மிகப் பெரிய பாம்பு – டைடனோபோ(Titanoboa)
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனங்களிலேயே அதிக நீளத்துடனும் அதிக எடையுடனும் காணப்படுவது டைட்டனோபோ (Titanoboa) என்ற பாம்பாகும்.
பன்னெடுங் காலத்திற்கு முன் தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா நாட்டின் காடுகளில் வாழ்ந்ததாக கருதப்படுவனவே டைட்டனோபோ என்ற பாம்பு இனம் ஆகும். டைட்டனோபோ என்பதற்கு டைட்டானிக் போ (Titanic boa) என்று பொருள் கூறப்படுகிறது.
வாழும் தட்பவெப்ப நிலைக்கேற்ப வளரக்கூடிய இயல்புடையனவாக இருந்திருக்கும் என கருதப்படுகிறது. குளிர்ப்பகுதியில் வசித்த பாம்புகளைவிட வெப்பமான சூழ்நிலையில் வசித்த டைட்டனோபோக்கள் அளவில் மிகவும் பெரிதாக இருந்திருக்கின்றன என்பதை இதுவரை கண்டுபிடித்துள்ள படிமங்கள் (Fossils) மூலம் அறிய முடிகிறது.
50 அடி நீளம் வரையில் வளரும் இதன் எடை 1135 கிலோ (2500 பவுண்ட்) வரையிலும் இருந்திருக்கும். டைட்டனோபோவின் விருப்ப உணவு முதலையாகும்.
பெரிய முதலையையே விழுங்கக்கூடிய அளவில் வாய் அமைப்பினைக் கொண்டுள்ளது. முதலையை விழுங்கிய பின் இதன் உடம்பில் எந்தவித மாற்றமும் அதாவது எந்தவித வீக்கமும் தெரிந்திருக்காது. அவ்ளோ பெரிது!
இது நச்சுத்தன்மை இல்லாத பாம்பு வகையினைச் சார்ந்தது. சாப்பிடும் இரையினை மிகுந்த பலத்துடன் அழுத்தி நசுக்கிச் சாப்பிட்டுவிடும்.
கொலம்பியா நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் டைட்டனோபோ பாம்புகள் வாழ்ந்ததற்கான குழிகள் -_ படிமங்கள் இருந்ததை 2002ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்தப் பாம்பு ரெப்டிலியா (Reptilia) பிரிவினுள் பாய்டே (Boidae) குடும்பத்தைச் சேர்ந்தது.
ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த (University of Florida) பன்னாட்டு அறிவியல் குழுவின் ஜோனதான் புளோச் தலைமையின்கீழ் மேற்கொண்ட ஆய்வில் டைட்டனோபோ பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.