பிரபஞ்ச ரகசியம் – 17
விண்ணில் விரிந்த சிறகு!
எச் டி 209458B கோள்
கடந்த தொடரில் சூரியன் மற்றும் இரவு வானில் நமது கண்களுக்குத் தெரியும் விண்மீன்கள் அனைத்தும், மய்யப்பொருள் ஒன்றை நோக்கி வேகமாகப் பயணிக்கின்றன என்று கூறியிருந்தோம். அந்த மய்யப்பொருளைப் பார்க்கும் முன்பு நவம்பர் மாதம் உச்சிவானில் தெரியும் விண்மீன் குழுமம் ஒன்றை நாம் அறிந்து கொள்ளலாம். முக்கியமாக, தென்னிந்தியாவில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மேகமூட்டம் இல்லாத இரவில் வானம் மிகவும் தெளிவாகத் தெரியும்.
நகரங்களை விட்டு தொலைவில் உள்ள கிராமங்களில் வானம் மேலும் அழகாகத் தெரியும். இம்மாதம் முழுவதும் வானத்தின் உச்சியில் பறவை சிறகு விரித்துப் பறப்பது போன்ற ஒரு விண்மீன் மண்டலம் காட்சி தரும். இந்த விண்மீன் மண்டலம் தமிழில் அன்ன விண்மீன் மண்டலம் என்றும் ஆங்கிலத்தில் சைனஸ் விண்மீன் மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் தெரியும் வடதிசைத் துருவ விண்மீனான இது, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை வடக்குக் கீழ் வானில் தெரியும்.
அப்போது இந்த விண்மீன் மண்டலம் முழுமையாகத் தெரியாமல் பாதிவடிவில் தெரிவதால் இதை வடதுருவ சிலுவை விண்மீன் மண்டலம் என்றும் அழைப்பார்கள். செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வானின் உச்சியில் வருவதால் இது சிறகு விரித்துப் பறக்கும் அன்னப் பறவையைப் போல் தெரியும். முக்கியமாக நிலநடுக்கோட்டுக்கு அருகில் உள்ள நாடுகள் அனைத்திலும் இந்த அழகிய விண்மீன் மண்டலம் முழுமையான காட்சி தரும்.
இதைக் கண்டறிய நாம் அதிகச் சிரமப்படத் தேவையில்லை, நமது வீட்டு மொட்டைமாடியில் தலைக்கு மேலாக மேற்குப் பகுதியில் பார்த்தோமானால் இந்த விண்மீன் மண்டலம் நம் கண்களுக்கு விருந்தாகும். இந்த விண்மீன் மண்டலத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்ட விண்மீன்களை நமது அறிவியல் அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவற்றுள் 84 விண்மீன்கள் தங்களுக்குக்கென்று நமது சூரியனைப் போல் பல கோள்களைக் கொண்டுள்ளன. மற்றவை இரட்டை மற்றும் புதிதாகத் தோன்றிய விண்மீன்கள் ஆகும்.
அன்னப் பறவை விண்மீன் மண்டலம்
அன்னவடிவ விண்மீன் மண்டலத்தின் வால் பகுதியில் இருக்கும் ஆல்பா சிக்னி (Alpha Cygni) என்ற தெனாப் (Deneb) உள்ளது. தெனாப் என்பதற்கு அரபு மொழியில் வால் என்று பொருள். அன்னப்பறவை போன்ற தோற்றம் கொண்ட விண்மீன் மண்டலத்தின் வாலில் இந்த விண்மீன் இருப்பதால் இதற்கு தெனாப் என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த விண்மீன் இரவு வானில் அதிக ஒளியுடன் திகழும் 19 விண்மீன்களுள் ஒன்றாகும், இதுவரை நமது அறிவியலாளர்கள் கண்டறிந்த விண்மீன்களிலேயே மிகப்பெரிய விண்மீனும் இதுதான். எவ்வளவு பெரியது என்றால், நமது சூரியனைப்போல் சுமார் ஒரு லட்சம் மடங்கு பெரியது. அதாவது, தெனாப் விண்மீனை ஒரு கால்பந்தாக எடுத்துக் கொண்டால் நமது சூரியன் அதன் அருகில் வைக்கப்பட்ட கடுகைப் போல்தான் காட்சி தரும். இந்த தெனாப் வெளிர் நீலநிறம் கொண்ட விண்மீனாகும்.
விண்மீன் ஒப்பீடு
இந்த விண்மீன் மஞ்சள் அல்லது சிவப்பு நிறந்தில் இருந்தால் பகலில்கூட மெல்லிய புள்ளியாகக் காட்சிதரும் விண்மீனாக மாறியிருக்கும். நாம் முன்பு பார்த்த தென்அமெரிக்க ஒளிர் முகில் கூட்டம் இந்த தெனாப் விண்மீனுக்கு அருகில் கிழக்குப் பகுதியில் காட்சி தரும். அறிவியலில் ஆர்வமுள்ள குழந்தைகள் நகர வெளிச்சத்தில் இருந்து விலகி கிராமப்புறங்களுக்குச் சென்று சாதாரண தொலைநோக்கியில் பார்த்தால்கூட தெனாப் அருகில் தென்அமெரிக்க ஒளிர்முகில் கூட்டம் தென்படும்.
இந்த தெனாப் விண்மீன் 1825 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இந்தத் தொலைவிற்கு நமது ரேடியோ சமிக்கைகள் சென்றடைய குறைந்தபட்சம் 60 கோடி ஆண்டுகள் ஆகலாம். அன்னப்பறவையின் தலையில் பீட்டா சிக்னி அல்லது அல்பிரியோ என்ற விண்மீனைக் காணலாம். டெல்டா சிக்னி மற்றும் எப்சிலான் சிக்னி போன்றவை அன்ன விண்மீன் மண்டலத்தில் இறக்கையின் இடம் மற்றும் வலம் உள்ள விண்மீன்களாகும். நடுவில் காமா சிக்னி என்ற விண்மீன் உள்ளது.
