காட்மியம் Cd
கோட்டின்கன் பல்கலைக்கழக மருத்துவத் துறையின் வேதியியல் பேராசிரியர் எஃப் ஸ்ட்ரோமேயர் (F. Stromeyer) 1817ஆம் ஆண்டு கண்டுபிடித்த நீலம் பாய்ந்த சாம்பல் நிற உலோகத்திற்கு காட்மியம் என்று பெயரிட்டார்.
துத்துநாக கார்போனேட்டுக்கு கிரேக்க மொழியில் காட்மியா என்று பெயர். அதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் காட்மியம் என்ற பெயர் பெற்றது.
துத்தநாகக் கனிமத்துடன் சேர்ந்தே காணப்படும். நீரில் கரையாத காட்மியம் சல்பைடு இயற்கையில் மிக அரிதாகக் கிடைக்கும் காட்மியக் கனிமமாகும். இதனை கிரினோகைட் (Greenockite) என்று குறிப்பிடுவர்.
துத்தநாகம், செம்பு போன்ற உலோகங்களைக் கனிமத்திலிருந்து உருக்கிப் பிரித்தெடுக்கும் வழிமுறையில் காட்மியம் ஒரு துணை விளைபொருளாகக் கிடைக்கின்றது.
தூய காட்மியம் மென்மையான டின் போன்று வெண்மையான கனமான உலோகமாகும். இது காற்றுவெளியில் மெதுவாக ஆக்சிஜனேற்றம் பெறுகின்றது.
காட்மியம் _ கந்தகம் _ செலினியம் இவற்றின் கலவையால் காட்மியச் சிவப்பு (Cadmium Red) என்ற சிவப்பு நிறமிப் பொருளைப் பெறலாம்.
செம்பைவிடக் குறைந்த அளவு மின்கடத்தும் திறனைப் பெற்றிருந்தாலும் காட்மியத்தின் வலிமை செம்பைவிட அதிகமாக உள்ளது.
காட்மிய நிறமிப் பூச்சுகள் துருப்பிடிப்பதைத் தடுக்கின்றன. பிளாஸ்டிக்குகளுக்கு வலிமையூட்டி கதிரியக்கம் மற்றும் ஆக்சிஜனேற்றத்தால் ஏற்படும் சிதைவைத் தடுக்கின்றன.
எஃகுத் தகடுகளை மெருகூட்டிப் பளபளப்பேற்றவும், இயந்திரப் பொறிகளில் உராய்வைக் குறைத்து அதனால் உண்டாகும் சேதத்தைத் தடுக்கவும், உலோகக் கலவைப் பொருள்களின் வலிமையை மேம்படுத்தவும் பயன்படுகிறது.
நியூட்ரான்களை உட்கிரகிக்கும் தன்மை பெற்றிருப்பதால் அணு உலைகளில் கருப்பிளப்பு வினை நடைபெறும் வீதத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.
காட்மியத்தின் தாக்குதலுக்கு உட்பட்டவர்கள் தசைவலி மற்றும் தொடர்ந்த இருமலினாலும், தோல் சுருக்கத்தாலும் துன்பப்படுவதாக ஜப்பான் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.