ஆரோக்கிய உணவு
ஆற்றல் தரும் ஆரஞ்சு
உடலுக்குத் தேவைப்படும் அனைத்து சத்துகளையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும் ஆரஞ்சுப் பழத்தில் உள்ள கால்சியமும் வைட்டமின் சியும் உடல் திசுக்களைப் புதுப்பிக்கின்றன.
ஆரஞ்சுப் பழத்திலுள்ள மிக முக்கியமான வைட்டமின் சி மனித உடலில் கொலாஜன் (Collagen) என்ற வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது. வளரும் எலும்புகள், தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் கொலாஜன் முக்கியப் பங்கு வகிக்கிறது. புற்று நோயைத் தடுக்கக் கூடிய ஆன்டி ஆக்சிடென்ட்டும் ஆரஞ்சில் உள்ளது.
ஆரஞ்சுப் பழத்திற்குரிய நிறத்தைக் கொடுக்கும் பொருளான Beta-cryptoranthin நுரையீரல் புற்றுநோயினைத் தடுக்கும் ஆற்றல் உடையது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆரஞ்சுப் பழச்சாறு நன்கு பசியினைத் தூண்டக்கூடியது. செரிமானமாகாத உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்து குடலைச் சுத்தமாக்கும். மலச்சிக்கலைப் போக்கும். ஆரஞ்சுப் பழச்சாற்றை உடனடியாக இரத்தம் உறிஞ்சுவதால் உடலுக்கு வெப்பமும் ஆற்றலும் உடனேயே கிடைத்துவிடும்.
பால் குடிக்க விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாற்றைப் பருகலாம். பாலில் கிடைக்கும் கால்சியம் ஆரஞ்சுப் பழத்திலும் உள்ளது. வைட்டமின் ஏ, பி, சி, மற்றும் 7 வகையான தாதுக்களையும் உள்ளடக்கியுள்ளது. உடல் சூட்டினைக் குறைக்கும்.
100 கிராம் எடையுடைய ஆரஞ்சுப் பழத்தில் 88.0 கிராம் நீர்ச்சத்தும், 0.6 கிராம் புரதச் சத்தும், 0.2 கிராம் கொழுப்பும், 0.3 கிராம் தாதுப் பொருளும், 18.0 மி.கிராம் பாஸ்பரசும், 24.0 மி.கிராம் சுண்ணாம்புச் சத்தும், 1100 மி.கி. கரோட்டினும், 53.0 கலோரி ஆற்றலும், 0.2 மி.கி. இரும்புச் சத்தும், 99.0 மி.கி. வைட்டமின் ஏ, 40.0 மி.கிராம் வைட்டமின் பி, 18.0 மி.கி. வைட்டமின் பி2, 80 மி.கி. வைட்டமின் சி சத்துகளும் உள்ளன.
முகத்தின் அழகை அதிகப்படுத்தும் ஆரஞ்சுப் பழம் அதிக தாகத்தைத் தணித்து வாய் துர்நாற்றத்தைப் போக்கி உடல் வறட்சியை நீக்கும் குணங்களைக் கொண்டுள்ளது.