மெயில் ரன்னர்(Mail Runner)
இந்திய அஞ்சல் சேவையினை இப்போது நாம் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். அதில் பல்வேறு மாற்றங்கள் அடைந்து இன்றைய நவீன நிலைக்கு அவசரத் தபால் (Speed Post) வரைக்கும் உருமாறியுள்ளது. முதன்முதலில் இந்த அஞ்சல்துறை எப்படித் தொடங்கப்பட்டது தெரியுமா? வணிகநோக்கில் முதலில் உள்ளேவந்து பிறகு தனித்தனிக் குழுக்களாக இருந்த இந்தியத் தீபகற்பப் பகுதியை முற்றிலுமாகக் கைப்பற்றி ஆட்சி செய்துவந்த கிழக்கிந்தியக் கம்பெனியரால் தொடங்கப்பட்டது.
இது சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லி ஆகிய நகரங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது. இந்த அஞ்சல் சேவை எப்படி நடைபெற்றது தெரியுமா? அஞ்சல் பையைச் சுமந்து சென்று ஒப்படைப்பதற்கு எட்டு மைல் கல்லிற்கு ஓர் ஆள் என்று நியமிக்கப்பட்டனர். அவர்கள் காலையில் தொடங்கி மாலைக்குள் இந்தத் தொலைவைக் கடக்க வேண்டும். மலைப்பகுதியாக இருந்தால் ஆறு மைல்கள் செல்ல வேண்டும் அதற்காக நடை, ஓட்டப் பயிற்சி அளிக்கப்பட்டது.
நாள்தோறும் நடைபெறும் இந்தச் சேவைக்கு இடையூறாக இயற்கைப் பேரிடர், விலங்குகள் தொல்லை, வழிப்பறிக் கொள்ளையர்கள் என மூன்றுவகையான இடையூறுகளை இவர்கள் சந்தித்தாக வேண்டும். இவற்றைச் சமாளிக்கும் விதமாக நன்கு வாட்டசாட்டமான உயரமான ஆட்களையே தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுப்பார்கள். அவர்களின் ஒருகையில் நீளமான ஈட்டி ஒன்று இருக்கும். அந்த ஈட்டியால் யாரையும் கொல்லக்கூடாது.
மாறாக, பச்சிலை தடவிய ஈட்டிமுனையால் காயத்தை ஏற்படுத்தலாம். அந்தக் காயம் ஆறவே ஆறாது. அதனை வைத்து அந்தத் திருடர்களைக் கண்டுபிடித்துவிடலாம். இவர்களுடைய இன்னொரு கையில் காற்றடித்தால் அணைந்துபோகாத அளவிற்கு நன்கு பாதுகாக்கப்பட்ட விளக்கு ஒன்று இருக்கும்.
தோளில் பெரிய முரட்டுப்பை ஒன்று கடிதங்களையும் சிறிய அளவில் உள்ள கட்டுகளையும் (Parcel) சுமந்துகொண்டு பரபரப்பாகக் கொண்டு சேர்க்குமிவர்களுக்கு அந்தக் காலத்தில் வழங்கப்பட்ட பெயர் மெயில் ரன்னர் என்பதாகும்.
கிழக்கிந்தியக் கம்பெனியாக இருந்து ஆங்கிலேயர் ஆட்சியாக விக்டோரிய மகாராணியால் மாற்றப்படும் வரை நமது நாட்டின் அஞ்சல் முறை ஏறத்தாழ 30 ஆண்டுகள் இப்படித்தான் நடைபெற்றது. எல்லாம் சரி, மக்கள் எப்படி நம்பினார்கள்?
கிழக்கிந்தியக் கம்பெனியால் அலுவலக மற்றும் வியாபாரம் தொடர்பான தபால்கள், பொருட்கள் போன்றவற்றை யாரோ ஒருவரை நம்பி எப்படிக் கொடுப்பது என்ற கேள்விக்குப் பதிலாக (கிழக்கிந்தியக் கம்பெனி முத்திரை) கிழக்கிந்திய நிறுவனத்தார் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்கள் முதன்முதலாக On Company என்ற முத்திரை வாசகத்தைப் பயன்படுத்தினர்.
இந்த முத்திரை கொண்ட பார்சல் அல்லது தபால்கள் எங்கு இருந்து வந்தாலும் முத்திரையைப் பிரிக்காமல் அருகில் உள்ள கிழக்கிந்தியக் கம்பெனி அலுவலகத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த முத்திரை மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டது.
– இசையின்பன்