சாதனைப் பிஞ்சுகள்
அய்.க்யூவில் உலக அளவில் சாதித்தவர்
பாளையங்கோட்டையில் உள்ள லட்சுமி ராமன் மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் விசாலினி, அய்.க்யூ (IQ-Intelligent Quotient) எனப்படும் நுண்ணறிவுத் திறன் சோதனையில் உலக அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் பெற்றுள்ள அய்.க்யூ அளவு 225 புள்ளிகள்.
விசாலினி
உலக அளவிலான அய்.க்யூ.வில் சீன நாட்டைச் சேர்ந்த கிம் யூங் யோங் (Kim Ung-yong) கின்னஸ் சாதனை படைத்திருந்தார். அவரது அய்.க்யூ அளவு 210 புள்ளிகள். கடந்த ஆண்டு இந்தச் சாதனையை முறியடித்து விசாலினி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
10 வயதிலிருந்தே சாதனைகளைத் தொடங்கியுள்ளார் விசாலினி. பாகிஸ்தானில் உள்ள 12 வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையைத் தனது 10 வயதில் முறியடித்து, The Youngest CCNA World Record Holder என்ற உலக சாதனையைப் பெற்றுள்ளார்.
தேசிய இளம் விஞ்ஞானி
பவித்ரா
14 வயதில் 8 விதமான புதிய கருவிகளை உருவாக்கி தேசிய இளம் விஞ்ஞானி என்ற பெருமைக்குரியவராகியுள்ளார் பவித்ரா. இவர் ஈரோடு புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்தவர். ஆர்.சி.நினைவு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்து வருகிறார்.
செடி பறிக்கும் கருவி, கனரக வாகன சக்கரங்களில் அடை வைத்துத் தடுக்கும் தானியங்கிக் கருவி, களை எடுக்கும் கருவி, வேர்க்கடலை உதிர்க்கும் கருவி, இருக்கையுடன் கூடிய நடக்கும் கருவி என 8 விதமான கண்டுபிடிப்புகளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார்.
அலை மின்சாரம்
சுதான்சு
எரிபொருள் சிக்கனத்தை ஒவ்வொருவரும் கடை பிடிக்க வேண்டிய சூழலில், கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தினைக் கண்டுபிடித்துள்ளார் சுதான்சு.
டில்லி பொதுப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் சுதான்சு, பழைய பொருள்களை வைத்து இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்த இயந்திரம், தயாரித்த மின்சாரத்தைச் சேமிக்கவும் செய்யும்.
கடற்கரையின் சமமான பகுதியில் இயந்தி ரத்தை வைத்துவிட வேண்டும். இயந்திரத்தின்மீது மோதிச் செல்லும் ஒவ்வொரு அலையிலிருந்தும் ஒரு வோல்ட் மின்சாரம் உற்பத்தியாகும். உற்பத்தியாகும் மின்சாரம் டைனமோ வழியாக பேட்டரியில் சேமிக்கப்படும்.
ஆறுகள் மற்றும் ஏரிகளிலும் இந்த இயந்திரத்தை வைத்து மின்சாரம் தயாரிக்கலாம். 4 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரித்துள்ள இயந்திரத்திற்கு ஷீஷோர் எலக்ட்ரோ ஜெனரேட்டர் என்று சுதான்சு பெயரிட்டுள்ளார்.