மந்திரமா? தந்திரமா?
– செல்வா
பள்ளி மணி ஒலித்ததும் நண்பகல் சாப்பாட்டிற்குச் சென்றார்கள் மாணவ மாணவிகள். இனிமை தன் தோழி வந்தனாவுடன் சாப்பிடத் தொடங்கினாள்.
தீவிர சிந்தனையில் ஆழ்ந்து உணவினைப் பிசைந்து கொண்டிருந்த தோழியிடம், வந்தனா, கடந்த சில நாள்களாக ஆசிரியர் பாடம் நடத்தும்போது உன் கவனம் பாடத்தில் இல்லை. சாப்பிடும்போது, தோழிகளுடன் பேசும்போதுகூட உன் முகத்தில் மகிழ்ச்சி இல்லையே, என்ன பிரச்சினை உனக்கு? என உரிமையுடன் கேட்டாள் இனிமை.
நாங்க புதுவீட்டுக்குச் சென்றதிலிருந்து அப்பாவுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போய்விடுகிறது என்றதும், நல்ல மருத்துவரிடம் சென்றால் சரியாகப் போகிறது. இதற்கா உம்மணாமூஞ்சியா இருக்க என இனிமை படபடத்தாள். நான் சொல்வதை முதலில் கேட்டுட்டுப் பேசுறியா? என வந்தனா கூறியதும், சரி, சொல் என்றாள்.
அப்பாவின் தொழிலும் முன்புபோல இல்லை. எதற்கெடுத்தாலும் அம்மா மீது கோபப்படுகிறார். அப்பாவின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் யாரோ செய்வினை செஞ்சிருப்பாங்கனு…. இழுத்தாள் வந்தனா. என்ன மந்திரமா, அதிலெல்லாம் உனக்கு நம்பிக்கை இருக்கா? என இனிமை கேட்டாள்.
பக்கத்து வீட்டுப் பாட்டி கூறியபோது எனக்கும் கொஞ்சம் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது. ஆனால், பாட்டி சொன்ன சாமியாரைப் பார்த்துவந்தபின் நம்பாமல் இருக்க முடியலை. நீயும் சாமியாரைப் பார்க்கப் போனியா, சாமியார் என்ன சொன்னார்? என ஆர்வமாக இனிமை கேட்டாள்.
செம்பு நிறையத் தண்ணீரும் 5 டம்ளர்களும் எடுத்துவரச் சொன்னார். நான்தான் எடுத்துக் கொடுத்தேன். பின்னர் டம்ளர்களில் சாமியார் ஊற்றிக் கொடுத்த தண்ணீரைக் குடித்தபோது இனிப்பு, உப்பு, துவர்ப்பு, கசப்பு, புளிப்பு என 5 சுவைகளில் இருந்தது என ஆச்சரியத்துடன் கூறினாள்.
தண்ணீர் குடிக்கத்தான் சாமியாரிடம் சென்றீர்களா? என கிண்டலாக இனிமை கேட்டதும், எல்லாமே உனக்கு விளையாட்டாகத் தெரிகிறது என்றாள் வந்தனா. சரி சரி, அப்புறம் என்ன சொன்னார் என்றதும், யாரோ அப்பாவின் தொழிலை முடக்க ஏதோ செய்வினை செய்துள்ளார்களாம். அதனைச் சரிசெய்து பழைய நிலைக்குவர பரிகாரம் செய்ய வேண்டுமாம்.
நிறையப் பணம் செலவாகுமாம். சாமியார் கேட்ட பணத்தினை அப்பாவால் கொடுக்க முடியாத நிலை. என்ன செய்வதென்றே தெரியலை என முடித்தாள் வந்தனா.
எல்லாவற்றையும் கேட்ட இனிமை, சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, மாலை பள்ளி முடிந்து செல்லும்போது உங்க அப்பாவைப் பார்க்க வீட்டிற்கு வருகிறேன், வா வகுப்புக்குச் செல்லலாம் என வந்தனாவை அழைத்துச் சென்றாள். மாலை வந்தனாவின் வீட்டிற்குச் சென்றுவிட்டு, மறுநாள் மாலை தங்கள் வீட்டிற்கு வந்தனாவை அனுப்பி வைக்கும்படிக் கூறி வந்தனாவின் பெற்றோரிடம் அனுமதியும் பெற்றாள்.
