வட்டு எறிதல்(Discus Throw)
ஓடுதல், எறிதல், நடத்தல், தாண்டுதல் போன்ற செயல்திறன்களை உள்ளடக்கிய விளையாட்டுகளைக் குறிப்பதே தடகள விளையாட்டுகள் (Athletics) எனப்படுகின்றன.
விலை உயர்ந்த கருவிகளோ கட்டமைப்புகளோ தேவையில்லை என்பதால் மிகப் பரவலாக தடகள விளையாட்டுகள் விளையாடப்பட்டு வருகின்றன. எளிமையான விளையாட்டு எனினும் மனிதனின் உடல் வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை இவை வளர்க்கின்றன. பெரும்பாலும் தனிநபர் போட்டிகளாகவே இருக்கும்; எனினும் குழுப் போட்டிகளும் உண்டு.
ஓடுதல், பாய்தல் அல்லது தாண்டுதல், எறிதல் என்ற மூன்று வகைகளாக தடகள விளையாட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் எறிதல் பிரிவினுள் வரும் வட்டு எறிதல், ஈட்டி எறிதல் விளையாட்டுகளைத் தெரிந்து கொள்வோம்.
வட்டு எறிதல்
கனமான வட்டினை யார் அதிக தூரத்தில் எறிகிறார்கள் என்பதே வட்டு எறிதல் விளையாட்டின் நோக்கமாகும். இது மிகவும் பழைமையான விளையாட்டாகும்.
கி.பி.அய்ந்தாம் நூற்றாண்டிலேயே இந்த விளையாட்டு விளையாடப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. 1896ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலேயே வட்டு எறிதல் சேர்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டி ஒலிம்பிக் போட்டியில் 1928ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது.
ஆண்களுக்கான வட்டின் எடை 2 கிலோவிலும், பெண்களுக்கானது ஒரு கிலோவிலும் இருக்கும். பன்னாட்டு விதிமுறைகளின்படி வயதுவாரியாக வட்டின் எடை பிரிக்கப்பட்டுள்ளது.
விளையாடத் தொடங்கும்முன் சரியான வட்டைத் தேர்ந்தெடுத்தல் முக்கியமானது. பாலினம் மற்றும் வயதே விளையாடத் தேர்ந்தெடுக்கும் வட்டின் அளவினையும் எடையையும் தீர்மானிக்கிறது.
பெண்கள் (எல்லா நிலையினர்) 1 கிலோ
ஆண்கள் (14 வயது வரை) 1 கிலோ
ஆண்கள் (15_18 வயதுவரை) 1.5 கிலோ
ஆண்கள் (கல்லூரி) 2 கிலோ
ஆண்கள் (49 வயதுவரை) 2 கிலோ
ஆண்கள் (50-_59 வயதுவரை) 1.5 கிலோ
ஆண்கள் (60 வயதிலிருந்து) 1 கிலோ
போட்டியாளர், 2.5 மீட்டர் அளவுள்ள வட்டத்திற்குள் நின்றுகொண்டு வலமிருந்து இடமாகச் சுழற்றி வட்டினை எறிய வேண்டும். வட்டத்தின் முன்புறக் கோட்டிலிருந்து வட்டு சென்று விழுந்த இடம்வரை உள்ள தூரம் அளவிடப்படும். அதிக தூரத்தில் வட்டினை எறிந்தவர் வெற்றி பெற்றவராவார்.
ஈட்டி எறிதல் (Javelin Throw)
ஈட்டியை எடுத்துக்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட கோடு வரையிலும் ஓடி வந்து உடலின் ஆற்றலைச் சேகரித்து வேகமாக வீசி எறிவதே ஈட்டி எறிதல் ஆகும். அய்ரோப்பாவின் நார்டிக் நாடுகளில்தான் ஈட்டி எறிதல் விளையாட்டு அதிக அளவில் விளையாடப்பட்டு வருகிறது.
ஒலிம்பிக் போட்டியில் நார்வே நாட்டினர் ஈட்டி எறிதல் போட்டியில் ஆண்கள் 69 பதக்கங்களையும், பெண்கள் 32 பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
2.7 மீட்டர் நீளமும், 800 கிராம் எடையும் கொண்ட ஈட்டி ஆண்கள் விளையாடவும், 2.3 மீட்டர் நீளமும் 600 கிராம் எடையும் உடைய ஈட்டி பெண்கள் விளையாடவும் பயன்படுத்தப்படுகிறது.