பிரபஞ்ச ரகசியம் – 14
கலீஸ்581 குடும்பம்
– சரவணா இராஜேந்திரன்
உயிரினம் வாழ ஓர் உலகம் துலா விண்மீன் மண்டலம்
விண்மீன் மண்டலங்களில் பல விண்மீன்கள் உள்ளன என்பதை நாம் அறிந்துள்ளோம். நமது சூரியனும் ஒரு விண்மீன்தான். நமது சூரியனைச் சுற்றி கோள்கள் உள்ளன. அதில் ஒன்று நமது பூமி. அப்படியென்றால் பிற விண்மீன் மண்டலங்களில் உள்ள விண்மீன்களைச் சுற்றி கோள்கள் உண்டா? அப்படி உண்டென்றால் அந்தக் கோள்களில் உயிரினம் வாழ்கிறதா? என்ற கேள்விக்கு விடை.
ஆம். துலா விண்மீன் மண்டலத்தில் உள்ள ஒரு விண்மீனை 6 கோள்கள் சுற்றிவருகின்றன. இதில் இரண்டு கோள்கள் நமது பூமியைப் போன்ற பருவநிலையைக் கொண்டுள்ளன. அங்கு உயிரினம் வாழ வாய்ப்புகள் உள்ளதாக நமது அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
துலா விண்மீன் மண்டலம்
கோடைவானில் தெளிவாகத் தெரியும் துலா விண்மீன் மண்டலத்தில் 1. பீட்டா லிப்ரா, 2. சிக்மா லிப்ரா, 3. காமா லிப்ரா, 4. கலீஸ் 581, 5. அப்சிலான் லிப்ரா, 6. தாவ் லிப்ரா, 7. கலீஸ் 570, 8. லோடா லிப்ரா, 9.எச் டி 141569, 10. எச் டி 141937, 11. 23 லிப்ரா, 12. எச் இ 1523-0901, 13. எப்சிலான் லிப்ரா என்ற 13 பெரியவகை விண்மீன்களும் 43 சிறியவகை விண்மீன்களும் பெயரிடப்படாத பல விண்மீன்களும் உள்ளன.
விருச்சிக மண்டலத்திற்கு அருகில் உள்ள துலா விண்மீன் மண்டலத்தை ஆய்வு செய்தபோது, கலீஸ்581 என்ற விண்மீனைச் சுற்றி மொத்தம் 6 கோள்கள் சுற்றுவது கண்டறியப்பட்டது.
இவற்றிற்கு முறையே கலீஸ் எ, கலீஸ் பி, கலீஸ் சி, கலீஸ் டி என முறையே பெயரிடப்பட்டுள்ளன. இந்தக் கோள்களை ஆய்வு செய்த கலிபோர்னியா, சாண்டா குரூஸ் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் கார்னிஜ் நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர் 2003-ஆம் ஆண்டு ஆய்வு செய்த போது கலீஸ் டி கோளில் உயிரினம் வாழும் சூழல் நிலவுவதுபற்றிக் கூறினார்கள்.
இவர்களைத் தொடர்ந்து வானியல் ஆய்வாளர் ஸ்டீவன் வோட் தலைமையில் ஆய்வு செய்த சிறப்புக் குழுவினர், கலீஸ் தொகுப்பில் உள்ள இரண்டு கோள்கள் பூமியைப் போன்று அதிக வெப்பமோ அதிக குளிரோ இல்லாமல் மிதமான காலநிலை நிலவுவதாகத் தெரிவித்தனர்.
நமது பூமியிலிருந்து 20 ஒளியாண்டு தொலைவில் உள்ள இந்தக் கோள்களின் வெப்பநிலை -31 முதல் -12 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியை ஒத்த காலநிலை, பருவ மாற்றங்கள் சி மற்றும் டி கோள்களில் உள்ளன. சி கோளில் ஒரு நாள் என்பது 40 முதல் 62 மணி நேரமாக உள்ளது.
ஈர்ப்பு சக்தி மற்றும் பாறைகள் ஆகியவை பூமியில் உள்ளதைப் போன்று காணப்படுகின்றன. எனவே, இந்தக் கிரகத்தின் மேற்பரப்பிலும் நீர் இருக்கலாம் என்று கருதப்பட்டு வருகிறது.
2011-ஆம் ஆண்டு நாசா அந்தக் கோளை நோக்கி ரேடியோ அலைகளை அனுப்பியது. 2020ஆம் ஆண்டில் நாசா அனுப்பிய ரேடியோ அலைகள் சென்றடையும், அக்கோளில் உயிரினங்கள் இருப்பின் நாசா அனுப்பிய அதிர்வலைகள் அக்கோளில் பட்டு எதிரொலிக்கும் ரேடியோ அலைகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஒருவேளை இக்கோளில் உயிரினங்கள் இருப்பின், அவர்கள் நம்மை வந்தடையவும் அல்லது நாம் அவர்களைச் சென்றடையவும் 500 முதல் 700 ஆண்டுகள் வரை ஆகலாம்.
சூரியன் பிறந்த ஒளிர்முகில் (நெபுலா) கூட்டம் பற்றி அடுத்த தொடரில் தெரிந்துகொள்வோம்.