நான் அருண் பேசுகிறேன்(2)
இது என்னடா இங்கயும் வந்து பாடம் படிக்கப் போறோமான்னு பயந்துட்டேன். அப்புறம்தான் அன்புராஜ் மாமா சொன்னாங்க, நான் விளையாட்டுக்குச் சொன்னேன். நீங்க நிறைய விளையாடப் போறீங்க. விளையாட்டோட நிறைய கத்துக்கவும் போறீங்கன்னு.
அப்புறம் அந்த கடல் பூதம் நாடகம் நல்லா இருந்துச்சு. நான் நல்லா சிரிச்சேன்.
அதுக்குள்ள ஒவ்வொருத்தரும் நிறைய்ய… நண்பர்களைப் புடிச்சிட்டாங்க. எனக்கு அப்படி எதுவும் இல்லை. என் அறை நண்பர்கள் கூட என்னோட விளையாடறாங்களா, கிண்டல் பண்றாங்களான்னு தெரியல. ஆனா வடிவேலு மாமா சொல்றாரு. அது வெறும் விளையாட்டுதான். அவங்களோட சேர்ந்து, என்னையும் விளையாடச் சொன்னாரு.
இதெல்லாம் அறையில்தான், வெளிய, நிறைய…. விளையாட்டு, நான் இப்படியெல்லாம் விளையாண்டதே இல்லை. அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேன். இரவு நான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். கருப்புச் சட்டை போட்டுக்கிட்டு ஒரு தாத்தா வந்தாரு. அவரு பெரிய…. ஆளு போலிருக்கு, அந்தத் தாத்தா என்கிட்ட வந்து குனிஞ்சு, என் பேரு கலி.பூங்குன்றன்.
உங்க பேரு என்னன்னு கேட்டாரு. நானும், அருண்னு வெட்கத்தோட சொன்னேன். முழுப் பேரையும் சொல்லுங்கன்னு சொன்னாரு. நானும், அருண்மொழிப் பாண்டியன்னு சொன்னதும், திடுக்கிட்ட மாதிரி உடம்ப அசைச்சுக்கிட்டாரு. எனக்கு வெட்கத்தோட சிரிப்பும் வந்திருச்சு. அந்தத் தாத்தா என்கிட்ட ஒரு விடுகதை சொன்னாரு.
அது என்னன்னா…. கழுதைக்குப் பிடிச்ச ரொட்டி எது? என்பதுதான் அது. பிறகு அவரே, இப்ப வேணாம். பதில் நாளைக்குச் சொல்லுன்னு சொல்லிட்டு, என் கன்னத்தை மெல்லத் தட்டிட்டுப் போயிட்டாரு. எனக்கு இன்னொன்று தோனுச்சு. இங்க இருக்கிறவங்க எல்லாருமே நல்லவங்கன்னு பட்டுச்சு.
அப்புறம்… எங்க அறைக்குப் போய், கருப்புச் சட்டைத்தாத்தா சொன்ன விடுகதையைச் சொல்லி, அறை நண்பர்களோட விடை கண்டுபிடிக்க முயற்சி செஞ்சோம். ஆளாளுக்கு ஒன்னு சொல்லி, சிரிச்சுச் சிரிச்சு ஓஞ்சுட்டோம். கடைசியா விடையும் கண்டுபிடிச்சிட்டோம். அந்த குண்டுப்பையன் இளைய மாதவன்தான் பேப்பர் ரோஸ்ட்னு சொன்னான்.
ஒருவழியாக கழுதைக்குப் பிடிச்ச ரொட்டி சுவரொட்டின்னு கண்டுபிடிச்சிட்டோம். ஆனந்தமாக இருந்துச்சு. ம்…. அப்புறம்… எங்களோட அறையிலேயே ஒரு வாத்தியார் எங்களைப் பார்த்துக்கறதுக்காகவே தங்கிட்டாரு. அவரும் ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு ஒரு கையேடு குடுத்தாங்க. அதுல அன்றன்று நடந்ததைப்பத்தி வீட்டுப்பாடம் எழுதணும். வடிவேலு மாமா இரவு தினமும் வந்து எழுதச் சொல்வாரு. பசங்களும் அரட்டை அடிச்சுக்கிட்டே எழுதினோம். ஆனந்தமா இருந்துச்சு. எனக்குக் கொஞ்சம் கொஞ்சமா அம்மா அப்பா நினைவு குறைஞ்சது. ரவுண்ட்ஸ் வந்த மாமா கூட அப்பாவுக்கு போன் போட்டுத் தந்தாரு. என்னமோ தெரியல. எனக்கு அழுகையே வரல. அம்மாகிட்ட பேசும்போது கூடத்தான்.
