இது டியூசன் மட்டுமல்ல……
இன்றைய கல்விமுறை பற்றி நிறையக் கேள்விகள் உண்டு. குறிப்பாக பிஞ்சுகளுக்கு! இந்தக் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடித்திருக்கின்றனர் இருவர். பதில், ஃபீனிக்ஸ் தனிப் பயிற்சிப் பள்ளி. கண்டுபிடித்தவர்கள், சு.கோளிலிச் செல்வன், பா.கவியரசன் ஆகியோர். திருவாரூரில் உள்ள திருக்குவளைதான் இருவருக்கும் பிறந்த ஊர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் இணைந்து இதற்காக ஒரு ஓட்டு வீட்டை வாடகைக்கு எடுத்து, 50 மாணவர்களுடன் தொடங்கியிருக்கின்றனர். இன்று 150 இருபால் மாணவர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. இதில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை கற்றுத்தரப்படுகிறது.
அந்தப் பகுதியில் வசிக்கும் கல்வி, பொருளாதாரம் இரண்டிலும் இன்னமும் வஞ்சிக்கப்படுகின்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களே அதிகம் பயின்று பயன்பெறுகிறார்கள். இந்த இரு பிரிவினரிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களே அதிகம். வாய்ப்பு இருக்கின்ற மாணவர்கள் பயிற்சிக் கட்டணம் தருகின்றனர். மற்றபடி பெரும்பாலும் இலவசமாகவே கற்றுத்தரப்படுகிறது.
கோளிலிச் செல்வன், கவியரசன் இருவருக்கும் உறுதுணையாக, அருகிலிருக்கும் அண்ணா பொறியியல் கல்லூரியில் பயிலும் சதீஷ், பாலா, ரமேஷ், வெங்கடாச்சலம், பிரகாஷ் ஆகிய மாணவர்கள் தன்னார்வத் தொண்டர்களாக தாமாகவே முன்வந்து மாணவர்களுக்குக் கற்றுத் தருகின்றனர்.
இங்கு பிஞ்சுகளும், மாணவர்களும் விரும்பும் வண்ணம் விளையாட்டு, தற்காப்புக்கலைகள் ஆகியவற்றோடு கல்வியையும், அறிவியல் மனப்பான்மையையும் கற்றுக் கொடுத்து, மாணவர்களை முழுமையான சிற்பங்களாக வடித்துச் செதுக்குகிறார்கள். அது மட்டுமல்ல, ஒழுக்கத்திற்கே தனிப்பயிற்சி உண்டு.
இது எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், தவறான வழியில் செல்லும் தங்கள் பிள்ளைகளை, ஃபீனிக்ஸ் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டால், சரியான வழிக்கு வந்துவிடுவான் என்று அந்தப் பகுதியில் உள்ள பெற்றோர்களே எண்ணுகின்ற அளவுக்கு அங்கு ஒழுக்கக் கல்வி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, இங்கு படித்த மாணவர்கள்தான், பள்ளிகளில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெறுகிறார்கள். சென்ற ஆண்டுகூட, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், திருமுருகன் என்ற மாணவன் 468 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதல் இடத்திலும், திவாகர் என்ற மாணவன் 448 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதனால், பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு, இந்த ஃபீனிக்ஸ் தனிப்பயிற்சிப் பள்ளி மீது மரியாதை கலந்த பொறாமை உண்டு.
வெறும் கல்வியும், ஒழுக்கமும் மட்டுமல்லாமல், நமக்காகப் பாடுபட்ட, தந்தை பெரியார், காமராசர், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் பழக்கத்தை உருவாக்கி அவர்களைப் பற்றி பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி என்று நடத்தி நமக்கான வரலாற்றைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
தகவல் பலகை மூலம் அறிவார்ந்த கருத்துகளை எழுதி வைப்பதும், வகுப்புகளுக்கு அறிவியல் அறிஞர்களின் பெயர்களைச் சூட்டி மாணவர்களின் மனங்களில் நாள்தோறும் அறிவியல் சிந்தனைகளை விதைப்பதுமாகச் செயல்படுகிறது ஃபீனிக்ஸ்.
கோளிலிச் செல்வன் பி.எட். படித்திருக்கிறார். கவியரசன் அய்.டிஅய்.யில் வெல்டருக்கான கல்வியைக் கற்றிருக்கிறார். இருந்தாலும் ஒன்றாக இணைந்து செயற்கரிய செயலைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஒன்றாக இணைத்தது எது? அல்லது யார்? என்றால், செயற்கரிய செயல் செய்த பெரியார்தான்.
ஆம், தந்தை பெரியார்தான் இருவரையும் இணைத்தது. கோளிலிச் செல்வன் திராவிடர் கழகத்தில் நாகை மாவட்ட மாணவர் அணித் தலைவராகவும், கவியரசன், திருவாரூர் மண்டல இளைஞர் அணி செயலாளராகவும் இருக்கின்றனர்.
ஆம்! கல்விப்பயிற்சி, தற்காப்புப் பயிற்சி ஒழுக்கப் பயிற்சி இவற்றோடு அறிவியல் மனப்பான்மை என இவை நான்கையும் பெறுகின்ற கல்விதான் இன்றைய கல்வியின் முழுமையான வடிவமாக இருக்க முடியும். அதையும் மாணவர்கள் விரும்பும்படி கற்றுத் தருகிறார்கள். சிலர் வார நாட்களில் இங்கு தங்கி, இங்கிருந்து பள்ளிக்குச் சென்று வார இறுதியில் வீடுகளுக்குத் திரும்புகின்றனர்.
அதிகாலை 5:30 மணிக்கே வகுப்பு தொடங்கினாலும் மாணவர்கள் விரும்பி வகுப்புக்கு வருகின்றனர். விடுமுறை விடுவதற்கு பயிற்சியாளர்களே விரும்பினாலும், விடுமுறை வேண்டாம் நாங்கள் பயிற்சிக்கு வருகிறோம் என்று மாணவர்கள் சொல்லும் நிலையை இவ்விருவரும் உருவாக்கி இருக்கின்றனர். இதுபோன்ற பயிற்சிப் பள்ளிகள் திருக்குவளையில் மட்டுமல்ல, எங்க ஊர்லயும் இருந்தா நல்லா இருக்கும் என்று பிஞ்சுகள் முணுமுணுப்பது கேட்கிறது.
அதற்கு முன்பாக கோளிலிச் செல்வன் என்றால் என்ன பொருள் என்று மற்றொரு குரல் கேட்கிறது. சொல்லி விடுகிறேன். கோளிலிச் செல்வன் என்றால், குற்றமற்றவன் என்று பொருளாம். சரி, இந்த மாதிரி பயிற்சிப் பள்ளி நம்ம ஊருக்கு வர்றதுக்கு முன்னால, கோளிலிச் செல்வனுக்கும், கவியரசனுக்கும் பெரியார் பிஞ்சு சார்பாக வாழ்த்து சொல்லிடலாமா? எங்கே சொல்லுங்க! வாழ்த்துகள்!