மறுநாள் மாலை இனிமையின் வீட்டிற்குச் சென்றாள் வந்தனா. வீட்டிற்கு வந்த தோழியை உபசரித்து அமரவைத்துவிட்டு, தன் அறையினுள் சென்று புத்தகப் பையினை வைத்து வருவதாகக் கூறிச் சென்று வந்தாள். பின்னர், ஒரு செம்புத் தண்ணீரும் 5 டம்ளர்களும் எடுத்துவரும்படிக் கூறினாள். ஒன்றும் புரியாத வந்தனா, சாமியார் சொன்னதுபோலவே நீயும் சொல்றியே, ஏன்? என்றாள்.
எடுத்து வா சொல்கிறேன் என்று கூறிவிட்டு, தண்ணீரை 5 டம்ளர்களில் ஊற்றச் சொன்னாள். பின்னர், ஒவ்வொரு டம்ளராக எடுத்து வந்தனாவிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னாள். தண்ணீரைக் குடித்துவிட்டு புருவத்தை உயர்த்திய வந்தனா வியப்புற்றாள் _ சாமியார் தந்ததுபோலவே அய்ந்தும் அய்ந்து சுவை! புரியாது விழித்தாள்.
அய்ந்து விரல்களின் முன்பகுதியிலும் அய்ந்துவிதமான சுவையையுடைய பொடிகளைத் தடவி, உனக்குத் தண்ணீர் டம்ளரை எடுத்துக் கொடுத்தபோது ஒவ்வொரு விரலும் படும்படி எடுத்துக் கொடுத்ததே சுவைக்கான தந்திரம். சாமியார் என்ன, மூளையை உபயோகப்படுத்தினால் யாரும் அதிசயம் நிகழ்த்தலாம் என விளக்கினாள் இனிமை.
அதுசரி, என் அப்பாவின் தொழில் தடைக்கு… என்றதும், உங்கள் வீட்டை மாற்றினால் எல்லாம் சரியாகிடும் என்றாள் இனிமை. எங்க வீடு வாஸ்துப்படிதானே கட்டினோம்! என்ற வந்தனாவிடம், வாஸ்துப்படி கட்டினீங்க. உங்க வசதிக்குக் கட்டினீங்களா? உங்க வீட்ல போதுமான காற்றோட்ட வசதி இல்லை.
முன்பு நீங்க இருந்த வீடு நல்ல காற்றோட்ட வசதியுடன் இருந்ததல்லவா? அப்படிப் பழகிய உங்க அப்பாவுக்கு இந்த இறுக்கமான சூழ்நிலை சரியான தூக்கத்தைக் கொடுக்கலை.
அதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி, அவரால் தொழிலில் சரியான கவனம் செலுத்த முடியாமல் – சரியான முடிவு எடுக்க முடியாமல் இருந்துள்ளார்.
காற்றோட்ட வசதியுள்ள வீட்டுக்குச் சென்றாலே எல்லாப் பிரச்சினைகளும் சரியாகிடும். குழப்பமான மனநிலையில் வருபவர்களை சாமியார்களும் நல்லா குழப்பி அதன் மூலமா நல்ல வருமானம் பார்த்துடுறாங்க. மற்றபடி, வாஸ்துக்கும் வீடு நல்லா இருக்கிறதுக்கும் சம்பந்தமே இல்லை. இருந்திருந்தா வாஸ்து பார்த்துக் கட்டின 11 மாடிக் கட்டிடம் இடிஞ்சிருக்குமா? என இனிமை எடுத்துக் கூறினாள்.
தன் தோழியின் அறிவுத் திறமையைக் கண்ட வந்தனா வெகுவாகப் பாராட்டி நன்றி கூறினாள். பாராட்டும், நன்றியும் மட்டும்தானா? என இனிமை கேட்டாள். வேற என்ன வேணும் என்று வியப்புடன் பார்க்க, பரிகாரத்திற்கான கட்டணம்? என இனிமை கூறியதும் 5 துளிப் பொடிகள் தானே என வந்தனா சொல்ல இருவரும் சிரித்தனர்.