ஜெர்மனிக்கு வர்றீங்களா?
பாசத்திற்குரிய பேத்திகளே, பேரன்களே,
உங்களிடம் எழுத்தாடி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டதல்லவா? (உரையாடி என்பதை இப்படி மாற்றியுள்ளேன்; அது சரியோ தவறோ தெரியாது _ நீங்கள் புரிந்து கொண்டால் சரி. எனக்குப்பட்டது _ எழுதிவிட்டேன். தமிழ்ப் புலவர்கள் மன்னிப்பார்களாக!)
எனது ஜூன் மாத ஜெர்மன் பயணம் பற்றித் தொடங்கி, ஜெர்மனி நாடு எப்படி இருக்கிறது என்பதைக் கூறியிருந்தேன் அல்லவா?
நாங்கள் தங்கிய நகரம் கொலோன் என்ற பெரிய நகரம்.
ஜெர்மனியில் இந்த கொலோன் நகரம் ஒடிகொலோன் என்று அழைக்கப்படும் உடம்பில் தடவும் வாசனைத் தைலம் போன்ற ஒன்றுக்கு காலங்காலமாக புகழ்பெற்ற ஒன்று! உடலில் போட்டுத் தேய்த்தால் மணமாக இருப்பதோடு, கமகமவென்று வாசனை வருவதோடு, ஜிலுஜிலுவென்று ஒருவித இதமான உணர்வை முகத்தில் உருவாக்கும்.
சிங்கப்பூருக்குச் செல்லுபவர்கள் பலரும் அதனைத் தேடிக் கண்டுபிடித்து வாங்கி வருவார்கள். எனது நண்பர்கள் அதனை எனக்கு வாங்கித் தந்ததுண்டு. அந்தப் பிரபலமான யூடி கொலோன் (Eau De Cologne) இந்த நகரத்தில்தான் தயாராகி உலகம் முழுவதும் செல்லுகிறது. 4711 என்ற எண்ணுள்ள முத்திரைதான் இது ஒரிஜினல் என்பதைக் காட்டும்.
Eau De என்றால் அந்த நகரத்துத் தண்ணீர் அதாவது கொலோன் நகரத் தண்ணீர் என்பதே பொருள். ஆகவே அது வெறும் தண்ணீர் அல்ல. அந்தக் காலத்தில் இப்படி ஒரு வாசனைத் தண்ணீர் _ திரவம் மூலம் கொலோன் புகழ் பெற்றுவிட்டது!
இப்போது கொலோன் பல்கலைக்கழகத்தின் மூலமும் புகழ் பெற்றுள்ளது _ 48 ஆயிரம் மாணவ மாணவிகள் படிக்கின்றனர் _ பரந்துவிரிந்த நகரம் போல காட்சியளிக்கிறது. பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளே பல வீதிகள் அடங்கி, பக்கத்தில் பூங்காவும் உள்ளது!
எங்கும் மரம், பசுமை நிறைந்த சூழ்நிலை. ஜெர்மனியில் கொலோன் நகரின் ஒரு பகுதியில் இந்தப் பல்கலைக்கழகம். நகரம் முழுவதும் டிராம்கள், ‘Tram Car’ Service மிகவும் வேகம் குறைவான, மலிவான பயணமும்கூட! நடுச்சாலையில் டிராம் தண்டவாளம் _ பக்கத்திலே பேருந்து _ (பஸ்)களும் _ சென்றவண்ணம் உள்ளன. மிகவும் கவனமாக சாலைகளின் ஓரத்தில் நடந்து செல்ல வேண்டும்.
டிராம் வண்டி
பச்சை, சிவப்பு, மஞ்சள் விளக்குகளை மிகவும் எச்சரிக்கையுடன் கவனித்துதான் டிராம் ஸ்டேஷனிலோ, பஸ் ஸ்டாப்பிலோ சென்று ஏறவேண்டும். ஏராளமான போக்குவரத்து வசதிகள்; கார்களும் ஏராளம்; சாலைகளில் வேக வேகமாகப் பறக்கின்றன.
