காற்றே…. காற்றே…. நீ… (2)
காற்று செயல்படும்போது…
சென்ற வாரத் தொடர்ச்சி….
(நாமனைவரும் காற்றைச் சுவாசிக்கிறோம். ஆனால் அந்தக் காற்றை நம்மால் கண்ணால் பார்க்கவோ, மூக்கால் நுகரவோ, நாக்கால் சுவைக்கவோ முடிவதில்லை. அதனால்தான் காற்றின் முக்கியத்துவத்தை நாம் சரியாக உணராமல் போகிறோம். செயல்படும்போது காற்று எவ்வாறு இருக்கும் என்பதைச் சோதித்து அறிவதுதான், காற்றைப் பற்றி நாம் நன்கு அறிந்து கொள்வதற்கான சிறந்த வழியாகும்)
துகளின் அளவும் அழுத்தமும்
காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்தத் துகள்களுக்கும் எடை உண்டு என்பதால், அவை மோதும் பொருள்களின் மீது ஓர் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. ஒரு எளிய சோதனையின் மூலம் இதனை நீங்கள் அறியலாம்.
ஒரு மெல்லிய குச்சியை சமதளம் கொண்ட ஒரு மேஜையின் மீது, குச்சியின் ஒரு பகுதி மேஜையிலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்படி வைக்கவும். அந்த குச்சியின் மீது மூடி இருக்கும்படி மேஜையின் விளிம்பிலிருந்து ஒரு செய்தித்தாளை வைக்கவும்.
இப்போது திடீரென்று குச்சியைத் தட்டினால், மேஜையின் விளிம்பில் உள்ள குச்சி உடைந்து போகும். காற்று அதிக அழுத்தம் உள்ள பகுதியில் இருந்து குறைந்த அழுத்தம் உள்ள பகுதியை நோக்கி வீசுகிறது.
வெளியில் அனைத்து இடங்களிலும் இருக்கும் அழுத்தத்தைச் சம அளவில் வைத்திருக்கவே இயற்கை முயல்கிறது. காற்றின் இந்தத் தன்மையினை மெய்ப்பிக்க இந்தச் சோதனையை நீங்கள் செய்து பார்க்கலாம்.
ஒரு பாட்டிலின் மீது ஒரு முட்டையை வைக்கவும். எரியும் காகிதம் ஒன்றைப் பாட்டிலினுள் போடுவதன் மூலம் அதனுள் இருக்கும் காற்றின் வெப்பநிலையை மாற்றவும். அந்த முட்டை பாட்டிலினுள் தள்ளப்படுவதை நீங்கள் பார்க்கலாம்.
பாட்டிலினுள் இருக்கும் காற்று எரிவதன் மூலம் பாட்டிலினுள் இருக்கும் காற்றின் அழுத்தம் குறைகிறது. பாட்டிலுக்கு வெளியே இருக்கும் அதிக அழுத்தம் கொண்ட காற்று முட்டையை பாட்டிலினுள் தள்ளுகிறது.
காலி பாட்டிலினுள் உள்ள பலூனில் காற்று ஊதுதல்
ஒரு தண்ணீர் பாட்டிலினுள் இருக்கும் பலூனை ஊதும்படி உங்களை எவரேனும் கேட்டால் அவ்வாறு செய்வது முடியாதது என்பது போலவே முதலில் தோன்றும். ஆனால் ஒரு சிறு ஏற்பாட்டின் மூலம் அதனைச் செய்யலாம்.
பலூனின் கழுத்துப் பகுதி ஒரு காலி தண்ணீர் பாட்டிலின் வாய்ப்புறத்திற்கு வெளியே இருக்கும்படி பலூனைப் பாட்டிலில் பொருத்தவும். பாட்டிலின் வாய்ப்புறத்தில் உங்களது வாயை வைத்து பலூனை ஊதுவதற்கு முயற்சிக்கவும். ஆனால் பலூன் அதிக அளவில் விரிவடையாது. காலி பாட்டிலுக்குள் ஏற்கெனவே காற்று இருப்பதுதான் இதன் காரணம். பாட்டிலினுள் விரிவடைவதற்கு பலூனுக்கு இடம் இல்லை.
இப்போது பாட்டிலின் ஒரு பக்கத்தில் ஒரு சிறு துளை போட்டுவிட்டு, பலூனை மறுபடியும் ஊதுவதற்கு முயற்சிக்கவும். இப்போது பலூன் நன்றாக விரிவடையும். இவ்வாறு விரிவடையும் பலூன் கொடுக்கும் அழுத்தத்தால், பாட்டிலினுள் இருக்கும் காற்று அந்தத் துளை வழியே வெளியேறுவதுதான் இதன் காரணம்.
ஒரு உருளைக்கிழங்கினூடே ஒரு ஸ்டிராவை நுழைத்தல்
சாதாரணமாக பானம் அருந்தும் ஸ்டிரா ஒன்றினை, ஒரு பென்சிலைப் பிடித்துக் கொள்வது போல, உங்கள் கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையே பிடித்துக் கொண்டு அதனை ஒரு உருளைக்கிழங்கினூடே நுழைக்க முயற்சி செய்யுங்கள். அந்த ஸ்டிரா உருளைக் கிழங்கினூடே செல்லாது.
உங்கள் சுட்டு விரலைக் கொண்டு ஸ்டிராவின் மேல் பகுதித் துளையை மூடிக் கொண்டு பிறகு ஸ்டிராவை உருளைக் கிழங்கினூடே தள்ள முயற்சிக்கவும். ஸ்டிராவின் மேல்வாயை விரல் கொண்டு மூடிவிட்டதால், உருளைக் கிழங்கை மோதும்போது, ஸ்டிராவினுள் இருக்கும் காற்று சிறைப்படுத்தப்படுகிறது.
