முழு வட்ட வானவில் பார்த்திருக்கிறீர்களா?
வானவில்லைப் பார்ப்பது என்றால், சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் ஆனந்தமான ஒன்றுதான். வண்ணமயமான அதன் ஏழு நிறங்கள்; மா…பெரும் வில்லைப் போன்ற அதன் தோற்றம் இதெல்லாம் தெரிந்ததுதான்.
வானவில் எப்படித் தோன்றுகிறது என்றுகூட நாம் அறிந்ததுதான். சில நேரம் வானவில்லின் அருகிலேயே சற்று மங்கிய நிலையில் இன்னொரு வானவில் இருக்கும். அடுத்தமுறை அப்படிப் பார்க்க நேர்ந்தால் சற்று கூர்ந்து கவனியுங்கள்.
மங்கிய நிலையில் தெரியும் இரண்டாவது வானவில்லின் நிறங்கள், பளிச்சென்று தெரியும் வானவில்லின், நிறவரிசையின் தலைகீழ் வரிசையாக இருக்கும். அதாவது தண்ணீரில் நம்மை நாமே பார்ப்பதுபோல.
அதெல்லாம் சரி, அடுத்தமுறை பார்க்கும்போது நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். வானவில் எப்போது பார்த்தாலும் அரை வட்டமாகவே தெரிகிறதே. ஏன்?
என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
நல்ல கேள்விதான்.
வானவில் அரை வட்டமல்ல. முழுவட்டம்தான். அரைவட்டமாக இருப்பதே இவ்வளவு பெரிதாகத் தெரிகிறதே, முழுவட்டமென்றால் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? அதைப் பார்த்தால் தெரிந்துவிடுகிறது. அவ்வளவுதான்.
வானவில்லை முழுவட்டமாகப் பார்க்க முடியுமா?
நிச்சயமாக முடியும். வானவில் தோன்றுகிற சூழலில், விமானத்தில் பயணம் செய்தபடியே பார்த்தால், வானவில் பெரி…ய்ய முழுவட்டமாகத் தெரியும்.