இப்படித்தான்…. ஒருநாள் அரண்மனைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அம்மா நினைவு வந்து வந்து போயிட்டு இருந்துச்சு. அப்புறம் அரண்மனை அருங்காட்சியகம் அப்புறம் நீச்சல்குளம். என்னால நம்பவே முடியல. நிறையத் தண்ணீர். எனக்குத்தான் உள்ள இறங்கவே பயமா இருந்துச்சு. கூட இருந்த பிரின்சு மாமா, சிவ. வீரமணி தாத்தா யார் யாரோ சொல்லிப் பார்த்தாங்க.
நான் பிடிவாதமா மறுத்துட்டேன். ஆனாலும், உள்ளுக்குள்ள ஆசை அப்…படியிருந்துச்சு. நான் இந்த மாதிரிப் போனதுமில்ல. வந்ததுமில்ல… அவங்க கண்ணாலேயே சைகை பண்ணிக்கிட்டாங்க. எனக்குப் புரியல.
எனக்கு எப்படித்தான் தோனுச்சோ தெரியல. உயரத்துல இருந்து நீச்சல் குளத்துக்குச் சறுக்கிட்டு வர்றதுக்குப் போயிட்டேன். கீழே தண்ணியில விழுந்தா யார் என்னைப் புடிச்சுப்பான்னு பயமா இருந்துச்சு, எப்படித்தான் வடிவேலு மாமா என்னைக் கண்டுபுடிச்சாருன்னே தெரியல.
அவரு என்னப் போல உள்ள பசங்களோட தண்ணிக்குள்ள விளையாண்டுக்கிட்டு இருந்தாரு. நான் சறுக்கிட்டு வர்றதப் பார்த்து, ஹேய்,,,!-ன்னு கையை ஆட்டிக்கிட்டு வேகமாக வந்து நான் தண்ணிக்குள்ள விழுந்து முங்குன உடனே, சட்டுன்னு இரண்டு கையாலயும் என்னைத் தூக்கிட்டாரு. நான் கண்ணு முழிச்சுப் பார்த்தேன். என்னால நம்பவே முடியல.
இப்படி எனக்குள்ள இருக்கிற ஒவ்வொரு தயக்கங்களும் விடுபட்டுக்கிட்டே இருந்துச்சு. ம்….அப்புறம் மறந்துட்டேன். என்கிட்ட விடுகதை சொன்னாருல்ல அவரு பேரு கவிஞர் தாத்தாவாம். எல்லாரும் அப்படித்தான் பேசிக்கிட்டாங்க, அவரு வகுப்பு நல்லா இருந்துச்சு. தீபாவளி புராணக்கதை, ம்…. அப்புறம், ஆயுதபூஜையைப்பத்தி, அப்புறம் பொங்கல், Harvest Festival, புள்ளையார் கதை, பெரியார் பத்தி இடையிடையே விடுகதை, புதிர், விடைன்னு நல்லா இருந்துச்சு.
எதைச் சொல்றது எதை விடறதுன்னே தெரியல…. நெறைய மனசுல இருக்கு. அதையெல்லாம் சொல்றதுக்கு நேரம் இல்ல. ஆனா, நான் இப்ப புதுசா உணர்றேன். என்னுடைய நட்பு வட்டம் பெருகியிருக்கு. ம்…. இன்னும் ஒரு முக்கியமான விசயம்…. உணவு ரொம்ப நல்லா இருந்துச்சு. எனக்குக் குடுத்த கையேட்டுல, இன்றைய உணவு எப்படி இருந்ததுன்னு ஒரு கேள்வி இருக்கும்.
