சாலை விதிகளைச் சற்றும் மீறோம்!
இழப்புகளில் இருவகையுண்டு. பல இழப்புகள் ஈடுசெய்யக் கூடியவை. மீண்டும் உருவாக்கம் பெறக்கூடியவை. சில இழப்புகள் ஈடுசெய்யவோ, மீண்டும் உருவாக்கவோ இயலாதவை. குறிப்பாக உயிரிழப்பு என்பது மீண்டும் பெற இயலாதது; இழந்தால் இழந்ததுதான். எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு பொருட் செலவிட்டாலும் மீண்டும் உயிரைப் பெற முடியாது!
மருத்துவமும் விழிப்பும் போதிய அளவு இல்லாத காலத்தில், கொள்ளை நோய்கள் தாக்குதலால் மனிதர்கள் மாண்டனர். ஆனால், மருத்துவ வளர்ச்சி, விழிப்புணர்ச்சியின் விளைவாய் கொள்ளை நோய்கள் தற்போது அறவே ஒழிக்கப்பட்டு, அவற்றால் இறப்பே இல்லை என்ற நிலை வந்துள்ளது.
ஆனால், இன்று விபத்தில் மாள்வோர் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக, சாலை விபத்துகள் அன்றாட நிகழ்வாகவும், அதிகம் நிகழ்வதாகவும் ஆகிவிட்டன.
சாலை விபத்துகள் இருதரப்புப் பொறுப்புடையது. நாம் சரியாக நடந்தாலும், அடுத்தவர் விதிகளை மீறினால் பாதிப்பு நமக்கும் ஏற்படும். எனவே, சாலையில் நாம் சரியாகச் செல்வதோடு, மற்றவர்களும் சரியாகச் செல்வதற்குரிய விழிப்புணர்ச்சியையும், பொறுப்புணர்ச்சியையும் உருவாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். சிறுவயதிலேயே சாலை விதிகள் சரியாகக் கற்பிக்கப்பட வேண்டும்; கடைபிடிக்கப்பட வேண்டும்.
தூக்கமின்மை, மதுமயக்கத்தில் ஓட்டுதல், தள்ளாடி நடத்தல், அதிவிரைவு வாகனங்களை முறையாகப் பழுது பார்த்துப் பராமரிக்காமை, சாலை விதிகளை மீறல், பேசிக்கொண்டே ஓட்டுதல், முந்திக் செல்ல முற்படுதல், பதற்றம், காலம் கடந்து பயணித்தல், சாகசம் செய்ய முற்படல் போன்றவையே விபத்துகளுக்கான முதன்மைக் காரணங்கள்.
விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பது. ஆனால், இன்று நடக்கும் பல விபத்துகள் எதிர்பார்த்து நடப்பவையே! காரணம், தெரிந்தே செய்யும் தவறுகள்.
சாலை விதிகளைச் சரியாகப் பின்பற்றி நடப்பது போலவே, காப்பு நடவடிக்கைகளும் கட்டாயம் தேவை. தலைக்கவசம் அணிதல், கண்ணாடி அணிதல், இடுப்புப் பட்டை கட்டிக் கொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்க்கக் கூடாது.
சிறிது தூரந்தானே! சென்று வந்துவிடுவோம் என்று மேற்கண்டவற்றைத் தவிர்ப்பது, உயிருக்கு அழிவைத் தருகிறது. விபத்து என்பது நொடிப்பொழுதில் நடப்பது. எனவே, குறைந்த தூரம், நெடுந்தூரம் என்று பிரித்துப் பார்ப்பது தவறு.
ஒருவரை வளர்த்து உருவாக்க பெற்றோரும் மற்றோரும் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அத்தனை உழைப்பையும், உருவாக்கத்தையும் ஒரு நொடியில் நொறுக்கலாமா? இழக்கலாமா? விழிப்புடனும், விதிமுறைப்படியும் நடந்தால் விபத்துகளைத் தவிர்க்க முடியும்.
பெரியார் பிஞ்சு இதழைச் சிறப்பாக நடத்த பெருந்துணையாய் உழைத்த பெரியார் சாக்ரடீசு என்ற ஒப்பற்ற உழைப்பாளியை, ஆற்றலாளரை, உண்மைத் தொண்டரை, சாலை விபத்து பறித்துக் கொண்டதை எல்லோரும் பாடமாகக் கொள்ள வேண்டும்.
அவரது இழப்பால் நாம் எச்சரிக்கை பெறுவதே அவருக்கு நாம் செலுத்தும் நன்றி, மரியாதை, வணக்கம் எல்லாம். சாலைவிதிகளை பிஞ்சுகள் பிறழாமல் பின்பற்ற வேண்டும் என்பதே அவர் இழப்பு நமக்குத் தரும் பாடம்!