மலபார் புனுகுப் பூனை(Malabar large spotted Civet)
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடருக்குக் கீழே உள்ள மலபார் கரைக் காடுகளின் அடர்ந்த சமவெளிகளிலும் அவற்றை ஒட்டிய மலைச்சாரல்களிலும் புனுகுப் பூனைகள் வாழ்ந்துள்ளன. மலபார் மற்றும் திருவாங்கூரின் கரையோர மாவட்டங்களிலும் பரவலாகக் காணப்பட்டுள்ளன.
காடுகள் அழிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் மலபார் காடுகள் ஆங்காங்கே சிறுசிறு பகுதிகளாக மாறிவிட்டன. எனவே, அரிதாகக் காணப்படும் இந்தப் பூனைகள் முந்திரி பயிர்செய்யும் நிலங்களில் உள்ளூர் மக்களால் வேட்டையாடப்பட்டுள்ளன. 1987இல் வடகேரளாவின் நீலாம்பூருக்கு அருகில் ரப்பர் தோட்டப் பகுதியில் 2 தோல்கள் கிடைத்துள்ளன. மேலும் 1990களில் சில தோல்கள் கிடைத்துள்ளன.
இவை அடர்ந்த புல்வெளியிலும், புதர்க் காடுகளிலுமே காணப்பட்டுள்ளன. இந்தியாவில் வாழும் புனுகுப் பூனை இனங்களில் அரிதாகக் காணப்படும் இதனை மலையாளத்தில் சாவாதி வெருகு என்றும் கன்னடத்தில் சிரதே பெக்கு என்றும் அழைக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்த இனம் அருகிவிட்டது.
எனினும் 1960 வரை இந்த இனப் பூனைகளிலிருந்து புனுகு பெறப்பட்டுள்ளது. புனுகு என்பது இதன் குதச் சுரப்பிலிருந்து வெளிவருவது. மிக்க நறுமணம் கொண்டது. நறுமண எண்ணெய் தயாரிப்பு, ஆயுர்வேத மருத்துவம் மற்றும் வாசனையூட்டவும் பயன்படுத்தப்படும்.
இரவில் நடமாடும் ஊனுண்ணி விலங்கான இது, தனித்து வாழக் கூடியதும் சண்டையிடும் இயல்பினைக் கொண்டதும் ஆகும். தரையிலேயே உணவினைத் தேடக்கூடியது. சிறிய விலங்குகள், ஊர்வன, மீன்கள், பறவைகளின் முட்டைகள் மற்றும் காய்கறிகள் சிலவற்றை உணவாக உட்கொள்கின்றன.
மங்கிய சாம்பல் நிறத் தோலினையுடைய இதன் உடலில் தெளிவற்ற நிலையில் உள்ள புள்ளிகள் கோடுகள் போலத் தோற்றமளிக்கும். 8-_லிருந்து 9 கிலோ எடை இருக்கும். பாலூட்டி பிரிவினுள் விவெர்ரிடே (Viverridae) குடும்பத்தைச் சோந்தது. சென்னையில் உள்ள எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் பாடம் செய்யப்பட்ட புனுகுப் பூனை உள்ளது.
ஆப்பிரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் புனுகுப் பூனைகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன.