தீபாவளித் தீமைகள்
– சிகரம்
தீபாவளி வருவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே நாள்காட்டியில் அன்றைய சீட்டை மடித்துவைத்து, தீபாவளிக்கு எத்தனை நாள் உள்ளது என்று கணக்கிடும் ஆர்வத்தை பிஞ்சுகள் மனதிலே இச்சமுதாயம் பதித்துள்ளது.
தீபாவளி என்றால் என்ன? அதன் தத்துவம் என்ன? அது சார்ந்த புராணக் கதை உண்மையா? பொய்யான அக்கதையும் நமக்குப் பெருமை தருவதா? இழிவு சேர்ப்பதா? எதற்காக அதைக் கொண்டாடுகிறோம்? என்று எதுவுமே அறியாமல், வெடியும், மத்தாப்பும், புத்தாடையும், பலகாரமும் ஒருசேரக் கிடைக்கும் ஒரே பண்டிகை என்ற ஈர்ப்பாலேதான் இத்தனை ஆர்வம் பிஞ்சுகளுக்கு ஏற்படுகிறது.
பொதுவாக, ஆரியம் ஆசைகாட்டியே தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது. கடவுளுக்குப் பூசை செய்தால் புண்ணியம்; கோவில் கட்டினால் வாழ்வு சிறக்கும்; பார்ப்பானுக்குக் கொடுத்தால் புண்ணியம் சேரும், தீபாவளி கொண்டாடினால் சுவர்க்கம் கிடைக்கும் என்று ஆசை காட்டியே நம் மக்களை விடாது பின்பற்றச் செய்தனர்.
அத்தோடு வெடியும், இனிப்பும், புதுச்சட்டையும் கிடைக்கச் செய்தால், பிஞ்சுகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் அதைக் கொண்டாடுவர் என்று திட்டமிட்டே இப்பழக்கத்தைப் புகுத்தினர்; புனைந்தனர்.
தீபாவளி ஒரு திருட்டுப் பண்டிகை : தீப + ஆவளி என்ற பண்டிகை சமணர் பண்டிகையாகும். அதைத் தனதாக்கிக் கொண்ட ஆரியம், அதை இந்துக்கள் பண்டிகையாக்க நரகாசுரன் கதையைப் புனைந்தது. 24ஆம் தீர்த்தங்கரர் இறந்தபோது வரிசையாய் விளக்கேற்றி சமணர் வழிபட்டனர். அந்த நாளை, ஒவ்வொரு ஆண்டும் விளக்கு வரிசை வைத்து வணங்கிக் கொண்டாடினர். அதுவே தீபாவளி ஆனது. தீபம் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை. வரிசையாக விளக்கேற்றி வணங்குதல் என்ற பெயர் சமணர் வழிபாட்டிற்கே பொருந்தும்.
நரகாசுரன் கதைக்கும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கும் எப்படிப் பொருந்தும்? சிந்தித்துப் பார்க்க வேண்டும்! பட்டாசு _ வெடிக்கும், இனிப்பிற்கும், புத்தாடைக்கும் என்ன தொடர்பு?
சமணப் பண்டிகையைத் திருடித் தனதாக்கிக் கொண்டாடப்படும் ஆரியப் பண்டிகையான இத்தீபாவளி தரும் தீமைகள் பலப்பல.
இன இழிவு: திராவிடனை ஆரியன் அழித்தான் என்ற கதையை நாம் கொண்டாடுவதன்மூலம் இன இழிவைத் தேடிக் கொள்கின்றோம். எனவே, நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்ளும் கேடு இப்பண்டிகை மூலம் நமக்கு வருகிறது. நம் இழிவை நாமே கொண்டாடுவது எவ்வளவு பெரிய மடமை!
மாசு: காற்று மாசு, ஒலி மாசு, நீர் மாசு, நில மாசு என்று பல மாசுகளை இப்பண்டிகை தருகிறது. வெடி, மத்தாப்பு வெளிப்படுத்தும் புகைமூலம் காற்று முழுமையாக மாசு அடைகிறது. இந்தியா முழுக்க ஒரே நாளில் எல்லா இடங்களிலும் புகை எழுவதால் இந்த நாட்டின் ஒட்டுமொத்தக் காற்று மண்டலமும் மாசு அடைகிறது. இது பல்வேறு கேடுகளை, நோய்களை, அழிவுகளை உருவாக்குகிறது.
வெடிவெடிப்பதால் ஏற்படும் அளவுக்கு அதிகமான ஓசை காது செவிடு, மூளைப் பாதிப்பு, மன அதிர்வு, இரத்த அழுத்தம் போன்றவற்றை உருவாக்குகிறது.
வெடிமருந்துகள் நீரையும், நிலத்தையும் பாழாக்குகின்றன. காசைக் கரியாக்குதல் என்பது தீபாவளிக்கே பொருந்தும்.
தீக்காயம்: வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
பணவிரயம்: தேவையற்ற ஆடம்பரம், அதிகப்படியான செலவுகளால் பணவிரயம் ஏற்படுவதோடு, கடனாளியாகவும் ஆகின்றனர்.
வயிற்றுக் கோளாறு: ஒரே நாளில், ஒரே வேளையில் அளவிற்கு அதிகமாக அதிக உணவுகளை, பலகாரங்களை, இனிப்புகளை உண்பதால் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, மருத்துவச் செலவும் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்: ஒரே நாளில் எல்லோரும் வெளியூர் பயணம் மேற்கொள்வதால் போக்குவரத்துப் பற்றாக்குறை, நெரிசல், தவிப்பு, கூடுதல் கட்டணம் என்று பல கேடுகள் வருகின்றன.
கடைகளில் குவிதல்: எல்லோரும் ஒரே நேரத்தில் கூட்டமாகக் குவிவதால், நெரிசல், களவு, தரமற்ற பொருட்கள் என்று பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற கேடு பயக்கும் தீபாவளியைக் கொண்டாடுவதைக் கைவிட்டு அறிவிற்குகந்த பொங்கல் போன்ற விழாக்களை செலவின்றி, சேதமின்றிக் கொண்டாடி மகிழ வேண்டும்.