வர். இதனால் லாமாக்களை அமெரிக்கன் காலண்டர் (American Calendar) என்றும் அழைப்பர். பூமியின் வெப்பமயமாதலுக்கு அழிந்துவரும் உயிரினங்களுள் இதுவும் ஒன்று.
நம் நாட்டில் குதிரைப் பந்தயம்போல் தென் அமெரிக்காவில் லாமாக்களுக்கு ஓட்டப் பந்தயம் நடத்தப்படுகிறது. பூமா(Puma),ஓநாய், கரடி போன்றன இதன் எதிரிகளாகும். பல நாட்கள் தண்ணீர் குடிக்காமல் இருக்கக்கூடியன. கோபம் வந்தால் ஒருவித நாற்றமுள்ள இதன் எச்சிலைத் தொந்தரவு கொடுக்கும் பிராணிமீது துப்பும். அதிக கோபமானால் வாந்தி எடுக்கும்.
தாவரவுண்ணி வகையினைச் சேர்ந்த லாமாக்கள் உயர் மலைகளில் வளரும் செடி, புதர், லைக்கென் போன்ற தாவரங்களைச் சாப்பிடுகின்றன. மனிதர்கள் செய்யும் செயல்களை அப்படியே திரும்பச் செய்யும் இயல்புடையன.