நம்ம தாத்தா
பெரியார் என்னும் சொல் தந்தை பெரியார் அவர்களை மட்டுமே அடையாளம் காட்டி நிற்கும் சொல்லாகும்.
மூடப் பழக்கவழக்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து, உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண், என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழப் பாடுபட்டவர். தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகளுள் சிலவற்றைத் தெரிந்து கொள்வோம்.
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாடு கான்பூரில் நடைபெற்றது. அதில் பெரியார் தாத்தா பேசினார். பெரியார் தாத்தா பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்ல நம் ஆசிரியர் தாத்தாவும் உடன் சென்றிருந்தார். இயல்பிலேயே தன்னம்பிக்கை அதிகம் கொண்ட நம்ம பெரியார் தாத்தா, தாமே எதையும் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நிரம்பப் பெற்றவர்.
கான்பூர் மாநாட்டினை முடித்துவிட்டு லக்னோவிற்குப் பேசச் சென்றார் பெரியார் தாத்தா. ஆங்கிலத்தில் பெரியார் தாத்தா பேச முயன்றதை அறிந்த ஆசிரியர் தாத்தாவுக்கோ வியப்பு ஏற்பட்டது. ஒரு சிறிய முன்னேற்பாட்டுடன் பேசத் தொடங்கினார்.
அது என்ன முன்னேற்பாடு? பெரியார் தாத்தா ஆங்கிலத்தில் பேசத் தொடங்கும்போது ஏதாவது சந்தேகம் வந்தால் ஆசிரியர் தாத்தா அந்த வார்த்தையினைச் சரி செய்ய வேண்டும். ஆசிரியர் தாத்தாவும் தயார்நிலையில் இருந்துள்ளார்.
பெரியார் தாத்தா பேசிக் கொண்டிருந்தபோது, அடுப்பு என்ற பொருளை உணர்த்தும் ஆங்கிலச் சொல் நினைவில் வராததால் பேச்சுக்குத் தடை ஏற்பட்டுள்ளது. உடனே ஆசிரியர் தாத்தாவைப் பார்த்துள்ளார். அந்த நேரத்தில் ஆசிரியர் தாத்தாவுக்கும் அந்த வார்த்தை நினைவில் வரவில்லையாம்.
பெரியார் தாத்தாவே ஓவன் (Oven) என்ற ஆங்கிலச் சொல்லைக் கூறி பேச்சைத் தொடர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், பொருத்தமான சொல்லைத் (Appropriate Word) தேர்ந்தெடுத்துப் பேசிய பெரியார் தாத்தாவைப் பாராட்டித்தானே ஆகவேண்டும்.
* * *
ஒருமுறை பெரியார் தாத்தாவும் அண்ணாவும் மும்பை சென்றிருந்தபோது எம்.என்.ராய் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நம் தாத்தாவிடம் அதிக அளவில் அன்பும் மதிப்பும் கொண்டிருந்த ராய் அவர்கள் தாத்தாவுக்கு விருந்து கொடுக்க நினைத்துள்ளார். பெரியார் தாத்தாவும் அண்ணாவும் விருந்திற்குச் சென்றுள்ளனர். ராய்க்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும்.
பிரமாதமாக நடைபெற்ற விருந்தில் ராய்தான் பார்த்துப் பார்த்துப் பரிமாறியுள்ளார். நம் தாத்தாவுக்குக் குறிப்பிட்ட ஒன்றைச் சாப்பிட ஆசை ஏற்பட்டுள்ளது. மனதில் தோன்றியதைக் கேட்டு விடுவது தாத்தாவின் குணங்களுள் ஒன்றுதானே. எப்படிக் கேட்பது? ராய்க்குத்தான் தமிழ் தெரியாதே, ஊறுகாய் என்றால் புரியாதே, இதன் ஆங்கிலப் பெயரும் மறந்துவிட்டதே என சிந்தித்தார்.
தாத்தாவின் தேவையை அண்ணா புரிந்து கொண்டாலும், பெரியார் தாத்தாவின் சமாளிப்புத் திறமையைக் கண்டு ரசிக்க விரும்பி அமைதியாக இருந்துள்ளார். ராய் அருகில் வந்தபோது, விரலைத்தொட்டு நாக்கில் வைத்து நாக்கால் சொட்டிக் காட்டி ஓசை எழுப்பிக் காட்டியுள்ளார் தாத்தா.
சமிக்சையைப் புரிந்துகொண்ட ராய், ஓ பிக்கிள் என்றதும் எஸ்.எஸ். பிக்கிள் என மலர்ச்சியுடன் கூறினாராம் பெரியார் தாத்தா.