அய்ங்கோண வடிவ ஆரஞ்சுப் பழம்
உருண்டை வடிவத்தில்தான் நாம் ஆரஞ்சுப் பழங்களைப் பார்த்துள்ளோம். படத்தில் உள்ளதுபோல அய்ங்கோண வடிவத்தில் உள்ள ஆரஞ்சுப் பழங்களைப் பார்த்துள்ளீர்களா?
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கெசிசுகு நியொமயா, அகிஹொரொ நாகொகா, ஜோ குபத்தா ஆகிய மூன்று விவசாயிகள் சேர்ந்து அய்ங்கோண வடிவ ஆரஞ்சுப் பழத்தை உருவாக்கி உள்ளனர். இதனைப் பெண்டகன் ஆரஞ்சு என்று அழைக்கின்றனர்.
இதற்கு அவர்கள் கொகாகுகெய் இயோகன் (Gokakukei Iyokan) என்று பெயரிட்டிருக்கிறார்கள். கொகாகுகெய் என்றால் அய்ங்கோண வடிவம் என்றும், இயோகன் என்றால் ஜப்பானிய கோடைக்கால ஆரஞ்சு என்றும் பொருள். இதையே கொகாகு, ஈயோகன் என்று வேறுமாதிரி பிரித்துப் படித்தால் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள் என்று பொருள்படும்.
கடந்த ஜனவரி மாதத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் பழங்களுக்கு பிப்ரவரியில் நடக்கவிருந்த கல்லூரி நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் விதத்தில் இப்படிப் பெயரிட்டிருக்கிறார்கள்.
இதற்கு முன்பே ஜப்பானியர்கள் சதுரப் பெட்டி போன்ற தர்பூசணி, ஆட்டின் வடிவ தர்பூசணி எல்லாம் உருவாக்கியிருக்கிறார்கள்.