உடைகளும் உலக நாடுகளும்
மங்கோலியர்கள்
மங்கோலியர்கள்: உலகம் முழுவதும் பிரபலமான முழுக்கால் சட்டை (பேண்ட்)யை அறிமுகப்படுத்தியவர்கள் மங்கோலியர்கள்தான். குதிரை ஏற்றம் மற்றும் வேகமாகச் செல்ல உடல் முழுவதும் போர்த்தப்பட்ட அங்கி சிக்கலை ஏற்படுத்தியதால் கால் முழுவதும் மறைக்கும் ஆடையை வடிவமைத்து அணிய ஆரம்பித்தனர்.
இது அவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. கிழக்கில் ஒரு ஓரத்தில் உள்ள கடுங்குளிர் நிறைந்த சமவெளிப் பகுதியில் இருந்து அய்ரோப்பாவரை பயணம் செய்ய கால்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்ததுடன் விரைவாகச் செல்லவும் முழுக்கால் சட்டை அவர்களுக்கு உதவியது.
இதன் காரணமாக ஆசியாவில் நான்கில் ஒரு பங்குப் பகுதியை வென்றார்கள். மங்கோலியர்களின் இந்த முழுக்கால் சட்டை அய்ரோப்பியர்களுக்கு மிகவும் வசதியான ஆடையாக மாறிவிட இன்று உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது.
அரேபியர்கள்: அரேபியர்கள் உடல் முழுவதும் மறைக்கும் அங்கியை அணிந்து வருகின்றனர். காரணம், அரேபிய பாலைவன வெப்பம் உடலில் நீர்ச்சத்தை எளிதில் ஆவியாக்கிவிடும். இதன் காரணமாக நீர்ச்சத்துக் குறைவு ஏற்பட்டு மூளை செயலிழந்து இறப்பு நேரிடும்.
அரேபியர்கள்
இதைச் சமாளிக்க, உடலின் நீர் ஆவியாகாமல் இருக்க உடல் முழுவதும் மூடுவது போல் அமைந்த ஆடைகளை அணிந்தனர். அரேபியர்களின் இந்தப் பழைமையான ஆடைதான் விண்வெளி வீரர்களின் ஆடை வடிவமைப்பிற்கு உதவியாக இருந்தது.
எக்ஸிமோக்கள்: துருவப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் உடல்வெப்பம் எப்போதும் சரிசமமாக இருக்க குளிர்காற்று உடலைத் தீண்டாமல் பார்த்துக் கொண்டனர்.
எக்ஸிமோக்கள்
இதற்கு உதவியாக இருப்பது கம்பளி ஆடைகள் என்றாலும், கம்பளி ஆடைகளின் உட்கட்டமைப்பு மிகவும் அற்புதமான பாணியில் தோலுடன் இணைக்கப்பட்டுள்ளது. துருவமான்கள் மற்றும் சடைஎருமையின்(யாக்) தோல்களைப் பதப்படுத்தி அதில் கம்பளியாடைகளை நீலத்திமிங்கிலத்தின் கொழுப்பினால் ஒட்டிவிடுவார்கள்.
மேலும் இடுப்பு, தோள்பட்டை போன்ற பகுதிகளில் அதிக அளவு கொழுப்பைச் சேமித்து வைப்பார்கள். வேட்டையாடச் செல்லும்போது உடைகளில் சேமித்து வைத்த கொழுப்பை எடுத்து சமைப்பதுடன் தீப்பந்தமாகவும் பயன்படுத்துவர்.
பூமத்தியரேகை நாடுகளில் வாழும் மக்கள்: இந்தியா மற்றும் இந்துமாக்கடல் நாடுகளில்(மலேசியா, தாய்லாந்து, புருனே, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, ஜாவா, சுமத்திரா, மடகாஸ்கர், இலங்கை மற்றும் சாலமன், ஃபுஜி, கிறிஸ்துமஸ் தீவுகள்) வாழும் மக்கள் வேட்டி கட்டி மெல்லிய மேலாடைகளைத் துண்டு உடன் சேர்த்து அணிவார்கள்.
