ஆரோக்கிய உணவு
அன்னாசிப்பழம்
செதில் செதிலான தோலுடன் முரட்டு இலைகளைக் கொண்டு கரடு முரடாகக் காட்சி தரும் அன்னாசிப் பழத்தின் தமிழ்ப் பெயர் பூந்தாழப் பழம் என்பதாகும். அனாஸ் சாட்டிவிஸ் ஸ்கலட் (Annas Sativis Schult) என்ற தாவரவியல் பெயரினைக் கொண்ட அன்னாசிப் பழம் ப்ரோனிலியாசிய (Broneliaceae) குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலைப் பூர்வீகமாகக் கொண்டது. 500 ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துகீசியர்களால் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. முதலில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பிரபுக்கள், செல்வந்தர்களால் மட்டுமே சாப்பிடப்பட்டு வந்த பழம், பின்னர் அனைவராலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
100 கிராம் அன்னாசியில் 50 கலோரி ஆற்றலும் கார்போஹைட்ரேட் 13.12 கிராமும், சர்க்கரை 9.85 கிராமும், நார்ச்சத்து 1.4 கிராமும், புரோட்டின் 0.54 கிராமும் உள்ளன. மேலும், வைட்டமின்கள் B1, B2, B3, B5, B6, B9, C மற்றும் கொலைன், கால்சியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், தாமிரம் ஆகியன சிறிதளவும் உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட அன்னாசிப் பழம் பித்தத்தைக் குறைக்கும். இதயம் தொடர்பான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். கண்பார்வைக் குறைபாட்டினைத் தடுக்கும். செரிமானத் திறனை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். இரத்தத்தை விருத்தி செய்து உடலுக்கு நல்ல பலம் தரும்.
அன்னாசிப் பழம் என அனைவராலும் அழைக்கப்பட்டாலும், இது பழ வகையைச் சார்ந்தது அல்ல. இதன் நடுவில் உள்ள தண்டுப் பகுதியையும் செதில் செதிலான தோலையும் கவனித்துப் பார்த்தால் தெரியும். செதில் செதிலான அமைப்பையுடைய தோல்தான் இதன் மொட்டு மலர்ந்து பூத்த இடமாகும். அந்தத் தண்டுப் பகுதியே நாம் சாப்பிடும் அன்னாசிப் பழமாகும்.
பிரேசில் நாட்டில் அன்னாசிப் பழத்திலிருந்து சர்க்கரை தயார் செய்கிறார்கள்.