நான் “very good” – ன்னு எழுதி வைச்சேன். எல்லா பசங்க மாதிரியும், வீரமணி தாத்தா முன்னாடி எந்திரிச்சு மைக்ல பேசணும்னு எனக்கும் ஆசையா இருந்துச்சு. எனக்கு முன்னபின்னப் பழக்கம் இல்லாததுனால, கடைசி வரைக்கும் பேசவே முடியல. பெரியார் தாத்தா என்ன சொல்லியிருக்காரு, செஞ்சிருக்காருன்னு தெரிஞ்சதைச் சொல்லுங்கன்னு வீரமணி தாத்தா கேட்டாரு.
வடிவேலு மாமா கூட்டத்தோட கூட்டமா எங்கிட்ட உட்கார்ந்து மெலிசா என் காதுல, மானமும் அறிவும் மனிதருக்கு அழகுன்னு பெரியார் சொல்லி இருக்காருன்னு சொல்றியான்னு ஆசையாக் கேட்டாரு. ஏன்னே தெரியல…. என்னோட தயக்கத்த உடனே உதற முடியல. என்னைப் போல உள்ள பசங்க எல்லாம் டக்கு டக்குன்னு பேசறாங்க. ம்… அப்புறம் வீரமணி தாத்தா கூட எங்க எல்லாரையும் பெரியார் பிஞ்சுன்னு சொன்னாங்க, அவரு பேசவே இல்லை. எங்களைப் பேசச் சொல்லி ரசிச்சாரு.
எப்படா வீட்டுக்குப் போவோம்னு தொடக்கத்தில இருந்துச்சு. ஆனா, வரவர வீட்டுக்குப் போகணுமேன்னு இருந்துச்சு. கடைசி நாளைக்கு முன்னாடி இரவுல எங்க அறையில், ஒரே கும்மாளமா இருந்துச்சு. எல்லோரும் பவுடரைப் பூசி விளையாடினாங்க… வடிவேலு மாமா வந்தாரு. அவரும் சேர்ந்து விளையாட ஆரம்பிச்சிட்டாரு… நானும் விளையாண்டு சிரிச்சிட்டு… அவரோட சேர்ந்து ரவுண்ட்ஸ் போகக் கிளம்பிட்டேன்.
எங்கெங்கு செல்கிறேனோ அங்கெல்லாம் எங்கள் அறைப்பக்கம் யாரும் சென்றுவிட வேண்டாம் என்று எச்சரித்தேன். பிறகு, ஒரு கட்டத்தில் என்ன தோனுச்சுன்னு தெரியவில்லை. இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பெரியார் பிஞ்சு பழகு முகாம் என்று கத்தினேன்.
வடிவேலு மாமா கூட ஆச்சர்யமாய் பார்த்துவிட்டு, அவரும் அப்படியே கத்தினார். எனது ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இத்தனை காலமும் இந்த ஆனந்தம், எனக்குள்ளே எங்கேதான் இருந்ததோ…. நான் மட்டும் அல்ல…. நான் பார்க்கும் எல்லா பிஞ்சுகளும் இப்படித்தான் இருக்கின்றனர். எப்படியோ அன்றைக்கு இரவு தூங்கினோம்.
காலையில், உணவுக் கூடத்தில் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருவர் என்னை மிகவும் ஈர்த்துவிட்டார். எனது அப்பாவைப் போலவே இருந்தார். எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. அவர் திரும்பி நின்றிருந்தார். அவரருகே சென்று தொட்டுத் திருப்பினேன். திரும்பியதும் அவரும் ஆச்சர்யப்பட்டார்.
நான், நீங்கள் பார்ப்பதற்கு என் அப்பாவைப் போலவே இருக்கிறீர்கள் என்றேன். அவர் வெடித்துச் சிரித்து விட்டார். அருண், நான் உங்கப்பாதான், உன்னை அழைத்துப் போவதற்காக வந்திருக்கிறேன் என்று கூறினார்.
ஆனந்தமும், சோகமும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது. அம்மா, அப்பா, வீடு, சென்னை எல்லாமே வேணும்தான். ஆனால்…., பழகு முகாம்…. இந்த நண்பர்கள்… இந்தச் சூழல்… இந்தக் கட்டுப்பாடுகளோடு கூடிய சுதந்திரம்…. புத்தறிவு…. இதுவுந்தான் வேணும். நீண்ட பெருமூச்சுதான் வந்தது.