சாதாரண சூழ்நிலைகளில் காற்று குறிப்பிடத்தக்க அழுத்தத்தைக் கொடுக்கிறது. ஆனால் அது அழுத்தப்படும்போது, அதன் அழுத்தம் அதிகரிக்கிறது. ஸ்டிராவினுள் சிறைப்பட்டிருக்கும் காற்று வளைந்து போகாமல் இருப்பதற்கான பலத்தை ஸ்டிராவுக்குக் கொடுக்கிறது. மெல்லிய அந்த ஸ்டிரா சுலபமாக உருளைக்கிழங்கிற்குள் நுழைந்துவிடுகிறது.
இரண்டு ஸ்டிராக்கள் மூலம் நீர் அருந்துவது
ஏதேனும் ஒரு பானத்தை நீங்கள் ஸ்டிராவைப் பயன்படுத்தி அருந்தினால், நீங்கள் உறிஞ்சுவதால் ஸ்டிராவுக்குள் இருந்த காற்று வெளியேறி வெற்றிடம் ஏற்படுவதால் திரவத்தின் மேல்பகுதியில் இருக்கும் காற்று அழுத்தம் தருவதால், பானம் ஸ்டிராவின் வழியே மேலே தள்ளப்படுகிறது.
இதனை மெய்ப்பிக்க ஒரு டம்ளரில் பாதி அளவுக்குத் தண்ணீரை நிரப்பி ஒரு ஸ்டிராவை தண்ணீரில் வைத்து ஒரு வாய் தண்ணீர் குடிக்கவும். பின்னர் மற்றொரு ஸ்டிராவை டம்ளரில் தண்ணீரில் படாதவாறு மேலே வைக்கவும். ஒரு ஸ்டிரா தண்ணீரில் இருக்கும். மற்றொரு ஸ்டிரா தண்ணீருக்கு வெளியே இருக்கும்.
இப்போது இரண்டு ஸ்டிராக்களையும் பயன்படுத்தி தண்ணீர் அருந்த முயற்சிக்கவும்.
ஒரு ஸ்டிராவைக் கொண்டு அருந்தும்போது, வாய்க்குள் நீங்கள் உருவாக்கும் வெற்றிடம் ஸ்டிராவிலும் ஏற்பட்டு தண்ணீரின் மேற்பரப்பில் இருக்கும் காற்று கொடுக்கும் அழுத்தத்தால் தண்ணீர் ஸ்டிரா வழியாக வாய்க்கு வருகிறது. இரண்டு ஸ்டிராக்களையும் பயன்படுத்தும்போது, தண்ணீருக்குள் இருக்கும் ஸ்டிராவில் அழுத்தம் குறைவதில்லை.
மற்றொரு ஸ்டிரா வழியாக வரும் காற்று, வெளியில் இருக்கும் அழுத்தத்தை வாய்க்குள்ளும் ஏற்படுத்துகிறது. இரண்டு ஸ்டிராக்களுள் இருக்கும் காற்றின் அழுத்தம் சம அளவினதாக இருப்பதால், இரண்டு ஸ்டிராக்களைக் கொண்டு தண்ணீர் அருந்துவது கடினமாக இருக்கிறது.
நீர் ஒழுகுவதை விரலினால் கட்டுப்படுத்தல்
ஒரு ஆணி மற்றும் சுத்தியைப் பயன்படுத்தி ஒரு கேனின் அடிப்பக்கத்தில் 3 லிருந்து 5 துளைகளைப் போடுங்கள். கேனின் மூடியில் மற்றுமொரு துளையைப் போடவும். கேனை ஒரு தொட்டியில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றவும்.
அடிப்பகுதியில் இருக்கும் துளைகள் வழியே தண்ணீர் வெளியே வருவதைப் பார்க்கலாம். காற்று அழுத்தத்தைப் பயன்படுத்தி தண்ணீர் வெளி யேறுவதை நிறுத்த முடியுமா என்று பார்ப்போம்.
கேனின் மூடியைப் பொருத்தவும். அப்போதும் தண்ணீர் அடிப்பகுதியில் இருந்து வெளியே வந்து கொண்டிருக்கும். மூடியில் இருக்கும் துளையை உங்கள் விரலைக் கொண்டு மூடவும். இப்போது தண்ணீர் அடிப்பகுதியில் இருந்து வெளியே வருவது நின்றுவிடும். இப்போது விரலை எடுத்துவிட்டால் மறுபடியும் அடிப்பகுதியில் இருந்து தண்ணீர் வெளியே வரும்.
நீங்கள் விரலை எடுத்துவிடும்போது மேல்ப்புறத் துளையின் வழியாக காற்று வேகமாக கேனுக்குள் நுழைவதால் காற்றின் அழுத்தத்தால் தண்ணீர் அடிப்பகுதி துளைகள் மூலம் வெளியேறுகிறது. நீங்கள் விரலைக் கொண்டு மேல்ப்புறத் துளையை மூடிக்கொள்ளும்போது, கேனுக்குள் காற்று செல்வது தடைப்படுவதால், அடிப்பகுதித் துளைகள் மூலம் தண்ணீர் வெளியேறுவதில்லை.
(நன்றி: இக்பால் அப்துல் தலாய்த் கல்வி அலுவலர், கோவா அறிவியல் மய்யம்)
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்