குறையை அக்கறையுடன் பார்
ஒரு காட்டில் இரண்டு கரடிகள் நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்று தங்கள் நட்பின் ஆழத்தை அனைத்து விலங்குகளுக்கும் புலப்படுத்தின. ஒரு நாள் இரை தேடிவிட்டு மலைப் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு கரடியின் மனதில், இந்த மலையின் உச்சிக்குச் சென்று மேலே நின்று சுற்றியுள்ள இயற்கையைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
உடனே, தன் நண்பன் கரடியிடம் தனது ஆசையைக் கூறியது. கேட்டதும் அந்தக் கரடிக்கும் மலை உச்சிக்குச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. தன் நண்பனைப் பார்த்து, சரி வா இருவரும் சேர்ந்து மலை ஏறிச் சென்று ரசிக்கலாம் என்றது.
மலை உச்சியைத் தொடும் ஆர்வத்தில் போட்டி போட்டுக் கொண்டு ஏறத் தொடங்கின. முதல் கரடி இரண்டாம் கரடியைப் பார்த்து, கொஞ்சம் மெதுவாகப் போ, விழுந்திடப் போற என்றது. இதனைக் கேட்ட இரண்டாம் கரடி, நீ முதல்ல வந்துடலாம்னு நினைக்கிறயா? என்றது. இல்லை இல்லை, உன் நல்லதுக்குத்தான் சொல்றேன் என்றது இரண்டாம் கரடி.
நண்பனுக்கு அறிவுரை கூறியதே தவிர, அதன் மனதினுள், தானும் வேகமாக ஏறி முதலில் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.
இரண்டு கரடிகளும் மிகவும் வேகமாக ஏறியதால் நிதானமிழந்து கீழே விழுந்தன. வலியால் துடித்து முனங்கின. நான் சொன்னதைக் கேட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா? என்று இரண்டாம் கரடி கேட்டது. என்னைச் சொல்லிவிட்டு நீயும் வேகமாகத்தானே ஏறின என்றது முதல் கரடி.
இருவர்மீதும் தவறு உள்ளதை உணர்ந்ததும் அடி பலமா பட்டிருக்கா என்றது முதல் கரடி. வலி தாங்க முடியலை, கண்ணில வேற அடிபட்டிருக்கு, ஒரு பக்கம் ஒன்னுமே தெரியலையே என்று முதல் கரடி கூறியதும், தனக்கும் அதேநிலைதான் என்றது இரண்டாம் கரடி.
உடல் காயத்தைக்கூட விரைவில் ஆற்றிவிடலாம். கண் பார்வை… என்று நா தழுதழுத்தது முதல் கரடி. இருக்கிற ஒரு கண் பார்வையில் சமாளிப்போம் என்றதும் எப்படிச் சமாளிப்பதாம்? எளிதில் சொல்லிட்ட என்றது முதல் கரடி.
வாழ்க்கையில எல்லாவற்றையும் எளிமையா எடுக்கக் கத்துக்கணும் என்று சொல்லிவிட்டு அதனதன் வேலைகளைச் செய்யத் தொடங்கின. நாள்கள் சென்றன. இரண்டாவது கரடி எப்போதும்போல மகிழ்ச்சியாக அனைத்து வேலைகளையும் செய்து வந்தது. அதன் மகிழ்ச்சியைப் பார்த்த இன்னொரு கரடி குமுறியது. தன் நண்பனைப் பார்த்து, உனக்கு 2 கண்களும் தெரிகிறதா? என்றது.
ஏன் அப்படிக் கேட்கிற? என்றதும், உன்னைப் பார்த்தால் ஒரு கண் தெரியாதது போலத் தெரியலையே என்றது. உடனே இரண்டாம் கரடி, உனக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் உள்ளது என்றது. என்ன வித்தியாசம் என்றதும், நீ உன் இழப்பை ஒவ்வொரு வினாடியும் கவலையுடன் பார்க்கிறாய். நான் என் இழப்பினை எப்படிச் சரி செய்வது என்ற அக்கறையுடன் பார்க்கிறேன் என்றது.
நான் கவலைப்படுகிறேனா? என்று முதல் கரடி கேட்டதும், ஆமா, உன் சோர்வுக்குக் காரணம் உனது கவலைதான் என்றது. எப்படிக் கவலைப்படாமல் இருப்பதாம் என்று முதல் கரடி கேட்டதும், கவலைப்பட்டாலும் கண் வரப்போவதில்லை. எனவே, என் செயல்கள் ஒவ்வொன்றையும் திட்டமிட்டுச் செய்கிறேன். எதிர்காலம்பற்றிச் சிந்திக்கிறேன்.
நம் இழப்பு, அதனால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சோகம், தோல்வி போன்றவற்றைக் கவலையுடன் பார்க்கக் கூடாது. அக்கறையுடன் பார்க்கப் பழகிக் கொண்டால் தடையிலிருந்து எளிதில் மீளலாம் என்றது.