ஒட்டகச்சிவிங்கி + வரிக்குதிரை = ஒகாபி (Okapi)
ஒகாபி என்பது ஒட்டகச்சிவிங்கி வகையினைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும். மத்திய ஆப்ரிக்காவில் உள்ள காங்கோ நாட்டின் வடகிழக்கே உள்ள இட்ரு மழைக்காடுகளே ஒகாபியின் பூர்வீகமாகும். அனிமலியா (Animalia) பிரிவினுள் கிராபிடே (Giraffidae) குடும்பத்தைச் சேர்ந்தது.
ஒகாபியின் முன்னங்கால்களிலும் பின்னங்கால்களிலும் வரிக்குரையைப் போன்ற வெள்ளைக் கோடுகள் காணப்படுகின்றன. இந்தக் கோடுகள் அடர்ந்த காடுகளில் குட்டிகள் தங்கள் தாய்களுடன் செல்லும்போது அடையாளம் கண்டுகொள்வதற்கு உதவலாம் என்று கருதப்படுகிறது.
உடல் பசுமாட்டைப் போன்றும், தலை அமைப்பு மான் போன்றும், வாய் அமைப்பு ஒட்டகச்சிவிங்கியைப் போன்றும் உள்ளது. இதன் கால் குளம்புகள் குதிரையைப்போல் அமைந்துள்ளன.
வளைந்து கொடுக்கும் தன்மையுடன் அமைந்த நீண்ட நாக்கு 35 செ.மீ. நீளம் வரை சென்று மரங்களில் உள்ள இலைகள் மற்றும் மொட்டுகளைப் பறிக்க உதவுகிறது. மேலும், தனது நீண்ட நாக்கினால் கண் இமைகள் மற்றும் காதுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் சுத்தம் செய்து கொள்ளும். நாக்கால் கண்களைச் சுத்தம் செய்யும் ஒரே பாலூட்டி இனம் ஒகாபி ஆகும்.
ஆண் ஒகாபிகளுக்கு தோலினால் மூடப்பட்ட குறுகிய கொம்புகள் உண்டு. இந்தக் கொம்புகள் Ossicones என்று அழைக்கப்படுகின்றன. பெரிய காதுகள் இவற்றை வேட்டையாட வரும் சிறுத்தை போன்ற விலங்கின் சிறு ஒலியினைக் கேட்கும் நுண்திறன் கொண்டு உதவுகின்றன.
தலையிலிருந்து வால்வரை 1.9லிருந்து 2.5 மீட்டர் (6.2 _ 8.2 அடி) நீளம் வரையும், நிற்கும்போது தோள்பட்டையிலிருந்து 1.5 முதல் 2 மீட்டர் (4.9_ 6.6 அடி) உயரம் வரை இருக்கும். 30லிருந்து 42 செ.மீ. நீளமுள்ள வால் உள்ளது. இதன் எடை 200லிருந்து 350 கிலோ வரை இருக்கும்.
தாவரவுண்ணி வகையினைச் சேர்ந்த ஒகாபி மரத்தின் இலைகள், மொட்டுகள், புல், தாவரங்கள், பழங்கள் மற்றும் பூஞ்சை உணவு வகைகளை உட்கொள்கின்றது. ஒகாபி சாப்பிடும் தாவர இனங்களுள் பல மனிதர்களுக்கு நஞ்சாக உள்ளன.
20ஆம் நூற்றாண்டுவரை ஒகாபியை மேற்கத்திய நாடுகள் அறிந்திருக்கவில்லை என்றாலும் எத்தியோப்பியர்களின் கொடையாக இது சித்தரிக்கப்படுகிறது. வெளிப்படாத விலங்குகளின் சின்னமாக பன்னாட்டு சமூகம் ஒகாபியை ஏற்றுக்கொண்டுள்ளது.