வேகமும் விவேகமும்
– செல்வா
மெதுவாகச் சென்று கொண்டிருந்த ஆமையைப் பார்த்த பூனை மியாவ் மியாவ் என்று கேலி செய்த தொனியில் கத்தியது. பூனையின் கிண்டலைப் புரிந்த ஆமை இப்போது எதற்காக என்னருகில் வந்து கத்துற என்றது. உன் நிலையினைப் பார்க்கவே பரிதாபமாக உள்ளது என்றதும் ஏன் என்று ஆமை கேட்டது.
உன்னிடம் கொஞ்சம்கூட வேகம் இல்லை. தினமும் ஒரு வேலையைச் செய்து முடித்தாலே பெரிய சாதனை அல்லவா, அதனால்தான் சொன்னேன் என்றது பூனை.
என்னிடம் விவேகம் நிறைய உள்ளது. வேகத்தைவிட விவேகமே ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய ஒன்று. விவேகத்தின் பலன் எப்போதும் வெற்றியைத் தருவதாக இருக்கும் என்றது ஆமை.
ஆமையின் கூற்றைக் கேட்ட பூனை, நீ சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. வேகமே எப்போதும் வெற்றிதரக் கூடியது. சோதனை செய்து பார்ப்போமா என்றது.
வேகத்தைக் கண்களால்தான் பார்க்க முடியும். விவேகத்தைச் செயலால்தான் அறிய முடியும். உன் விருப்பப்படி சோதித்தே அறிந்து கொள்வோம். சோதனை என்னவென்று சொல் என்றது ஆமை.
அங்கே தெரியும் பூச்செடியின் கீழே உதிர்ந்து கிடக்கும் மலர்களை யார் முதலில் எடுக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார் என்றது. சரி என்று ஆமை சொல்லிய அடுத்த விநாடி, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போல பூச்செடியைப் பார்த்தபடியே பூனை ஓடியது.
அருகில் வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் பூனை சென்றபோது, வீட்டிற்குள்ளிருந்து செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக தண்ணீர் பீய்ச்சும் குழாயினை எடுத்துக் கொண்டு பெரியவர் ஒருவர் வெளியில் வந்தார். செடியினை நோக்கிப் பாய்ந்து ஓடிவரும் பூனையைப் பார்த்து ஆத்திரத்துடன் கீழே கிடந்த கம்பினை எடுத்து விரட்டினார்.
ஓடிச் சென்ற வேகத்தில் திரும்பிய பூனை செய்வதறியாது திகைத்து, பின்னால் வந்து கொண்டிருந்த ஆமையைப் பார்த்துவிட்டு, பூச்செடியினை ஏக்கத்துடன் பார்த்தது. பூனை திரும்பிப் பார்த்ததைப் பார்த்த பெரியவர் மீண்டும் விரட்டினார்.
உன் வேகம் இவ்வளவுதானா? என் விவேகத்தைப் பார் என்று மனதினுள் நினைத்துக்கொண்டே பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பெரியவரையும், பூனையையும், வேறு யாரேனும் வீட்டினுள் இருந்து வருகிறார்களா என்றும் நோட்டம் விட்டபடியே தன்னால் முடிந்தவரை மனவலிமையை வரவழைத்து பெரியவர் கண்ணில் படாதபடி ஆமை ஓரமாக வந்து கொண்டிருந்தது.
பூச்செடிக்கு அருகில் ஆமை மறைந்து மறைந்து வந்தபோது பெரியவர் தண்ணீர் ஊற்றிவிட்டு வீட்டிற்குள் சென்றார். கீழே உதிர்ந்து கிடந்த பூக்களைத் தழுவியபடி தூரத்தில் நின்ற பூனையைப் பார்த்தது ஆமை.
தன் வேகத்தினால் _ அறியாமையினால் ஏற்பட்ட தோல்வியினை நினைத்த பூனை, வெட்கப்பட்டுத் தலைகுனிந்து வந்தது. வேகமாகச் சென்று நீ தோல்வியடைந்தாய். மெதுவாகச் சென்றாலும் நான் வெற்றி பெற்றேன்.
ஒரு செயலைச் செய்யும்போது தடைகள் ஏற்படுவது இயல்பு. தடைகளை விவேகத்தினால் வெல்ல வேண்டும். வேகமும் விவேகமும் வெற்றிபெறத் தேவை என்றாலும் விவேகமே முக்கியத்துவம் வாய்ந்தது என்ற ஆமையின் பேச்சை பூனை ஒத்துக்கொண்டது.