குட்டிக் குரங்கு புஜ்ஜி
அது மலையடிவாரத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடம்.
அந்த ஊர் மட்டுமன்றி அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் பலரும் அங்கு கல்வி பயின்று வந்தனர்.
மலைமீது பல குரங்குகள் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தன.
அந்தக் கூட்டத்தில் புஜ்ஜி என்ற சிறிய குரங்கும் இருந்தது. அது மிகவும் புத்திசாலி. சரியாக பள்ளிக்கூட உணவு நேரத்தில் மலையை விட்டுக் கீழே இறங்கி வரும்.
மாணவர்கள் தருகின்ற உணவைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும். தாகம் தீர்த்துக் கொள்ள மாணவர்கள் குடிக்கும் குடிநீர்க் குழாயில், மாணவர்களைப் போலவே குழாயைத் திறந்து குடித்துவிட்டு, மீண்டும் குழாயைச் சரியாக மூடிவிட்டுச் செல்லும்.
இது அன்றாடம் நடக்கின்ற நிகழ்வு. ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கம் போல புஜ்ஜி மாணவர்கள் இல்லாததைக் கண்டு ஏமாந்து போகும். வெறும் நீரை மட்டும் குடித்துவிட்டு மலையேறும்.
முதலில் குரங்குக் குட்டியைக் கண்டு மாணவர்கள் அச்சம் கொண்டனர். நாளடைவில் அதன்மீது அன்பு செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.
பின்னர், அதற்குத் தாங்கள் உண்ணும் உணவிலிருந்து ஒரு பிடி கொடுத்து மகிழ்ந்தனர்.
ஒருநாள் வழக்கம்போல, உணவு இடைவேளைக்குச் சரியாக வந்த புஜ்ஜி, உணவுக்காகக் காத்திருந்தது. சில மாணவர்கள் மரத்தடியில் உண்டு கொண்டிருந்தனர். அவர்களின் அருகே குரங்குக் குட்டி வந்ததும் தங்களின் உணவில் கொஞ்சம் கொடுத்தனர்.
அதனை உண்டு முடித்தது. சிந்திய பருக்கைகளை, குரங்குக் குட்டியோடு அணில் பிள்ளையும் உண்டு மகிழ்ந்தது.
புஜ்ஜிக்குத் தாகம் எடுத்தது. அது குழாய் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தது.
அங்கே பல மாணவர்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
கூட்டத்தின் உள்ளே புகுந்த புஜ்ஜி திடுக்கிட்டது.
குடிநீர்க் குழாய் உடைந்து, ஆறுபோல பெருக்கெடுத்து சீறிப் பாய்ந்தது.
மாணவர்கள் செய்வதறியாது திகைத்தபடி நின்றிருந்தனர்.
புஜ்ஜி அங்கும் இங்கும் சென்று எதையோ தேடிக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கையில் அகப்பட்ட துணி, கயிறு போன்றவற்றைக் கொண்டு வந்தது.
கூட்டமாக நின்றிருந்த மாணவர்களை விலக்கிவிட்டு, குழாயிலிருந்து பாய்ந்து கொண்டிருந்த நீரை ஒரு கையால் அணைத்து மறுகையால் துணியைச் சுற்ற ஆரம்பித்தது.
பலமுறை தோல்வியே கிடைத்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தது புஜ்ஜி.
இதனைக் கண்ட சில மாணவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்தனர். குட்டிக் குரங்கோடு சேர்ந்து குழாயைத் துணியால் அடைத்து, கயிற்றால் கட்டினர். தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது.
மன நிறைவோடு அங்கிருந்து புறப்பட்டது குட்டிக் குரங்கு புஜ்ஜி.