அநாதை
ஒரு நாய் தினமும் காலையில் சூரியனைப் பார்த்துக் குரைத்துக்கொண்டே இருந்தது. இதை ஒருவர் தினமும் கவனித்துக் கொண்டே இருந்தார். பல மாதங்களாய் இந்நாய் தினமும் சூரியனைப் பார்த்து குரைத்தது.
அதன் காரணம் மட்டும் அவருக்குப் புரியவே இல்லை. காலையில் இரண்டு நிமிடம் குரைத்துவிட்டு ஓடிவிடும் நாயை இவரால் மறுநாள் காலை குரைக்கும்போதே காண முடியும்.
அன்று வழக்கத்திற்கு மாறாக நாய் குரைக்கவே இல்லை. எப்போதும் ஏழுமணிக்குள் குரைத்துவிடும். இன்று எட்டு மணியாகியும் அதன் குரைப்புச் சத்தம் கேட்கவே இல்லை. எனவே வேலைக்குப் போவதை விட்டுட்டு அமைதியாய்க் கவனித்துக் கொண்டிருந்தார்.
ஒன்பது மணியாகியும் குரைக்கவே இல்லை. பொறுமை இழந்த அந்த மனிதன் அந்த நாய் இருந்த இடத்திற்குப் போனார். அது கிழக்கே வானத்தில் வைத்த கண்ணை அகற்றாது நின்று கொண்டிருந்தது.
அதன் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென நாய் குரைத்தது. அதன் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. பார்த்தால் சூரியன் உதித்தது மேகங்களின் மறைவிலிருந்து. அன்று அவருக்கு ஒன்று புரிந்தது.
யாருமற்ற தெருநாய்க்குக்கூட இயற்கை உறவாய் இருக்கையில் உலகில் யாருமே இல்லாத அநாதைகள் என்று எவருமே இல்லை. இயற்கையே நம் உறவு.
– காவ்யா