பேராற்றல் தரும் பேரிக்காய்
ஆசியா மற்றும் அய்ரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. வெளித்தோற்றத்திற்கு பச்சை நிறத்தில் காய்போலத் தோன்றினாலும் சுவை மிகுந்த பழ வகைகளுள் ஒன்றாகும்.
பேரிக்காய் ரோசாசியே தாவரக் குடும்பத்தினைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் பைரஸ் கமியூனிஸ் என்பதாகும். பச்சை, சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் உருண்டை அல்லது மணி போன்ற வடிவங்களில் கிடைக்கிறது.
பேரிக்காயில் உள்ள நார்ப் பொருள்கள் குடல் புற்றுநோய்க்குச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகச் செயல்படுகின்றன. இதில் காணப்படும் எளிதில் கரையாத பாலி சாக்ரைடு மூலக்கூறு குடலில் சேரும் புற்றுநோய் நச்சுகளை நீக்கவல்லது.
100 கிராம் பேரிக்காயில் 3-.1 கிராம் நார்ப் பொருள்கள் உள்ளன. 58 கலோரி ஆற்றலை உடலுக்குத் தரக்கூடியது. பேரிக்காயினைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை மற்றும் கொழுப்பின் அளவினைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
7 விழுக்காடு வைட்டமின் சி உள்ளது. மேலும் பீட்டா கரோட்டின், லுட்டின், சி_சான்தின் போன்ற சத்துகளும் அடங்கியுள்ளன. இந்தச் சத்துகள் உடம்புக்கு வலிமை அளிப்பதுடன் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகின்றன.
பைரிடாக்சின், ரிபோபிளேவின், போலேட் போன்ற பி பிரிவு வைட்டமின்கள் ஓரளவும், தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகள் சிறிதளவும் உள்ளன.
இதயம் பலவீனமாக இருப்பவர்களும் அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வர இதயப் படபடப்பு நீங்கும். வளரும் குழந்தைகளுக்குத் தேவையான கால்சியம் மற்றும் இரும்புச் சத்து பேரிக்காயில் அதிகம் உள்ளது.
வைட்டமின் ஏ, பி, பி2 நிறைந்துள்ளன. வாய்ப்புண், வயிற்றுப் புண்களை ஆற்றக்கூடியது. உடல் சூட்டைத் தணிக்கும். நரம்புகளுக்குப் புத்துணர்வூட்டும். கண்களை ஒளிபெறச் செய்யும்.
குடல், இரைப்பையினைப் பலமடையச் செய்து உடலையும் வலுவாக்கும் ஆற்றலைக் கொண்டது. இதில் உள்ள பாலி அன்சாச்சுரேட் அமிலம் செல்கள் புதுப்பித்துக் கொள்ளப் பயன்படுவதுடன் பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க் கிருமித் தாக்குதலிலிருந்தும் உடம்பைப் பாதுகாக்கிறது.