எறி பந்தாட்டம் (Throw ball)
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாட்டுப் பெண்களால் 1930களில் பொழுதுபோக்கிற்காக விளையாடப்பட்ட விளையாட்டு என்று இந்திய எறிபந்துக் கழகம் கூறியுள்ளது. ஒய்.எம்.சி.ஏ. அமைப்பினரால் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1955ஆம் ஆண்டு ஹரி க்ரோம் பக் என்பவரால் விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
கைப்பந்தாட்ட விளையாட்டு அரங்கத்தின் அளவைவிட கொஞ்சம் பெரிதாக எறி பந்தாட்டத்தின் அரங்கம் அமைந்திருக்கும். 12.20 முதல் 18.30 மீட்டர் வரையிலும் நடுவில் இரு பக்கங்களிலும் 1.5 மீட்டரில் பெட்டியும் இருக்கும். வலையின் உயரம் 7.22 அடி அளவில் இருக்கும்.
டாஸ் போட்டு பந்தை முதலில் எறிவது யார் என்பதை முடிவு செய்யலாம்.
ஓர் அடி வைத்துப் பந்தை எறியலாம். ஆனால் கடைசிக் கோட்டை மட்டும் மிதித்துவிடக் கூடாது. வலையைத் தொடாமல் எதிர்ப்புறம் பந்தை எறிவதுதான் சரியான முறையாகும்.
ஒவ்வோர் அணியிலும் 7 முதன்மை வீரர்களும் 5 துணை வீரர்களும் இடம் பெற்றிருப்பர்.
7ஆம் எண்ணுள்ள ஆட்டக்காரர் பந்தை எறிந்த உடனேயே வலையின் பக்கம் நிற்கும் 1ஆம் எண் உள்ள ஆட்டக்காரரின் பக்கம் சென்று நிற்க வேண்டும்.
பின்னர் 1ஆவது ஆட்டக்காரர் 2ஆவது இடத்திற்கும் 2ஆவது ஆள் 3ஆவது இடத்திற்கும் 3ஆவது ஆள் 4ஆவது இடத்திற்கும் 4ஆவது ஆள் 5ஆவது இடத்திற்கும் 5ஆவது ஆள் 6ஆவது இடத்திற்கும் 6ஆவது ஆள் 7ஆவது இடத்திற்கும் சுழலும் முறையில் தாமாகவே _ இயல்பான முறையில் மாறி மாறி நிற்க வேண்டும்.
மூன்று ஆட்டங்களில் 25 புள்ளிகளைப் பெற வேண்டும். இரு கைகளால் பந்தைப் பிடித்து ஒரு கையினால் தோளுக்கு மேல் எறிய வேண்டும். சர்வீஸ் போடும்போது பந்து வலையில் படக்கூடாது.
எறியப்படும் பந்தானது நடுவில் உள்ள பெட்டியில் விழுந்துவிட்டால் பௌல் ஆகும். பந்தினைப் பிடித்ததும் மூன்று வினாடிக்குள் எறிந்துவிட வேண்டும். உள்ளங்கைகளைத் தவிர உடலின் எந்த பாகத்திலும் பந்து படக்கூடாது.
ஒரே நேரத்தில் இரண்டு வீரர்கள் பந்தினைப் பிடிக்கக் கூடாது. சர்வீஸ் போடும்போது முதலில் இருவர், அடுத்து மூவர், அடுத்து இருவர் என்ற நிலையில் நிற்க வேண்டும். ஓர் ஆட்டம் என்பது 30 நிமிடங்கள் நடைபெறும்.
16 வயதிற்குட்பட்டவர்கள் சப் ஜுனியர் பிரிவிலும் 18 வயதுடையவர்கள் ஜுனியர் பிரிவிலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீனியர் பிரிவிலும் விளையாடுவர். வலையின் உயரம் பிரிவிற்கேற்றபடி மாறுபடும். உள் அரங்க விளையாட்டாகவும் வெளி அரங்க விளையாட்டாகவும் எறிபந்து விளையாடப்பட்டு வருகிறது.
2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்வதேச எரிபந்துக் கழகத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது.