பிரபஞ்ச ரகசியம் – 12
விண்மீன் மண்டலம் சென்டாரஸ்
– சரவணா இராஜேந்திரன்
வானத்தைப் பற்றிய உண்மை தெரியாத ஆதிமனிதர்கள் அதனை ஒரு மூடிய ஓடு என்று தவறாகக கணக்கிட்டனர். மேலும் பல கதைகளை வானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தனர். மனிதர்கள் சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதத் தொடங்கினர். அப்போது தன்னுடைய மூதாதையரின் கற்பனைகளை அப்படியே எழுதிவைத்தனர்.
அவைதான் மதநூல்களில் காணப்படும் வானம் பற்றிய கற்பனைக் கதைகள். எல்லா மத நூல்களிலும் வானம் சாதாரணமான ஒன்றாகவே எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மத்திய ஆசிய மதநூல்கள் அனைத்தும் சூரியனை வெளிச்சத்திற்காகவும் நிலவினை இருட்டிற்காகவும் கடவுள் படைத்தார் என்கின்றன. இந்திய மதநூல்கள் வானத்தைப் பற்றி கற்பனையின் உச்சத்தைத் தொடும் வகையில் விதவிதமான கதைகளை எழுதியுள்ளன.
இயற்கையின் மாற்றங்கள் அனைத்தையும் கடவுள்செயல், கடவுள் என்று இந்துமதம் கூறுகிறது. கோள்களை கடவுள் என்று கூறினார்கள் இதில் சூரியனும் தப்பவில்லை. இந்து மத நூல்களில் சூரியனும் ஒரு கோள் என்றுதான் கூறியுள்ளார்கள். ஆனால், உண்மையில் சூரியன் ஒரு விண்மீன் என்று பிற்காலத்தில் சான்றுகளுடன் உண்மையை உலகிற்குக் கூறிவிட்டார்கள். இன்று நாமே கண்கூடாகப் பார்த்துவருகிறோம்.
இன்றும் மதநூலில் சூரியன் கோள் என்றுதான் உள்ளது. அதை நம்பிக்கை என்ற பெயரில் மெத்தப்படித்தவர்களும் தங்களது பட்டறிவைக்கூட பொருட்படுத்தாமல் சூரியனைச் சிலையாக வடித்து அதற்கு பூசை செய்து வருகிறார்கள். அறிவியல் வளராத காலத்தில் கற்பனையாக வைத்ததை. இன்றும் நம்புகிறார்கள்.
வாருங்கள் நாம் அறிவியல்படி வானத்தைப் பார்ப்போம்!
விண்மீன்கள் காலம் முழுவதும் கண்டுபிடிக்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. காரணம், அதிக தொலைவில் உள்ளதால் அவற்றின் ஒளி நம்மை நோக்கிப் பயணித்துக் கொண்டே உள்ளது.
ஆகவே எல்லா நாளும் புதிய விண்மீன்கள் நம் கண்களுக்குத் தோன்றிக்கொண்டேதான் இருக்கினறன, புதிய விண்மீனைக் கண்டுபிடிக்க நமக்குத் தேவையானவை: நவீன தொலைநோக்கி, விண்மீன்கள் பற்றிய அறிவு, இயற்பியல் ஆசிரியர் மற்றும் வானியல் அறிஞர்களின் ஆலோசனை மற்றும் விண்மீன் குழுமங்களைப் பற்றிய அறிவு.
எல்லாவற்றையும்விட தெளிவான வானம் தேவை. நாம் வானத்தின் விண்மீன் குழுமம் கொண்ட ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அந்தப் பகுதியை நாள்தோறும் இரவு நேரம் ஒதுக்கி தொலைநோக்கி வழியாகப பார்க்கவேண்டும்.
சில நாட்களில் நாம் பார்த்த இடத்தில் சில அல்லது பல விண்மீன்கள் தெரியும். அவறறை உடனே புதிய விண்மீன் என்று கருதிவிடக்கூடாது, அவை பிம்பங்களாக இருக்கலாம், அல்லது ஒளிச்சிதறல்களின் மூலம் விண்மீன் போன்றே தோற்றமளிக்கும் ஒன்றாக இருக்கலாம். எனவே அப்படித் தோன்றியவைகளை பல ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.
