குள்ளக் குதிரை(Shetland Pony)
ஸ்காட்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள செட்லேண்ட் தீவுகளே செட்லேண்ட் போனியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. சிறிய குதிரை இனங்களிலேயே வலிமை மிக்கதாகக் கருதப்படும் இந்தச் சிறிய மட்டக் குதிரைகள் வெண்கலக் காலம் முதல் (கி.மு.2000 _1000) செட்லேண்ட் தீவு மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமை தெரிகிறது.
வண்டி இழுப்பதற்கும், நிலத்தினை உழுவதற்கும், நிலக்கரிச் சுரங்கங்களில் கரியினைச் சுமந்து செல்வதற்கும் பயன்படுத்தப் பட்டுள்ளன. அமெரிக்க நிலக்கரிச் சுரங்கங்களில் பயன்படுத்த பிரிட்டனி லிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. வாழ்நாள் முழுவதும் இந்த மட்டக் குதிரைகள் நிலக்கரிச் சுரங்கங்களிலேயே வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நிலக்கரிச் சுரங்கங்கள் மட்டக் குதிரைச் சுரங்கங்கள் என்ற பெயரினைப் பெற்றுள்ளன. இப்படி அழைக்கப்பட்ட கடைசி நிலக்கரிச் சுரங்கம் 1971ஆம் ஆண்டு மூடப்பட்டது.
சிறிய தலையுடன், அகன்ற முகத்தினையும், கூர்மையான காதுகளையும் கொண்டிருக்கும். இந்த இனத்தில் சிறியது நல்ல தசையுள்ள கழுத்தையும், கச்சிதமான உடலமைப்பையும், சிறிய வலிமையான கால்களையும், அதன் அளவுக்கேற்ற கணுக்கால்களையும் கொண்டிருக்கும். மேலும் நீண்ட பிடரி மயிரினையும், வாலினையும், கடுங்குளிரைத் தாங்கும் அடர்த்தியான தோலினையும் பெற்றிருக்கும். பல்வேறு நிறங்களில் வெவ்வேறு உயரங்களில் காணப்படுகின்றன.
பிற குதிரை இனங்களுடன் ஒப்பிடும்போது செட்லேண்ட் போனி வலிமையானது. தன் உடல் எடையைவிட 2 மடங்கு எடையினைத் தள்ளும் வலிமையுடையன என்றாலும், குள்ள வடிவக் குதிரைகள் தன் எடையில் பாதி எடையினைத் தள்ளும் இயல்புடையன.
71 செ.மீ. முதல் 107 செ.மீ. வரை வளரும் செட்லேண்ட் போனி 30 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியன. ஜெர்மன் நாட்டு அஞ்சல் தலையில் செட்லேண்ட் போனியின் படம் இடம் பெற்றுள்ளது. வைக்கோல், தானியம், புல் ஆகியன செட்லேண்ட் போனியின் உணவுப் பொருள்களாகும்.
உருளைக்கிழங்கு பயிரிடும் இடங்களில் கிழங்கினை எடுத்தபின் மேலே உள்ள இலைகளைச் சாப்பிட செட்லேண்ட் போனியினை விட்டுவிடுவர். இதன் சாணி இயற்கை உரமாகப் பயன்படுவதால் அப்படியே உழுது நிலத்தைப் பண்படுத்திடுவர்.