குழந்தைகளைக் கவர்ந்த ரோபோ டீச்சர்
தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் தாய்மொழியின் மூலம்தான் எல்லாப் பாடங்களும் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஆங்கிலப் பாடத்தைக் கற்றுக் கொடுக்க அங்கே ஆசிரியரோ, ஆசிரியையோ கிடையாதாம். ஆங்கிலத்தைப் படிக்க அந்தக் குழந்தைகள் விருப்பம் காட்டுவதும் இல்லையாம்.
ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான், தென்கொரியா நாடுகளில் ரோபோ டீச்சரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள். இந்த ரோபோ டீச்சர் வகுப்பறையினுள் சுத்தி சுத்தி வந்து பாடம் எடுக்குமாம். உண்மையான டீச்சர் போலவே ஆனால், திட்டாமல் அடிக்காமல் குழந்தைகளிடையே கொஞ்சிக் கொஞ்சிப் பாடம் நடத்துகிறது ரோபோ.
ஆங்கிலப் பாடம் என்றாலே காத தூரம் ஓடிய குழந்தைகள் ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்துள்ளார்கள். அனைத்துக் குழந்தைகளுக்கும் ரோபோ டீச்சரை ரொம்பப் பிடிச்சுப் போச்சாம். எனவே ஜப்பான், தென்கொரியாவில் குழந்தைகள் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டுமென நிறைய ரோபோ டீச்சர்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போது பிற பாடங்களை நடத்துற ரோபோக்களை உருவாக்கி குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க முயற்சி செய்து வருகிறார்கள்.
அணைக்கும் நாற்காலி
நம்மிடம் அன்பு செலுத்த, அரவணைக்க யாருமில்லையே என்று ஏங்கும் முதியவர்களுக்காக ஜப்பான் நாட்டின் நிறுவனம் அணைக்கும் நாற்காலியினை உருவாக்கி உள்ளது.
தலையில் தொப்பி பொருத்தப்பட்டு சிரித்த முகத்துடன் பொம்மை வடிவில் இந்த சொகுசு நாற்காலி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் உட்காருபவரைத் தனது நீளமான கைகளால் மென்மையாகக் கட்டிப் பிடித்துக் கொள்ளுமாம். அப்போது, தாம் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறோம் என்ற உணர்வு முதியவர்களுக்கு ஏற்படுமாம்.
ஜப்பானிய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் 65 வயதினைக் கடந்தவர்கள் என்பதை நினைவில் நிறுத்தி இந்த நாற்காலியை உருவாக்கி உள்ளனராம்.