முதலில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் விண்மீனை அதன் தானாகஒளிவிடும் தன்மை, அதன் அருகில் உள்ள பொருட்களை ஈர்க்கும் குணம், அவை ஒற்றைப்படை விண்மீன்களா அல்லது அதன் ஜோடி விண்மீன் எதுவும் உள்ளதா, அவற்றைச்சுற்றி கோள்கள் எதுவும் இயங்குகிறதா என பல்வேறு ஆய்வுகளைக் கோளரங்க அறிஞர்களின் உதவியுடன் மேற்கொள்ளவேண்டும்.
அதன் பிறகு அவர்கள் பல்வேறு விண்ணியல் ஆய்வாளர்களுடன் கலந்து முடிவிற்கு வந்து புதிய விண்மீன் கண்டுபிடிப்பை உலகிற்கு அறிவிப்பார்கள்
கண்டுபிடித்த விண்மீன்களுக்குப் பெயரிடும் முறை
புதிய விண்மீன்களை அவை விண்மீன் என்று உறுதிப்படுத்தப்பட்டதும் அவற்றின் ஒளிவிடும் திறனை வைத்து அவற்றை ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, எப்லாஸ் என கிரேக்க முறையில் குறியீடாக வைப்பார்கள்.
கண்டறியப்பட்ட நேரம், தேதி, ஆண்டு குறிப்பிட்டு பெயர் சூட்டுவார்கள். எடுத்துக்காட்டாக 2012-ஆண்டு, மே மாதம், 8-ஆம் தேதி ஒரு விண்மீனைக் கண்டறிந்தார்கள் என வைத்துக்கொள்வோம். அந்த விண்மீன் ஒளிவிடும் திறனைக் கணக்கிட்டு ரகம் பிரிக்கப்படும், பிறகு மே மாதத்தைக் குறிக்கும் வகையில் ’M’ என்றும், தேதியைக்குறிக்கும் வகையில் ’8’ என்றும் பெயர் சூட்டுவார்கள். அதாவது அதிக ஒளியுடைய விண்மீனாக இருந்தால் αM812 என பெயர் வைப்பார்கள், எந்த மண்டலத்திற்கு அருகில் உள்ளது என்பதையும் குறிப்பிடுவார்கள்
இறுதியில் அவற்றிற்கு ஏதாவது அறிஞர் பெயர் அல்லது கண்டுபிடித்தவர் பெயர் அல்லது கிரேக்க புராணங்களில் உள்ள கடவுள் பெயர், பிறமொழிகளில் உள்ள வித்தியாசமான உச்சரிப்புக்கொண்ட பெயர் போன்ற ஏதாவது ஒன்றை வைப்பார்கள்,.
சென்டரி வகை குழுமத்தில் உள்ள மிகவும் பிரகாசமான ஆல்பா சென்டரி விண்மீனிற்கு ரெஜில் செண்ட் என்று பெயர். இதில் ரெஜில் என்பது அரபிச்சொல். அதன் பொருள் வெளிச்சமான என்பதாகும், அடுத்து உள்ள செண்ட் என்பது அந்த மண்டலத்தின் பாதிச்சொல் ஆகும்.
மண்டலங்கள்
ஒரு நட்சத்திரத்தைக் கண்டறிந்தாகிவிட்டது. அதற்குப் பெயர் வைத்துவிட்டோம். இப்போது அதன் இருப்பிடத்தை எப்படி குறிப்பிடுவோம். இதற்காக மண்டலங்களைக் குறியீடாக வைத்தனர். இதைத் தூயதமிழில் உடுமண்டலம் என்று அழைப்பார்கள்.
செண்டாரஸ் மண்டலம்
தமிழகத்தில் எந்த இடத்தில் இருந்தும் வானத்தைப் பார்த்தால் தென்திசையின் மத்தியில் கீழ்வானத்தில் சிலுவை அடையாளத்தைப்போன்று நான்கு நட்சத்திரங்கள் தென்படும்.. இவற்றை தென்சிலுவை விண்மீன் என்று அழைப்பார்கள். இந்த தென்சிலுவையைச் சூழ்ந்து மூன்று பக்கமும் வளைந்து காணப்படுவது செண்டாரஸ் குழுமம் ஆகும். செண்டாரஸ் என்பது கிரேக்கத்தில் குதிரை உடலும் மனிதத்தலையும் கொண்ட ஒரு புராணக்கதை வீரனைக் குறிக்கும் வார்த்தை ஆகும்..
