மூங்கில் பயணம்
ஓடுகின்ற ஆற்றைக் கடந்து செல்ல வேண்டுமானால் நாம் எப்படிச் செல்லலாம்? நீந்திச் செல்லலாம், படகு, பரிசில் அல்லது ஓடத்தில் செல்லலாம் என்று அறிந்திருப்பீர்கள். ஆனால், மூங்கிலைப் பயன்படுத்தி ஆற்றினைக் கடப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சீன நாட்டில் ஓடும் லி(Li) ஆற்றினை இரண்டு மூங்கில்களைப் பயன்படுத்தி அங்குள்ள மக்கள் கடந்து செல்கின்றனர். கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து இம்முறை நடைமுறையில் உள்ளது. தற்போதுள்ள யாங்டி (Yangdi) நகரிலிருந்து சிங்பிங் (Xingping) நகர் வரையுள்ள லி ஆறு ஓடும் 22 கி.மீட்டர் தூரத்தை மூங்கில் பயணத்தின் மூலம் மக்கள் கடந்து செல்கின்றனர்.
யாங்டியிலிருந்து சிங்பிங் செல்ல சாலை வழியினைப் பயன்படுத்தினால் 37 கி.மீட்டர் பயணம் செய்ய வேண்டும். அதற்கு ஒரு மணி நேரம் ஆகுமாம். ஆற்றின் வழியாகச் சென்றால் 40 நிமிடத்தில் சென்றுவிடலாமாம்.
இந்த மூங்கில் பயணத்தில் திருமண ஊர்வலமும் நடைபெறுகிறது. அறுவடைக் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும்போது மூங்கில் படகுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.