நோபல் பரிசு 2014
நோபல் வென்ற பிஞ்சு
ஆல்பிரட் நோபல் என்ற அறிவியல் அறிஞரின் நினைவாக நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கு இப்பரிசு கொடுக்கப்படுகிறது.
ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். உலகிலேயே உயர்ந்த பரிசாகக் கருதப்படும் இதன் பரிசுத் தொகை 8.2 கோடி ரூபாயாகும்.
மூளை செல் அமைப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்த இங்கிலாந்து _ அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜான் ஓ கீப் மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ இணையர் மே பிரிட் மோசர், எட்வர்ட் மோசர் ஆகியோர் மருத்துவத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளனர்.
எல்.இ.டி. பல்பு கண்டுபிடித்த ஜப்பான் நாட்டு அறிஞர்கள் இசாமு அகசாகி, ஹிரோசி அமனோ, சுஜி நகமுரா ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
சாதாரண குண்டு பல்புகள் 1000 மணி நேரமும் வெள்ளை நிற டியூப்லைட் மற்றும் சி.பி.எல். பல்புகள் 10 ஆயிரம் மணி நேரமும் எரியும் திறன் பெற்றவை. ஆனால், எல்.இ.டி. பல்புகளோ 1 லட்சம் மணி நேரம் எரியும் திறன் கொண்டவை.
இந்த எல்.இ.டி. பல்புகள் 20 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டாலும், தற்போது நவீன மாற்றத்துடன் பிரகாசமான விளக்குகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மனிதனுக்கு மிகுந்த பயன்தரும் வகையில் இருப்பதுடன் சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வேதியியலுக்கான நோபல் பரிசு எரிக் பெட்ஜிக், வில்லியம் மோர்னர், ஸ்டீபன் ஹெல் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. மைக்ரோஸ்கோப் எனப்படும் நுண்ணுயிர் நோக்கியின் திறம்பட்ட செயல்பட்டிற்கான அறிவியல் ஆராய்ச்சிக்காக வழங்கப்பட உள்ளது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு நாட்டு நாவலாசிரியர் பேட்ரிக் மோடியானோவுக்கு வழங்கப்பட உள்ளது. இவரது பெரும்பாலான படைப்புகள் நினைவு, அடையாளம் மற்றும் குற்ற உணர்ச்சி ஆகியவற்றை மய்யப்படுத்தியே இருக்கும்.
இவரது படைப்புகளில் பல ஆங்கிலத்திலும் பிற அய்ரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள போதிலும் பிரான்சுக்கு வெளியே இவர் பரவலாக அனைவராலும் அறியப்படவில்லை. தற்போது இந்தப் பரிசின் மூலம் உலக அளவில் பிரபலமாகியுள்ளார். இதுவரை இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் இவர் 11 ஆவது பிரெஞ்சு நாட்டவர் ஆவார்.
அமைதிக்கான நோபல் பரிசு இந்திய நாட்டைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி மலாலாவுக்கும் வழங்கப்பட உள்ளது.
குழந்தைகள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் அனைத்துக் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் போராடி வருவதற்காகவும் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக குழு தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டின் ஜீன் டிரோல்-_க்கு வழங்கப்பட உள்ளது. ஒரு குறிப்பிட்ட சந்தையில், குறிப்பிட்ட மிகவும் வலுவான அல்லது போட்டியே இல்லாத நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஆதிக்கம் செலுத்தவதைத் தடுக்கக் கூடிய வழிமுறைகளை, வழிகாட்டுதல்களை வரையறுத்துள்ளார் டிரோல். இவரது ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பொருளாதாரச் சிக்கல் ஏற்படும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளையும் அவர் வகுத்துள்ளார். அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளையும் டிரோல் வகுத்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.