உவகையூட்டும் உப்புச் சுரங்கம்(Salina Turda)
மிகப் பழைமையான உப்புச் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்குப் பூங்காவே சலினா டுர்டா ஆகும். ரோம் நாட்டின் டுர்டா நகரத்தில் அமைந்துள்ள இது, உலகின் 22ஆவது அழகான சுரங்கமாகத் திகழ்கிறது.
இந்தச் சுரங்கத்தில் நடைபெற்ற உப்பு உற்பத்தியானது 1932ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது வெடிகுண்டுகள் வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1992இல் ஓர் அழகிய அருங்காட்சியமாக பந்து விளையாட, மினி கோல்ஃப் விளையாட, ஸ்பா மற்றும் படகு சவாரி செய்யும் வசதிகளுடன் நிலத்தடி ஏரி அமைக்கப்பட்ட கேளிக்கைப் பூங்காவாக திறக்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகமானது மூன்று சுரங்கங்களை உள்ளடக்கியுள்ளது. முதல் சுரங்கமானது டெரெசியா சுரங்கம் (Terezia Mine) என அழைக்கப்படுகிறது. இது 90 மீட்டர் உயரமும் 87 மீட்டர் அகலமும் உடையது. ஆழம் 112 மீட்டர் ஆகும். அடுத்து உள்ள ருடோல்ஃப் (Rudolf) சுரங்கம் 80 மீட்டர் நீளமும் 50 மீட்டர் அகலமும் 42 மீட்டர் ஆழமும் கொண்டது.
இதில், 172 படிகள் உள்ளன. மூன்றாவதாக உள்ள கைசீலா (Gizela) சுரங்கத்தில் மாபெரும் அழகிய அறைகள் உள்ளன. இவை அனைத்தும் கைகளாலேயே தோண்டப்பட்டவை ஆகும். மேலும், சுரங்கம் முழுவதுமே, எந்தவிதமான வெடிபொருட்களும் பயன்படுத்தப்படாமல் கைகளையும், இயந்திரத்தினையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சுரங்கத்தின் உட்பகுதியில்தான் இந்தக் கேளிக்கைப் பூங்கா உள்ளது. எளிதில் நம்பமுடியாதபடி உள்ளே உள்ள வேலைப்பாடுகளும், கட்டியுள்ள அமைப்பு முறைகளும் மிகவும் அழகாக அமைந்துள்ளன. அழகை ரசிப்பவர்களுக்கு இதைப் பார்க்க ஒரு நாள் போதாது.