முதுமையைத் தடுக்கும் பலாப்பழம்
முக்கனிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கும் பலா, மரத்தில் கிடைக்கும் பழ வகைகளில் மிகவும் பெரியதாகத் தோற்றமளிப்பதால் பழங்களின் அரசன் என்றழைக்கப்படுகிறது. பூமத்திய ரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா சில இடங்களில் மட்டுமே விவசாய முறைப்படி தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.
பெரும்பாலும் பிற பழங்கள் விளையும் தோட்டங்களில் துணைப் பயிராகவோ அல்லது வீட்டுத் தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படும் பலா மரங்கள் இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா போன்ற நாடுகளில் பெருமளவில் உள்ளன.
மஞ்சள், வெளிறிய மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும் பலாச் சுளைகளின் சுவை மரத்துக்கு மரம் வேறுபடும். சுளைகளின் உள்ளே இருக்கும் கொட்டைகளை வேகவைத்தோ, வறுத்தோ அல்லது காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தோ சாப்பிடலாம்.
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. மேலும், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உப்புச் சத்துகளுடன் வைட்டமின் சியும் அதிக அளவில் உள்ளது. பலாக் கொட்டைகளில் வைட்டமின் பி1, பி2 உள்ளன. பலாப்பழத்தில் உள்ள இரும்புச் சத்து இரத்த சோகை வராமல் தடுப்பதுடன் உடலில் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
100 கிராம் பலாப்பழத்தில் 303 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. குறைந்த அளவில் கலோரிகளைக் கொண்டுள்ளதால் உடல் எடையினைக் குறைக்க விரும்புபவர்களுக்குப் பெரிதும் உதவி செய்யும்.
புற்றுநோயினைத் தடுக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் பலாப்பழத்தில் இருப்பதாக அண்மையில் வெளிவந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தோல் சுருக்கத்தைத் தடுக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதால் வயது முதிர்வினைத் தள்ளிப் போடுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.
நெய் அல்லது தேன் கலந்து பலாப்பழத்தினைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடைவதுடன் நரம்புகளும் வலுவடையும்.
பலாப்பழத்தினை முறையாகச் சாப்பிட்டால் எந்தக் கெடுதலும் ஏற்படாது. பலாப்பழத்துடன் சிறிது நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் புத்துணர்ச்சி பெறும். பலாப் பழத்தைச் சாப்பிட்டதும் சிறிது நெய் அல்லது பாலை அருந்த எந்தத் தொல்லையும் ஏற்படாது.