கிவ்ரா உப்புச் சுரங்கம் (Khewra Salt Mine)
பாகிஸ்தான் நாட்டில் அமைந்துள்ள கிவ்ரா உப்புச் சுரங்கம் மிகப் பெரியதும் பழமையானதுமான உலகின் இரண்டாவது பெரிய உப்புச் சுரங்கமாகும். ஓர் ஆண்டிற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் டன் உப்பினை உற்பத்தி செய்யும் கிவ்ரா, உலக மக்களின் உப்பின் தேவைக்கு மிகப்பெரிய அச்சாணியாகத் திகழ்ந்து வருகிறது.
மாயோ உப்புச் சுரங்கம் ஜெலும் (Jhelum) மாவட்டத்தின் பின்ட் டாடன் கான் (Pind Dadan Khan) என்னுமிடத்தில் இஸ்லாமாபாத் மற்றும் லாகூரிலிருந்து 200 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 945 அடி மேலே அமைந்துள்ளது.
சுமார் 800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான இச்சுரங்கத்திற்கு மாயோ உப்புச் சுரங்கம் என்ற பெயரும் உண்டு. மேலோட்டமான கடல் நீர் ஆவியாகி இதனைத் தொடர்ந்த புவியியல் இயக்கமும் சுமார் 300 கிலோ மீட்டருக்கு உப்பினை உருவாக்குகிறது. இந்தச் சுரங்கம் அலெக்சாண்டர் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், வர்த்தகம் முகலாயர்கள் காலத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முக்கியமான சுரங்கப் பாதை 1872ஆம் ஆண்டு டாக்டர் ஹெச்.வார்த் என்னும் பொறியாளரால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சுரங்கத்தினுள்ளே, 18லிருந்து 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மட்டுமே ஆண்டு முழுவதும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு, ரோஸ் மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்தச் சுரங்கத்தின் உப்பு ஹிமாலயன் உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. ஆரம்பக் காலத்தில் ஓராண்டிற்கு 28 முதல் 30 ஆயிரம் டன் வரை உற்பத்தி செய்யப்பட்டு வந்த உப்பின் அளவு 2003ஆம் ஆண்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் டன்னாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்த உப்பு பெரும்பாலும் உணவிற்காகவே பயன்படுத்தப்பட்டாலும், சிலைகள் மற்றும் அலங்காரப் பொருள்கள் செய்யப் பயன்படுவதுடன் ஆஸ்துமா மற்றும் சுவாசம் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆண்டு ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இச்சுரங்கத்தின் உள்ளே குளங்கள், கலைச் சிற்பங்கள், 245 அடி உயரத்தில் சட்டமன்ற அறை, உப்பு மாளிகை, 80 அடி ஆழமுள்ள உப்புக் குளத்தின்மீது தூண்களே இல்லாத பாலம் என பல வண்ணங்களில் கண்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
350 ஆண்டுகள் வரை உற்பத்தியில் சிறந்து திகழும் என எதிர்பார்க்கப்படும் இச்சுரங்கத்திற்குச் செல்வதற்கு சிறப்பு ரயில்களும் உள்ளன.