தடகள விளையாட்டுகள்
நீளம் தாண்டுதல் (LONG JUMP)
விளையாட்டு வீரர் ஓடிவந்து ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தனது உடல்வலு, வேகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நீண்ட தூரத்தைத் தாண்டிக் குதிப்பதே நீளம் தாண்டுதல் எனப்படும். இது 1896ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஓடிவரும் பாதை (The Runway)
ஓடிவரும் பாதையின் அகலம் 1.22 மீட்டர் இருக்க வேண்டும். தூரம் எல்லையற்றது எனினும் 40 முதல் 45 மீட்டர் இருப்பது நல்லது.
மிதித்தெழ உதவும் பலகை (Take off Line)
மிதித்தெழ உதவும் பலகையை ஓடிவரும் பாதையின் தரைக்குச் சமமாகவும், தாண்டி விழும் பரப்பின் உயரத்திற்குச் சமமாகவும் இருப்பதுபோல மண்ணில் புதைக்க வேண்டும். தாண்டி விழும் பரப்பிற்கு மிக அருகாமையில் இருக்கிற மிதித்தெழ உதவும் பலகையின் முன்புற முனையானது மிதித்தெழும் கோடு (Take off Line) எனப்படுகிறது.
மிதித்தெழும் கோட்டினை ஒட்டிப் பின்புறமாக பிளாஸ்டிசின் என்ற பலகை வைக்கப்படும் அல்லது பிளாஸ்டிசின் என்ற பொருளுக்கு இணையான பொருளால் தயாரிக்கப்பட்ட பலகை பதிக்கப்பட வேண்டும். அதன்மீது தாண்டுபவரது கால் பட்டால், அங்கே கால் பதிந்த அடையாளங்களைக் காட்டவே பிளாஸ்டிசின் பலகை பயன்படுகிறது.
தாண்டி விழும் பரப்பு (Landing Area)
தாண்டி விழும் மணற்பரப்பின் அகல அளவு குறைந்தது 2.75 மீட்டராவது இருக்க வேண்டும். ஓடிவரும் பாதையின் மய்யப் பகுதியும் தாண்டி விழும் பரப்பின் மய்யப் பகுதியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பதுபோல், தாண்டிவிழும் பரப்பினை அமைத்திட வேண்டும்.
அளக்கும் முறை: எந்த இடத்தில் போட்டியாளரின் உடலின் ஏதாவது ஒரு உறுப்புத் தொட்டதோ அந்த இடத்தைத் தெரிந்து கொண்டு, அந்த இடத்திலிருந்து தாண்டுகின்ற கோடு வரையிலும் உள்ள இடைப்பட்ட தூரத்தை அளக்க வேண்டும். ஒருவர் நேராகத் தாண்டவில்லையெனில், தாண்டுகின்ற கோட்டினைப் பக்கவாட்டில் நீட்டிவிட்டு, அங்கிருந்து தாண்டி விழுந்த இடத்திற்கு நாடாவை நேராகப் பிடித்து அளக்க வேண்டும்.
தாண்ட உதவும் பலகையின் உயரம், மணற்பரப்பின் உயரம், தாண்டி விழுகின்ற பரப்பின் உயரம் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதுபோல வைத்திருக்க வேண்டும்.
விதிகள்: பெரும்பாலான போட்டிகளில் ஒவ்வொருவருக்கும் 3 முறைகள் தாண்டும் வாய்ப்புகள் வழங்கப்படும். பல போட்டியாளர்கள் பங்கு பெறும் போட்டிகளில் 2 சுற்றுகளாக நடைபெறுவதும் உண்டு. முதற்சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் கலந்து கொள்வர்.
இறுதிச் சுற்றில் போட்டியிடும் போட்டியாளர் ஒருவர் தாண்டும் அதிக தூரம் கணிக்கப்படும்போது, அவர் முதல் சுற்றில் தாண்டிய தூரங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.