குழிப் பந்தாட்டம் (GOLF)
குழிப் பந்தாட்டம் 15ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்திலிருந்து, தொடங்கியுள்ளது. குழிப்பந்தாட்ட மட்டை க்ளப் (Club) எனப்படுகிறது. இந்த மட்டையினை வைத்து வெண்மை நிறமுடைய பந்தினை விளையாட்டு மைதானத்தில் உள்ள இடங்களில் சிக்காமல் சிறிய குழிக்குள் தள்ளி விளையாடுவதே குழிப் பந்தாட்டமாகும்.
கவனமாக உருவாக்கப்பட்ட 9 அல்லது 18 குழிகள் கொண்டதே ஓர் ஆட்ட மைதானமாகும். இந்தக் குழிகளில் ஒவ்வொன்றாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தட்டுகள் அல்லது அடிகள் (Stroke) மூலம் பந்தினை விழச் செய்பவரே வெற்றி பெற்றவராவார்.
ஒவ்வொரு குழிக்கும் ஒரு பார் அல்லது சமம் மதிப்பு உண்டு. இது 3லிருந்து 5 வரை இருக்கும். 18 குழிகள் உள்ள ஆட்ட மைதானத்திற்கு 72 அடிகள் சமம் ஆகும். இந்த எண்ணிக்கையில் ஆடுபவருக்கு குறை (ஹண்டிகேப்) 0 ஆகும். ஒருவர் 75 அடிகளில் அனைத்துக் குழிகளிலும் பந்தினை விழ வைத்தால் அவரது குறை 3 ஆகும்.
குழிப் பந்தாட்ட மைதானங்கள் மிகப் பெரிய அளவில் இருப்பதால், வீரர்கள் சில சமயம் சிறு மின்கல ஊர்திகளில் குழிகளுக்கிடையே பயணம் செய்வது உண்டு. வணிக உலகில் மதிப்பு அதிகம் பெற்ற குழிப் பந்தாட்டத்தில் பரிசுத் தொகையும் புகழும் அதிகம்.
மட்டை
மரம், இரும்பு, புட்டர் என்ற மூன்று வகையான மட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஓர் ஆட்டத்திற்கு 14 மட்டைகள் வரை பயன்படுத்த அனுமதி உண்டு.
மரத்தினால் செய்த மட்டைகள் பெரும்பாலும் 220 மீட்டர் முதல் 180 மீட்டர் வரை பந்தைச் செலுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
175 மீட்டர் தூரம் முதல் குழி உள்ள பசுந்தரை வரை பந்தினைச் செலுத்த இரும்பு அடிகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
குழி அமைந்துள்ள பசுந்தரையை (Putting Green) அடைந்த பின்னர் புட்டர் மட்டையைக் கொண்டு பந்தின் மிக அருகில் நின்று மெதுவாகத் தட்டி பந்தினைக் குழியை நோக்கி உருட்டுவர்.
மட்டை வீச்சு (Swing)
பந்தை முதலில் அடிக்கும்போது டீ (Tee) என்னும் ஒரு சிறிய ஆணியைத் தரையில் பொருத்தி அதன்மீது பந்தை வைத்து அடிக்க வேண்டும். பின்னர் நமது வீச்சின் முழு வேகமும் பந்தைச் செலுத்தும்போது அந்த வீச்சு தரையிலோ அல்லது ஆணியிலோ படாமல் பந்தின்மீது மட்டுமே படவேண்டும்.
பயன்படுத்தப்படும் சொற்கள்
விளையாடுபவர் 4 அடிகள் மட்டுமே எடுத்துக் கொண்டால் அதற்கு பார் (Par) என்று பெயர். 3 அடிகள் எடுத்துக் கொண்டால் பேர்டி (Birdie) என்றும், 2 தட்டுகள் அல்லது அடிகள் எடுத்துக் கொண்டால் ஈகிள் (Eagle) என்றும், 5 அடிகள் எடுத்துக் கொண்டால் போகி (Boggy) என்றும் அதற்கும் அதிகமாக 2 அடிகள் எடுத்தால் இரட்டை போகி என்றும் அழைக்கப்படுகிறது.
உடல் உழைப்பிற்கான விளையாட்டாக இல்லாததால், ஓய்வுக்காக பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டாகவே கோல்ப் என்னும் குழிப் பந்தாட்டம் இருந்து வருகிறது. எல்லா இடத்திலும் விளையாட முடியாத ஒன்றாகவும், இதற்கான மைதானத்தை அமைப்பதும், பராமரிப்பதும் மிகுந்த பொருள் மற்றும் தண்ணீர் செலவு ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்திருப்பதாலும் இது பார்வைக்கான விளையாட்டாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.