சுழலும் படகு தூக்கி
மின் தூக்கிகளை (Lift), நகரும் படிக்கட்டுகளை (Escalator) பார்த்திருப்பீர்கள் – சென்றும் இருப்பீர்கள். சுழலும் படகு தூக்கியில் சென்றிருக்கீர்களா?
இந்தப் படகுத் தூக்கி நம் நாட்டில் இல்லை. ஸ்காட்லாந்து நாட்டில் உள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளைடு மற்றும் யூனியன் கால்வாய்களை எளிதில் இணைப்பதற்காக 2002ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
ஸ்காட்லாந்தின் மய்யப் பகுதியில் உள்ள ஃபால்கிர்க் (Falkirk) என்ற நகரத்தின் பெயரினை வைத்து Falkirk Wheel என்ற பெயரினைப் பெற்றது.
கிளைடு மற்றும் யூனியன் கால்வாய்களை இணைக்கும் முயற்சி முதன்முதலில் லிப்ட் மில்லேனியம் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 1930ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டு கால்வாய்களுக்கும் 35 மீட்டர் இடைவெளி உயரத்தில் 11 இணைப்புகளுடன் (Locks) சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. சக்கரம் ஒருமுறை இயங்க 3,500 டன் நீர் தேவைப்படுகிறது.
பிரிட்டிஷ் வாட்டர்வேஸ் போர்ட் (British Waterways Board) என்ற நிறுவனத்தால் சுழலும் படகு தூக்கிப் பாலம் வடிவமைக்கப்பட்டது. ஸ்காட்லாந்து பள்ளிச் சிறுவர்களிடம் இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கான மாதிரிகளை வரையச் சொல்லி இந்த நிறுவனம் போட்டி வைத்தது.
அதில், அந்த நிறுவனப் பொறியாளரின் 8 வயதுப் பெண் குழந்தை வரைந்த விளையாட்டுப் பொம்மையின் பல்சக்கர வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டது. இதனை முழுமையாக வடிவமைக்க சுமார் 632 கோடி ரூபாய் (78 மில்லியன் பவுண்டுகள்) நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியானது லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்து திரட்டப்பட்டது.
மேட்டுப் பகுதியான யூனியன் கால்வாயானது 13 பாலங்களின் மூலம் 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிளைடு கால்வாய்வரை கொண்டுவரப்பட்டது. மேல் பகுதியில் உள்ள யூனியன் கால்வாயும் கீழ்ப் பகுதியில் உள்ள கிளைடு கால்வாயும் மேலும் கீழுமாக நிறுத்தப்படுகிறது. அந்த நேரத்தில், தண்ணீர் அடங்கிய சுழலும் பாலம் கீழே உள்ள படகுத் தண்ணீருடன் எந்தவித அசைவுமின்றி மேலே கொண்டு செல்லப்படுகிறது.
மேலே சென்ற பின்னர் பாலத்தின் அடைப்புகள் திறக்கப்பட்டு தண்ணீர் யூனியன் பாலத்துடன் சேர்ந்த பிறகு கிளைடு கால்வாயில் உள்ள படகு யூனியன் கால்வாயைச் சென்றடைகிறது. பாலம் இயங்கும்போது பெரிய விலாங்கு மீன் வளைந்து துள்ளி விழுவது போன்ற அழகான காட்சியைக் காணலாம்.
மிகவும் புதுமையான முறையில் பால்கிரிக் சக்கரப் பாலம் செயல்பட்டாலும் இங்கிலாந்தில் உள்ள ஆண்ட்ரியன் படகுத் தூக்கியே முதலிடத்தைப் பெற்றுள்ளது.