மிக நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் இந்த டிராம்களில் பயணம் செய்தது எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது!
உங்களுக்கு ஒன்று தெரியுமா? நம்ம சென்னை பெரியார் திடல் இருக்கிறதே, அதுவே ஒரு காலத்தில் டிராம்கள் எல்லாம் இரவுப் பயணங்களை முடித்து வந்து தங்கும் டிராம் ஷெட் ஆகும்! கொல்கத்தா பெருநகரத்தில் இன்னமும் டிராம்கள் ஓடுகின்றன.
சென்னையில் 1952 வாக்கில் ராஜகோபால ஆச்சாரியார் ஆட்சியில்தான் டிராம்களை ஒழித்துவிட்டார்; அதனால் பேருந்துகளும் பிற போக்குவரத்து விரிவாக்கங்களும் அதிகம் செய்ய முடியாது என்று கருதியே அப்போது ஆட்சியாளர்கள் அதனை ரத்து செய்துவிட்டனர்!
அந்தக் கம்பெனியின் நிலம் ஏலம் விடப்பட்டு அதனை எடுத்துத்தான் இப்போது நமது பெரியார் திடலாக, கட்டிடங்களும் விடுதலை அலுவலகங்களும் பெரியார் தாத்தா நினைவிடமும், பெரியார் பகுத்தறிவு நூலகம் _ ஆய்வகம், நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றமும் உருவாகியுள்ளது!
நான் கொல்கத்தாவில் சில ஆண்டுகளுக்கு முன் டிராம் கார் சவாரி செய்ததன் பின் ஜெர்மனியில்தான் அந்த வாய்ப்புக் கிடைத்தது!
கொலோன் பல்கலைக்கழகத்திற்குப் புறப்பட்டோம் _ டிராமில் ஏறி அருகில் இறங்கி நடந்தே பல கட்டிடங்களைப் பார்த்துக்கொண்டு சென்றோம். மாணவ மாணவிகள் கூட்டம் எங்கும்! சைக்கிள்களைப் பயன்படுத்துகின்றனர் _ கவனத்துடன் அந்தப் பாதையில் செல்ல வேண்டியதாக உள்ளது.
எனக்கு மிகவும் பிடித்த பலவற்றுள் அந்தப் புராதன கட்டிடங்களும் எழில் கொஞ்சும் தோற்றமும் முக்கியமானது. சுவைத்தோம்.
கொலோன் பல்கலைக்கழகம் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பே துவக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம். தத்துவஞானி ஒருவர் இதனைத் துவக்கினார். அவரது சிலை பழைய கட்டிடத்திற்கு முன் உள்ளது. அங்கே அருகில் பலதுறைக் கட்டிடங்கள், நூல் விற்பனையகம், (Book Store) கேன்டீன் முதலியவை இருந்தன.
நமக்குப் பிடிக்காத ஒன்று, ஏராளமான மாணவ மாணவிகள் புகைப் பிடிக்கும் கொடிய வழக்கத்தினராக இருப்பது! குறிப்பாக எனக்குப் புகைவாடையே பிடிக்காது. அவர்களுக்குப் பிடிக்கும் என்பதால் பிடிக்கிறார்கள் போலும்! புற்றுநோய் வரும் என்பதுபற்றி சொல்லித் தராமலா இருப்பார்கள். சிகரெட் தடை செய்யப்பட முடியவில்லை போலும்!
பேராசிரியர் உல்ரிச் அம்மையாரின் துறைக்கும் சென்று சிறிது நேரத்தைச் செலவழித்துவிட்டு, அப்பாடப் பிரிவின் தலைவர் டீன் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, உரையாடி விடைபெற்று அறைக்குத் திரும்பினோம். நல்ல நடை! நகரத்தைப் பார்த்துப் பரவசம் அடைந்தோம்.
– (தொடரும்)