ஆசியர்கள்
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகள் என்பதால் கோடைகாலம் நீண்டு இருக்கும். கோடைமழையும் பருவமழையும் அதிகம் இருக்கும். இதன் காரணமாக விவசாயம் இந்தப் பகுதிகளில் அதிகம் செய்யப்படும். தங்கள் விவசாயத் தொழிலுக்கு ஏற்றவாறு மெல்லிய உடைகள் அணிவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
இதன் காரணமாக எளிமையான முறையில் இடுப்பில் கட்ட, அவிழ்க்க, மடித்துக்கட்ட மெல்லிய பருத்தி ஆடையை வேட்டியாக இடுப்பின்கீழ் அணியத் தொடங்கினர். மேலாடையாக அதே வேட்டியின் ஒரு பகுதியை மடித்து மேலே போர்த்திக் கொண்டனர். இது வேலை செய்யும்போது வியர்வையைத் துடைக்கவும் பயன்படுகிறது.
அமெரிக்கர்கள்: அமெரிக்காவின் இரண்டு கண்டங்களுமே பலவித காலநிலைகளை உள்ளடக்கியது. பண்டைய அமெரிக்கச் செவ்விந்தியர்கள் பெரும்பாலும் நாடோடி வாழ்க்கையைக் காலம் முழுவதும் வாழ்ந்து வந்தனர். ஆகையால், எல்லாச் சூழலுக்கும் ஏற்றவாறு முரட்டு ஆடைகளை அணியத் தொடங்கினர்.
அமெரிக்கர்கள்
உலகிற்குக் காலுறையை (சாக்ஸ்) அறிமுகப்படுத்தியவர்கள் அய்ரோப்பியர்கள் என்றாலும் கால்களை முழுவதுமாக மூடும் சூ(Shoe)வை அறிமுகப்படுத்தியவர்கள் செவ்விந்தியர்கள்தான். காரணம், நாடோடி வாழ்க்கை வாழ்ந்த இவர்கள் எல்லா வகையான (சதுப்பு நிலம், மணற்பாங்கான, மற்றும் வறண்ட பாறை நிலங்களிலும்) நடக்கவேண்டி இருப்பதால் இவர்கள் கால்களை முழுவதும் மூடக்கூடிய சூ வை அணிந்து வந்தனர்.
அய்ரோப்பியர்கள்: கிறிஸ்துவிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உலக நாடுகளுடன் ரோம் மற்றும் கிரிக் போன்ற நாடுகள் வியாபாரத் தொடர்பில் இருந்ததால் நவநாகரிகமான ஆடைகளை அணியப் பழகிக்கொண்டனர். கிறிஸ்துவிற்குப் பிறகு மெல்ல மெல்ல உலக நாடுகளுக்குச் செல்லத் தொடங்கிய அவர்கள் சென்ற இடமெல்லாம் தங்களுடைய நாகரிக ஆடைகளையும் அறிமுகப்படுத்தினர்.
அய்ரோப்பியர்கள்
இதனை அடுத்து தொழில் மரபினாலான ஆடைகளைத் தவிர மற்ற நேரங்களில் பிற நாட்டு மக்களும் அய்ரோப்பியர்களின் ஆடைகளை அணியத் தொடங்கினர். 1900 முதல் தென்னிந்தியாவின் ஒரு பிரிவின் பெண்கள் மேலாடை அணிவதை சிலர் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
இந்நிலையில், அய்ரோப்பிய மத போதகர்களுடன் வந்த கன்னியாஸ்திரிகள் தங்களின் மேலாடையான கவுனை இந்தியக் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொடுத்தனர். இதுவே இன்று இந்தியா முழுவதும் பிரபலமான ஆடையாக மாறி பெண்கள் விரும்பி அணியும் ஒன்றாக தாவணி, சேலை மற்றும் பஞ்சாபி ஆடைகளின் வரிசையில் ஒன்றாக ஆகிவிட்டது.