ரியோ பார்த்தியோ?
– பிஞ்சண்ணா
ரியோ பார்த்தீங்களா? ம்ஹூம்… உலகக் கோப்பை நடந்த ரியோ டி ஜெனிரோ நகரைச் சொல்லல… ரியோ நகரத்தில நடந்த மாதிரி எடுக்கப்பட்டு 2011-இல் முதல் பாகமும், இப்போ 2014 கோடை விடுமுறையில இரண்டாம் பாகமும் வந்திருக்கிற ரியோ படத்தைப் பார்த்திட்டீங்களான்னு கேட்டேன்.
முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில (3D) அனிமேசன்ல வெளிவந்திருக்கிற அட்டகாசமான படம் இது! காட்டில இருந்து சட்ட விரோதமா பிடிச்சு கடத்திட்டுப் போகப்படுற குட்டி மகாவ் (Macaw பல வண்ணக் கிளிகள்) கிளியான ப்ளூ என்ற ஆண் பறவை, வழியில தப்பி ரியோ நகரத்தில வசிக்கும் லிண்டாவால் வளர்க்கப்படுது.
அதுக்கு ஜோடியா பறவையியல் வல்லுநரான டூலியோவால் வளர்க்கப்படும் ஜுவல்ங்கிற பெண் பறவையையும் வச்சு முதல் பாகம் வெளிவந்தது. அந்தப் படம் நல்ல அளவு ரசிக்கப்பட்டதால இரண்டாம் பாகம் எடுத்து வெளியிட்டாங்க!
அதில ப்ளூவுக்கும், ஜுவல்லுக்கும் 3 குழந்தைகள் (அதாவது குட்டிக் கிளிகள்)! லிண்டா_டூலியோ ரெண்டு பேரும் அமேசான் காட்டில அரிய வகைக் கிளியான ஸ்னிக்ஸ் மகாவ் இருக்கிறதை தொலைக்காட்சியில சொல்றாங்க. இதைப் பார்த்துட்டு அமேசானுக்குக் குடும்பத்தோட கிளம்புறாங்க ஜுவல் குடும்பம். இதில ரொம்ப சுவாரசியமில்லாமல் போறது ப்ளு தான்.
ஏன்னா அது நகர வாழ்க்கைக்குப் பழகிடுச்சு. இயற்கையான அதன் இனத்தின் வாழ்க்கையை மறந்திடுச்சு. இவங்களுக்கு எதிரியா தன்னை நினைச்சுக்கிற நைஜல்ங்கிற காக்கட்டூ கிளியும், அதுக்கு நண்பர்களான எறும்பு தின்னியும், விஷத் தவளையும் கூடவே விரட்டிக்கிட்டு வருதுங்க.
இதுக்கிடையில, அமேசான் காட்டின் ஒரு பகுதியை அழிச்சு, அரிய உயிரினங்களையும், மரங்களையும் அழிக்கத் தயாரா இருக்கிற ஒரு கும்பல் லிண்டா_டூலியோ ரெண்டு பேரையும் புடிச்சுக் கட்டி வச்சிடறாங்க. நகர வாழ்க்கையை மறந்து இயற்கையோட ஒன்றிப் போக ப்ளூ படுற கஷ்டமும், காட்டைக் காப்பாத்துற முக்கியமும்தான் கதை.
அத்தனை கிளியினமும் சேர்ந்து கடைசியில நடத்துற சண்டை அபாரம்! இயற்கையைக் காப்பாத்த நாமும் அந்த மாதிரிதான் இப்போ போராட வேண்டியிருக்கு.
அதைத்தான் இந்தப் படமும் சொல்லுது. (அவதார் படம் இதை வேற மாதிரி எடுத்திருக்கும்.) படத்தின் நடுவில கிளிகள் எல்லாம் சேர்ந்து ஆடுற குழு நடனம் ரொம்ப சிறப்பு! கண்டிப்பா பாருங்க… ரசிங்க! இயற்கையைக் காப்பாத்தி அடுத்த தலைமுறைக்கு அதைக் கொடுக்கணும்ங்கிற உணர்வைப் பெறுங்க!