நீர்யானை அம்பாரி
பேருந்து என்றாலே சாலையில் செல்வது என்றுதான் எல்லோரும் அறிந்துள்ளோம் _ பார்த்துள்ளோம். தண்ணீரில் செல்லும் பேருந்தைப் பார்த்திருக்கிறீர்களா?
கனடா நாட்டின் ஒண்டாரியோவில் உள்ள ஒண்டாரியோ ஏரியைச் சுற்றிப் பார்க்க படகு தேவையில்லை. கனடா நாட்டின் முக்கியமான இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அந்தப் பேருந்திலேயே ஒண்டாரியோ ஏரியைச் சுற்றிப் பார்க்கலாம்.
ஹரீய் ஹிப்போ என்ற நீரிலும் நிலத்திலும் செல்லும் பேருந்து (Amphibious bus) கனடா மக்கள் மத்தியில் மட்டுமல்ல, கனடாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளையும் கவர்ந்துள்ளது.
சாலையில் பேருந்தை ஓட்டுவதற்கு ஓட்டுநர் ஒருவர், ஏரியில் இறங்கிச் செல்லும்போது ஓட்ட திறமைமிக்க கேப்டன் ஒருவர் என 2 ஓட்டுநர்கள் உள்ளனர்.
சாலையில் பயணம் செய்யும்போது உள்ள சிக்னல்களைப் போலவே ஏரியில் பயணம் செய்யும்போது இதற்கு சில சிக்னல்கள் காட்டப்படுகின்றன. இந்தப் பேருந்துப் படகினருகில் படகு ஏதாவது பயணித்தால் அலையில் பேருந்து ஆடத் தொடங்கிவிடும். அப்போது பேருந்தில் பொருத்தப்பட்ட கருவி பேருந்தை மெதுவாக ஓட்டவும், நிறுத்தவும், திருப்பவும், பின்னால் செல்லவும் சைகை (Signal) தரும்.
ஆபத்து ஏதேனும் நேரிட்டால் உதவக்கூடிய அனைத்து உபகரணங்களும் பேருந்தின் மேற்புறம் பொருத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே இந்தப் பேருந்தில் பயணம் செய்ய இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
பெரியவர்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பில் 2500ம், சிறுவர்களுக்கு 1500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் 40 பேர்கள் பயணம் செய்ய முடியும்.
வார இறுதி நாள்களில் ஏரியில் விமானத்தை ஓட்டி மகிழும் வகையில் கனடாவில் உள்ள பணக்காரர்களிடம் ஏரியில் இறங்கி ஏறும் அளவுக்கு சிறிய ரக விமானங்கள் உள்ளன. படகுப் பேருந்துப் பயணம் வந்த பிறகு விமானங்கள் இறங்குவதையும் ஏறுவதையும் தடைசெய்து விட்டார்களாம்.