இந்த நட்சத்திர மண்டலத்தில் ஒளிவீசும் திறன்கொண்ட 10 விண்மீன்கள் உள்ளன. அவை ஆல்பா சென்டரி, பீட்டா சென்டரி, காமா சென்டரி, டெல்டா சென்டரி போன்ற விண்மீன்களுடன் பிராக்ஸிமா சென்டரி என்ற விண்மீனும் காணப்படுகிறது, மேலும் உறுதிசெய்யப்படாத நூற்றுக்கணக்கான விண்மீன்கள் உள்ளன.
நமது சூரியனுக்கு அருகில் உள்ள சென்டரி மண்டலத்தின் விண்மீன்கள் அனைத்தும் மிகவும் வெளிச்சத்துடன் சாதாரணமாகப் பார்க்கும் போதும் நமது கண்களுக்குத் தெரிபவை. இதில் பிராக்ஷிமா மற்றும் இரட்டை நட்சத்திரங்களான ஆல்பா பீட்டா என்ற விண்மீனகள் நமக்கு மிகவும் அறிமுகமானவை.
இதில் ரிஜில் சென்ட் (ஆல்பா சென்டரி)விண்மீனின் ஒளிவீச்சு அளவில் -0.27 என்று அளவிடப்படுகிறது. அறிவியல் அளவில் ஒளிவீச்சைப் பொலிவெண் என்று கணக்கிடுவர். ஆகையால் நாம் இவற்றை பொலிவெண் என்றே கூறுவோம். பெரிய வகுப்பிற்கு நீங்கள் செல்லும் போது உங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அடுத்து ஹதார் என்ற பீட்டா சென்டரி, இதன் பொலிவெண் 0.63, இதனை அடுத்து வருவது பிராக்ஸிமா செண்டாரி, இதன் பொலிவெண் 10.7 ஆகும்.
ஆல்பா மற்றும் பீட்டா விண்மீன்கள் நமது அறிவியலாளர்களை மிகவும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது. இயற்பியல் விதிப்பதி அதிக ஈர்ப்புள்ள விண்மீன்களுக்கு அருகில் அதிக ஈர்ப்புள்ள விண்மீன் ஒன்று இருந்தால் வலுவான ஈர்ப்புள்ள விண்மீன் மற்றொன்றைத் தன்னுள் ஈர்த்துவிடும்.
ஆனால் இரண்டும் சமபலமாக ஒன்றை ஒன்று எதிர்விசையில் சுற்றிவருவதால் இதன் ஈர்ப்பாற்றல் குறித்த ஆய்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வாளர்களின் வியப்பிற்கு மேலும் ஒரு காரணம், பீட்டா விண்மீன்களை சில கோள்கள் சுற்றிவருகின்றன.
இரண்டு பிரமாண்ட விண்மீன்களின் ஈர்ப்பு விசைக்கு இடையில் கோள்கள் சுற்றுகிறது என்றால் கோள்களின் நிலைத்திறன் குறித்த ஆய்வும் நடந்து வருகிறது. ஆல்பா பீட்டா இரண்டு விண்மீன்களின் ஈர்ப்புவிசையால் நமது சூரிய மண்டலத்திற்கு ஏதேனும் பாதிப்பு உண்டா என்பது பற்றிய ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த இரட்டை வகை விண்மீன்களை பைனரி விண்மீன்கள் என்ற அடையாளத்துடன் அழைப்பார்கள்.
காலம்
வேகத்தை குறிப்பிடும் அளவு.
பெருவெளியில் காலம் (Time) என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுவரை நமக்குத்தெரிந்த கால அளவு என்பது வினாடியில் தொடங்கி மணிநேரத்தில் முடியும். 24 மணிநேரம் ஒரு நாள், ஏழு நாட்கள் கொண்டதை வாரம், 30 நாட்கள் கொண்டதை மாதம், 12 மாதங்களை ஓர் ஆண்டு என குறிப்பிட்டுள்ளோம்.
மற்றோர் அளவீடு தூரம் அல்லது தொலைவு
தூர அளவை அக்காலத்தில் மைல் அல்லது கல் தொலைவு என்பார்கள். புள்ளியியல் கணிதம் வளர்ச்சி அடைந்த பிறகு கிலோமீட்டர் என்ற அளவைக் கொண்டுவந்தார்கள் இதனை கிலோமீட்டர் / வினாடி km/s
கிலோமீட்டர் / மணி km/h குறிப்பிடுவர்.
