உலகின் மிகப் பெரிய சுரங்கம்
அமெரிக்காவின் உடா (Utah) மாகாணத்தில் சால்ட் லேக் நகரத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கென்னகாட் தாமிரச் சுரங்கமே (Kennecott Copper Mine) உலகின் மிகப் பெரிய சுரங்கமாகும்.
இங்கு தாமிரம் அதிக அளவில் கிடைக்கிறது. இதற்கு பிங்காம் கேன்யன் சுரங்கம் (Bingham Canyon Mine) என்ற இன்னொரு பெயரும் உண்டு. இது பிரிட்டனைச் சேர்ந்த ரியோ டின்டோ (Rio Tinto Group) என்ற சர்வதேச நிறுவனத்திற்குச் சொந்தமானது.
1906ஆம் ஆண்டு முதல் இந்தச் சுரங்கத்தில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 0.97 கிலோ மீட்டர் ஆழத்துடனும் 4 கி.மீ. அகலத்துடனும் 1900 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 1966ஆம் ஆண்டிலிருந்து தேசிய வரலாற்றுச் சின்னமாக்கப்பட்டு, பிங்காம் கேன்யான் ஓபன் பிட் காப்பர் மைன் (Bingham Canyon Open Pit Copper Mine) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2013 ஏப்ரலில் பெரிய அளவிலும் செப்டம்பரில் சிறிய அளவிலும் இங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
1848ஆம் ஆண்டு முதன்முதலில் பிங்காம் பள்ளத்தாக்கில் தாமிரம் இருப்பது சான்ஃபோர்டு பிங்காம், தாமஸ் பிங்காம் என்ற இரு சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சுரங்கத்தில் 2004ஆம் ஆண்டு வரை 17 மில்லியன் டன் தாமிரமும் 23 மில்லியன் அவுன்சஸ் தங்கமும், 190 மில்லியன் அவுன்சஸ் வெள்ளியும், 850 மில்லியன் பவுண்டுகள் மோலிப்டீனியமும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை இங்கு வெட்டி எடுக்கப்பட்டுள்ள கனிம வளங்களின் மதிப்பானது கம்ஸ்டோக் லோட் (Comstock Lode), க்லோன்டைக் (Klondike) மற்றும் கலிஃபோர்னியா கோல்ட் ரஷ் (California Gold Rush) இம்மூன்று சுரங்கங்களிலிருந்து கிடைத்ததைவிட அதிகமானதாக உள்ளது.
2006ஆம் ஆண்டு 1.8 பில்லியன் மதிப்பிலான உலோகங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உலகிலேயே மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கம் என்ற பெருமையினை உடையது.