சம்மட்டி எறிதல் (Hammer Throw)
நான்கு வகையான எறிதல் விளையாட்டுகளுள் சம்மட்டி எறிதலும் ஒன்றாகும். 15ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே இந்த விளையாட்டு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெற்ற பழைமையான விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
முதன்முதலில் 1900இல் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான போட்டி ஒலிம்பிக்கில் 2000த்தில்தான் சேர்க்கப்பட்டது. 1960க்குப் பின்னர் அய்ரோப்பிய மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் செல்வாக்குப் பெற்று, பிற நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்கள் விளையாடப் பயன்படுத்தும் சம்மட்டி 7.257 கிலோ எடையினையும் 121.5 செ.மீ நீளத்தையும் கொண்டிருக்கும். பெண்களுக்கானது 4 கிலோ எடையையும் 119.5 செ.மீ. நீளத்தையும் கொண்டதாக இருக்கும்.
ஒரு கைப்பிடியுடன் கம்பி ஒன்றினால் பிணைக்கப்பட்ட கனமான பந்து ஒன்றை, தூரத்திலிருந்து எறிந்து விளையாடும் விளையாட்டே சம்மட்டி எறிதலாகும். பழைமையான ஸ்காட்லாந்தின் விளையாட்டுப் போட்டிகளில் ஹேம்மர் ஒன்றைப் பயன்படுத்தியதை ஒட்டியே ஹேம்மர் த்ரோ என்ற பெயரினைப் பெற்றது.
பிற எறிதல் போட்டி களைப் போலவே, இதிலும் போட்டியாளர்கள் சம்மட்டியைத் தங்கள் தலைக்கு மேலே வட்டமாகச் சுழற்றுவர். பின்னர் விசையைக் கூட்டி ஒன்று முதல் நான்கு சுற்றுகள் இந்த வட்டத்தில் சுற்றுவர். ஒவ்வொரு சுற்றின் போதும் விசையையும் ஆற்றலையும் அதிகரித்துக் கொண்டே செல்வர்.
இறுதியில், வட்டத்தின் முன்னிருந்து சரியான கோணத்தில் பந்தை எறிய வேண்டும். அதிக தூரத்தில் எறிபவரே வெற்றி பெற்றவராவார்.