கண்டுபிடிப்பு – தானாக இயங்கும் கூகுள் மகிழுந்து
ஓட்டுநரின் உதவியுடனோ அல்லது நாமே ஓட்டுநராக இருந்தோதான் மகிழுந்தில் (கார்) செல்லமுடியும் என்பது அனைவரும் அறிந்தது. கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய மகிழுந்து (Google Self-driving Car) ஓட்டுநர் இல்லாமல் தானாகவே இயங்கும் இயல்புடையது.
சாதாரணமாக மகிழுந்தில் காணப்படும் ஸ்டியரிங், க்ளட்ச், பிரேக் போன்ற எந்தவிதமான கருவிகளும் இல்லை, ஓட்டுநர் இருக்கையும் இல்லை. மின் சக்தியில் இயங்கும் கூகுள் மகிழுந்தை இணையத்தில் ஓட்டிக் காட்டியுள்ளது கூகுள் நிறுவனம்.
தற்போது மகிழுந்தின் மாதிரி வடிவமே உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் வரைபடம் வழிகாட்ட, செல்லும் வழியில் மோதாமல் இருக்க நவீன ரேடாரும், லேசர் சென்சாரும் மகிழுந்துக்குத் துணைபுரிகின்றன.
இருவர் அமர்ந்து செல்லும் வசதி கொண்ட இந்த வண்டியை உருவாக்கும் முயற்சியில் 2009ஆம் ஆண்டிலிருந்து ஈடுபட்ட கூகுள் நிறுவனம், தற்போது வெற்றியும் பெற்றுள்ளது.
பயணிகளை அழைத்துக் கொண்டு, அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்ல ஒரு கட்டளையிட்டால் போதுமானது.
சரியான இடத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். நுகர்வோருக்கு நெருக்கமான உணர்வைத் தர வேண்டும் என்பதற்காக வாகனத்தின் முகப்புப் பகுதி மனித முகம்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக முன்பகுதியில் கண்ணாடிக்குப் பதில் பிளாஸ்டிக் காற்றுத் தடுப்பான் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. தற்போது, 200 வண்டிகளை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
புதிதாக ஒன்று கண்டுபிடிக்கப்படும்போது அதுபற்றிய விமர்சனங்களும் வருவது இயல்புதானே. அந்த வகையில், இந்த வண்டியில் பொழுதுபோக்குப் பூங்காக்களில் விளையாட்டு பொம்மை கார் பயணம் மட்டுமே செய்ய முடியும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. போக்குவரத்துச் சாலைகளில் கூகுள் மகிழுந்தைச் சோதித்துப் பார்க்க அமெரிக்காவின் கலிஃபோர்னியா, நிவானா ஆகிய மாகாணங்கள் மட்டுமே சட்ட ஒப்புதலைத் தந்துள்ளன.
விரைவில் அனைத்து மாகாணங்களும், உலக நாடுகளும் ஒப்புதல் தரும் என கூகுள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தத் தானியங்கி மகிழுந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் என்று கருதப்படுகிறது. எப்படியும் பிஞ்சுகள் பெரிசுகள் ஆவதற்குள் வண்டி தயாராயிடும்!