கழுதைப்புலி (Hyena)
புதர் மற்றும் முள் காடுகளில் தனியாகச் சென்று இரைதேடும் அனைத்துண்ணி விலங்கு கழுதைப்புலி ஆகும். இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உள்பட பல நாடுகளில் கழுதைப்புலி காணப்படுகிறது.
ஒரு நீர்நிலையிலிருந்து இன்னொரு நீர்நிலையைத் தேடி அலைந்து திரியும் இயல்பினை உடையது. எனவே, இவை ஒரே இடத்தில் இருப்பதில்லை. விலங்கினப் பிரிவினுள் பாலூட்டி வகுப்பினைச் சேர்ந்தது.
கடுவாய், கொடுவாய், தரக்கு, புலிக்குடத்தி, வங்கு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டுள்ளது. கழுதைப்புலியின் உடலின் மேற்பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் உடல் முழுவதும் கருப்பு நிறத்தில் புள்ளிகள் காணப்படும். முகத்தின் முன்பகுதி, கழுத்தில் உள்ள முடிகள், தோள்பட்டை மற்றும் காதுகள் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
கழுதைப்புலிகளுக்குக் கோபம் வந்தாலோ அல்லது பிற விலங்குகளைப் பயமுறுத்தினாலோ அல்லது இவை பயந்தாலோ இவற்றின் உடலிலுள்ள முடிகள் செங்குத்தாக நிற்கும். அப்போது இதன் உருவம் இயல்பாக உள்ளதைவிட 30 முதல் 40 விழுக்காடு வரை பெரிதான தோற்றத்தில் காட்சியளிக்கும். இதன் கால்கள் மிகவும் நீளமானவை. ஆண் மற்றும் பெண் இனத்தின் உடல் அமைப்பில் வேறுபாடு கிடையாது.
வேட்டையாடிச் சாப்பிடும் இயல்பினைப் பெற்றிருப்பினும், பெரும்பாலும் பிற விலங்குகள் சாப்பிட்டு விட்டுச் செல்வதையே சாப்பிடுகின்றன. சிறு விலங்குகள், பழங்கள் மற்றும் பூச்சிகளையும் சாப்பிடக்கூடியன.
காடுகளுக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் கால்நடைகளைத் தாக்குவதால் இவை மனிதர்களால் கொல்லப்படுகின்றன. மேலும், இதன் உடல் உறுப்புகள் மருத்துவ குணம் கொண்டவை என்ற மூடநம்பிக்கையாலும் வேட்டையாடப்பட்டு வருகின்றன.