1. நிலத்தில் ஓட்டக்கூடிய அதிகபட்ச வேகம் 763 km/h
அதாவது ஒரு மணிநேரத்தில் 763 கிலோமீட்டர் தூரம் சென்றுவிடும்
2. ஜெட் விமானத்தின் வேக சாதனை2,194 km/h
3. விண்கலத்தின் வேகம் 17,500 km/h
4. பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 25,000 km/h சென்றுவிடும்.
தூரத்தில் உள்ளவற்றை கிலோமீட்டர் வேகத்தில் குறிக்கிறோம். எடுத்துக்காட்டாக தஞ்சையில் இருந்து சென்னை 325 கிலோமீட்டர் உலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் ஜப்பானின் புல்லட் ரெயில் மணிக்கு 575 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. அப்படியென்றால் அந்த ரெயில் நமது தமிழகத்தில் ஓடினால், தஞ்சையில் இருந்து சென்னைக்கு அரைமணிநேரத்திற்குள் வந்துவிடலாம்.
இதுவரை நாம் நமது பூமியில் உள்ள வேகத்தின் அளவை எடுத்துக்காட்டாகப் பார்த்தோம்.
அப்படியென்றால் விண்மீன்களின் தொலைவை எத்தனை கிலோமீட்டர் அளவில் குறிப்பிடலாம் என்றால் அது முடியாத காரியம். விண்மீன்களின் தூரம் கிலோமீட்டர் அளவையில் அடங்காது. அவை மிகவும் அதிக தொலைவில் உள்ளன. ஆகையால் விண்மீன்களின் தூரங்களைக் கணக்கிட நமது அறிவியலாளர்கள் ஒளியாண்டு அளவில் குறிப்பிட்டுள்ளனர்.
ஒளியாண்டு என்றால் என்ன?
நமது கையில் உள்ள டார்ச் சுவிட்சைப் போட்டதும் அதில் இருந்து புறப்படும் வெளிச்சம் எவ்வளவு வேகத்தில் பாய்கிறதென கவனித்திருக்கின்றீர்களா?
ஆம் வெளிச்சம் ஒரு வினாடிக்கு 2,99,792(இரண்டு லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து எழுநூற்றி தொண்ணூற்றி இரண்டு) கிலோமீட்டர் தூரம் சென்று விடுகிறது.
ஒரு மணி நேரத்திற்கு 6 லட்சம் கோடி மைல்களைக் கடந்து விடுகிறது.
இந்த வெளிச்சம் ஓர் ஆண்டிற்கு எவ்வளவு தூரத்தைக் கடக்கிறதோ அதைத்தான் ஒரு ஒளியாண்டு என்று நாம் கணக்கிடுகிறோம். பூமிக்கு மிகவும் அருகில் உள்ள சந்திரனில் இருந்து வரும் ஒளி நம்மை ஒரு வினாடிகளில் வந்தடைந்து விடுகிறது.
சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 238,854 கிலோமீட்டர் ஆகும்
சூரியனில் இருந்து வரும் ஒளி நம்மை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகிறது. இந்த ஒளிவேகத்தின் அடிப்படையில் நமது சென்டரி மண்டலத்தில் உள்ள விண்மீன்களின் தொலைவு 4 ஆண்டுகள் ஆகும்.
அதாவது அவற்றின் ஒளி நம்மை வந்தடைய ஆகும் ஆண்டுக்காலம் ஆகும், பிராக்ஸிமா சென்டரியின் ஒளி நம்மை வந்தடைய எடுத்துக்கொள்ளும் ஆண்டு 4.28, அதே போல் ஆல்பா சென்டரி 4.3 பீட்டா 4.90 ஆண்டுகள் பயணித்து நம்மை வந்து அடைகிறது.
நாம் இன்று இரவு பார்க்கும் ஆல்பா பீட்டா சென்டரி விண்மீன்களின் ஒளி 4 வருடங்களுக்கு முன்பு புறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. பிரபஞ்ச இரகசியத்தின் அடுத்த தொடரில் இராசி என்று சொல்லி ஜோதிடர்கள் ஏமாற்றும் விண்மீன் மண்டலங்களை அருகில் சென்று காணலாம்-.
– தொடரும்
உலகில் மிகவும் அதிக வேகத்தில் செல்லக்கூடியது ஒளி ஆகும். தற்போது நியுட்ரினோ துகள்கள் ஒளியைவிட அதிக வேகத்தில் பயணிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.