பிறகு, வடிவேலு மாமா வந்தார், எனது அப்பாவோடு உணவு உண்டார். என்னிடம் மகிழ்ச்சியாகப் பேசினார். என்னைப் பழகு முகாமிலிருந்து முறைப்படி விடுவித்து எனது அப்பாவிடம் ஒப்படைத்தார். இதோ! இப்போது சென்னைக்குப் பேருந்தில் சென்று கொண்டிருக்கிறேன். சென்னையைவிட்டுப் பிரிந்து வரும்போது இருந்த துன்பத்தைவிட, இந்தத் துன்பம் கடுமையாக இருந்தது.
இந்த முறை எனது அப்பா வற்புறுத்தி இங்கு அழைத்து வந்தார். அடுத்தாண்டு, நானே அப்பாவிடம் பழகுமுகாம் செல்கிறேன் என்று சொல்லப் போகிறேன். கவலையுடன் அசதியும் சேர்ந்து கண்களை அசத்த அப்படியே அப்பாவின் தோளில் சாய்ந்து… விட்…டே…ன்……!.
(இது ஒரு சோறு பதம்தான். பெரியார் பிஞ்சு பழகு முகாமுக்கு வந்த 209 பேருக்கும் இப்படி வித்தியாசமான ஒரு பயணம், ஓர் அனுபவம் இருக்கிறது.)
சத்தான உணவுகள்
காலை: பிரட், ஜாம், இட்லி, சட்னி, சாம்பார், கேப்பை புட்டு, பூரி, மசாலா, கேப்பை சேமியா இனிப்பு, பொங்கல், தோசை, கேப்பை தோசை, கார்ன்ஃபிளேக்ஸ் – பால், அவித்த முட்டை, ரவா தோசை, சாம்பார் வடை, அசோகா, ஆப்பம் – தேங்காய்பால், பிரட் உப்புமா, மசால் தோசை
மதியம்: புலவு, உருளைக் கிழங்கு வறுவல், காய்கறி குருமா, கோழி குருமா, சேமியா பாயசம், காய்கறி சாலட், தயிர் – வெங்காய – வெள்ளரி – கேரட் பச்சடி, சிப்ஸ், சோறு, சாம்பார், ரசம், தயிர், கீரை, கேரட் – பீன்ஸ் பொறியல், சேனை – பட்டாணி பொறியல், அரிசி பாயசம், அப்பளம், பலா, மாம்பழம், முட்டைக்கோஸ் பொறியல், சோறு – கோழி குழம்பு, சர்க்கரைப் பொங்கல், புதினா சோறு – வெங்காய பச்சடி, சாம்பார் சோறு, தயிர்ச்சோறு, மசால் வடை, கறி பிரியாணி, காய்கறி பிரியாணி, புளி கத்தரிக்காய், கேரட் பாயசம், அய்ஸ் கிரீம், பழ சாலட்.
இரவு: நூடுல்ஸ், தோசை, சட்னி, சாம்பார், தயிர்ச்சோறு, பாதாம்பால், இடியாப்பம் – தேங்காய்ப் பால், இட்லி, மசாலா பால், சப்பாத்தி, கொண்டைக் கடலை மசாலா, தக்காளி சட்னி, கொத்து பரோட்டா – குருமா, வெங்காய தோசை, குழிப் பனியாரம், கார அடை .
13-16 வயதினருக்கான பயிற்சிகள்:
உடற்பயிற்சி, யோகா, சிலம்பம், கராத்தே, ஏரோபிக்ஸ், ஓவியம், விவாதத் திறன், நூலகம், கணினி, தனித்திறன் பயிற்சிகள், சரிவிகித சத்தான உணவு பற்றிய விழிப்புணர்வு, போக்குவரத்து விழிப்புணர்வு, நேர-பண மேலாண்மை, இலக்கு நிர்ணயித்தல், உடல் நலன் பேணுதல், வளர் இளம்பருவ சிந்தனைகள் – சந்தேகங்கள், கோபம் – உளவியல் பிரச்சினைகளைச் சமாளித்தல், பெண்ணுரிமை, பாலியல் அறிவு, சுற்றுச்சூழல் மேம்பாடு, முதல் உதவி.