செவ்வாயைச் சுற்றும் செயற்கைக்கோள்
செவ்வாய் வட்டப்பாதை ஆய்வுக்கலன் திட்டம் (Mars Orbiter Mission), அல்லது மங்கள்யான் என்பது செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தால் பி.எஸ்.எல்.வி என்ற ஏவுகலம் (PSLV) மூலம் சிறீஹரிகோட்டாவிலிருந்து நவம்பர் 5, 2013 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 02:38 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும்.
திட்டச்செலவு
5 ஆய்வுக் கருவிகளுடன் 15 கிலோ எடைகொண்ட ஆய்வுக்கலத்தைத் தயாரிக்க இந்திய ரூபாயின் மதிப்பில் 450 கோடிகள் செலவு செய்துள்ளார்கள். இது, உலகில் குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் என்ற புகழினைப் பெற்றுள்ளது.
நோக்கம் செவ்வாயைச் சென்றடையும் அளவுக்கு தொழில்நுட்பத் திறன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருக்கிறதா என்பன உள்ளிட்ட ஆய்வுகளை நடத்துவதுமே மங்கள்யானின் முக்கிய நோக்கங்கள்:
விண்வெளிப் பயணங்களுக்குத் தூக்கிச் செல்லும் ராக்கெட் திறனை உறுதிப்படுத்துவது, வானவெளி குறித்த ஆய்விற்காக செவ்வாய்க் கோள் சுற்றுவட்டப்பாதையில் இக்கலத்தை அமைப்பது, செந்நிறக் கோளில் இறங்கச் செய்வது.
செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து படமெடுப்பது, அங்கே மீத்தேன் வாயு இருப்பதைச் சோதிப்பது செந்நிறக் கோளில் ஒரு காலத்தில் இருந்த சூழ்வெளி வாயு மண்டல இழப்பை ஆராய்வது போன்றனவாகும்.
துணைக் கருவிகள்
செவ்வாய் சுற்றுக்கலன் திட்டம் 15 கிலோ எடையுள்ள 5 துணைக் கருவிகளை உள்ளடக்கியுள்ளது.
காற்றுமண்டல ஆய்வுகள்
லைமன் ஆல்ஃபா ஒளிமானி (Lyman Alpha Photometer) செவ்வாய்க்கான மீத்தேன் உணரி (Mars Methane Sensor) போன்ற காற்று மண்டல ஆய்வுக்கருவிகள் இதில் உள்ளன.
செயல்பாடு
1350 கிலோ எடையுள்ள மங்கள்யான், தற்போது செவ்வாய் வட்டப்பாதையை அடைந்துவிட்டது. இந்த வட்டப்பாதையில் ஆறுமாத காலமே இது செவ்வாய் கோளைச் சுற்றிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக அந்தக் கோளை மங்கள்யான் 60 முறை சுற்றிவரும். சந்திரயானில் மொத்தமாக 11 கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. அதில் சில வெளிநாட்டு நிறுவனங்களுடையவை. ஆனால், இப்போது எடுத்துச் செல்லப்பட்டுள்ள 5 கருவிகளும் இந்தியாவினுடையது.
வேகம்
மங்கள்யான் உயரே சென்றடைந்தபோது அதன் வேகம் மணிக்கு சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர். மங்கள்யானின் வேகத்தை அதிகரிக்க பூமியின் ஈர்ப்பு சக்தி உதவியது. பூமியை வட்டவடிவப் பாதையில் சுற்றும்படி மங்கள்யானைச் செலுத்தினால், அதன் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்பதால் நீள் வட்டப் பாதையில் செலுத்தினர்.
பூமியை ஆறாவது தடவை சுற்றி முடித்தபோது, மங்கள்யானின் வேகம் மணிக்கு சுமார் 38 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்தது. இவ்விதம் (பூமி உள்பட) ஒரு கோளின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை அதிகரிக்கும் உத்திக்கு ஆங்கிலத்தில் கிராவிடி அசிஸ்ட் என்று பெயர். கடந்த காலங்களில், பயனிர், வாயேஜர் விண்கலங்களை அனுப்பியபோது, நாசா இந்த உத்தியைப் பயன்படுத்தியது.
செவ்வாய் சுற்றுக்கலன் திட்டத்தின் பாதை
மங்கள்யான் விண்கலம் சரியான திட்டமிட்ட பாதையில் செல்வதைக் கண்காணித்து நான்கு முறை நிர்ணயித்த பாதையை நோக்கித் திருப்பிவிடப்பட்டது. அதன்படி,
1. முதல் நிர்ணயிக்கப்பட்ட பாதைத் திருப்பம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் நாள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் இயந்திரம் 40.5 வினாடிகள் இயக்கப்பட்டு நிர்ணயித்த பாதையில் விண்கலத்தைத் திருப்பினர்.
2. இரண்டாவது பாதைத் திருப்பம் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று திட்டமிடப்பட்டது. ஆனால், மங்கள்யான் விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்றதால் அத்திருப்பம் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.
3. மூன்றாவது பாதைத் திருப்பம் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் நாள் திட்டமிடப்பட்டது. அதன்படி, மங்கள்யானின் இயந்திரம் 16 வினாடிகள் இயக்கப்பட்டு நிர்ணயித்த பாதையில் திருப்பிவிடப்பட்டது.
4. கடைசிப் பாதைத் திருப்பம் இரண்டு கட்டமாக ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இறுதிப் பாதைத் திருப்பம் செப்டம்பர் 22, அன்று வெற்றிகரமாகத் திருப்பிவிடப்பட்டு செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது.
செவ்வாய் பற்றிய சில குறிப்புகள் :
இது வரை 11 செயற்கைக்கோள்கள் செவ்வாய் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
அவையாவன : Mars Reconnaissance Orbiter, Mars Odyssey, Mars Express, மரைனர் 9, வைகிங் 1 மற்றும் 2, செவ்வாய் 3, செவ்வாய் 4, செப்டம்பர் 21 அன்று செவ்வாய் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட மார்ஸ் மாவன் மற்றும் இந்தியாவின் செவ்வாய் வட்டப்பாதை ஆய்வுக்கலன் (MOM-Mars Orbiter Mission) போன்றவையாகும்.
செவ்வாய் கோளின் சுற்றுப் பாதையில் இணைந்த செவ்வாய் கலன் எடுத்து அனுப்பியுள்ள படம்.
அமெரிக்கா 2019ஆம் ஆண்டு மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டம் ஒன்றை 2004 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. 80 விழுக்காடு பூர்த்தியாகிவிட்ட இந்த ஆய்வின்படி, 2019ஆம் ஆண்டு ஜூலை 2 அமெரிக்க தினத்தன்று 3 பேர் கொண்ட குழு செவ்வாயை நோக்கிப் பயணிக்கும்.
இவர்களது உணவிற்காக விண்வெளி ஓடத்திலேயே பயிரிடும் முறையைச் சோதனை ஓட்டமாகச் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.