பறக்கும் குதிரை விண்மீன் மண்டலம்
இந்த அய்ந்து விண்மீன்களும் சேர்ந்து அன்னப்பறவையாகக் காட்சியளிக்கின்றன. இந்த அய்ந்து விண்மீன்களில் பீட்டா அல்பிரியோ என்ற விண்மீன் மிகவும் மங்கலான விண்மீனாகும். இதைத் தொலைநோக்கி கொண்டு பார்க்கும் போது இரட்டை விண்மீன்கள் புலப்படும். இந்த பீட்டா சிக்னி அல்லது அல்பிரியோ விண்மீனுக்கு அருகில் உள்ள விண்மீன் அல்பிரியோ பி என்ற பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
இதில் குறிப்பிடத்தக்க விண்மீனான சி (Chi) சிக்னி பொலிவு மாறும் விண்மீனாகும் சுமார் 400 நாட்களுக்கு ஒளி குன்றியும் அடுத்த 400 நாட்களுக்கு அதிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கிறது, தற்போது இந்த சி சிக்னி மிகவும் பிரகாசமாக தென் இந்திய வானில் காட்சி தருகிறது, அன்னப்பறவை விண்மீன் மண்டலம் நமது பெருவெளியின் மூன்றாவது எல்லையாகும்.
முதலாம் எல்லை நமது சூரியக் குடும்பத்தின் எல்லை ஆகும். இரண்டாவது நமக்கு அருகில் உள்ள பிராக்ஸிமா செண்டாரி விண்மீனின் ஒளி எல்லை ஆகும். அடுத்த எல்லை இந்த அன்னப்பறவை வடிவ விண்மீன் மண்டலம் ஆகும். முதல் எல்லையை நமது வயோஜர் 1 விண்கலம் 12 ஆண்டுகளுக்குப் பின்பு கடந்தது.
இரண்டாம் எல்லையை மனிதன் உருவாக்கிய விண்கலம் கடக்க 500 ஆண்டுகள் முதல் 700 ஆண்டுகள் ஆகலாம். மூன்றாவது எல்லையை நமது விண்கலம் அதி உச்ச வேகத்தில் சென்றால் குறைந்த பட்சம் 60 கோடி ஆண்டுகள் ஆகும். இம்மாத இரவில் நமது கண்களுக்குத் தெரியும் மற்றொரு விண்மீன் மண்டலம் பறக்கும் குதிரை விண்மீன் மண்டலம் ஆகும். இதனை ஆங்கிலத்தில் பெகாசசு மண்டலம் என்று அழைப்பார்கள். அக்டோபர், நவம்பர் மாதங்களில் மேற்குப்பகுதியில் சிறிது சரிந்தார்போல் காணப்படும்.
அன்ன விண்மீன் மண்டலத்தைத் தொடர்ந்து கிழக்குத் திசையில் நமது பார்வையைச் செலுத்தினோம் என்றால், முதலில் பளிச்சென முக்கோண வடிவில் மூன்று நட்சத்திரங்கள் நம் கண்ணிற்குப் புலப்படும். சில நிமிடங்களுக்குப் பிறகு இதர விண்மீன்களும் நம் கண்களுக்குப் புலப்படும். அன்னப் பறவை மற்றும் பறக்கும் குதிரை விண்மீன் மண்டலம் இவ்விரண்டையும் நாம் அறிவியலாளர் உதவியின்றி அதே வேளையில் வெறும் கண்களாலேயே கண்டு ரசிக்கலாம்.
பறக்கும் குதிரை விண்மீன் மண்டலத்தின் அடையாளம் முதலில் தெரியும். இதன் மூன்று முக்கோண வடிவ விண்மீன் தொகுப்பிற்கு மேற்குத்திசையில் பெரிய சதுரவடிவ விண்மீன் உள்ளது. கிழக்குத் திசையை நோக்கிய இரண்டு விண்மீன்களின் தொடர்ச்சியாக சில சில விண்மீன்கள் புலப்படும். இவ்விண்மீன்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது சிறகு முளைத்த குதிரை ஒன்று தனது முன்னங்கால்களைத் தூக்கிப் பறப்பது போல் தோன்றும்.
இந்த அன்னவடிவ விண்மீன் மண்டலம் மற்றும் பறக்கும் குதிரை விண்மீன் மண்டலம் இரண்டுமே இந்திய ஜோதிடப் புனைக்கதைகளில் வரும் 12 விண்மீன் மண்டலங்களுக்குள் (இராசி) அடங்காது. இந்தப் பறக்கும் குதிரை விண்மீன் மண்டலத்தின் கால்பகுதியில் முழு நிலவு பயணிக்கும் போது புரட்டாசி மாதம் பிறக்கும். பெகாசசு (Pegasus) விண்மீன் மண்டலத்தைப் பற்றி வானியல் அறிஞர் ஜான் ஹர்ஷல் ஆய்வு செய்தார்.
இரவு வானில் விண்மீன் மண்டலங்கள்
17ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து ஆய்வு செய்து வந்தார். அமெரிக்காவின் விண்வெளிவீரரும், வான் இயற்பியல் பேராசிரியருமான கஃப்ரி மெக்சி, மற்றும் மிகல் மேயர் இருவரும் இணைந்து இந்தப் பறக்கும் குதிரை பிடரிபோல் காட்சிதரும் பகுதியில் உள்ள எச்.டி. 209458 என்ற விண்மீனைத் தொடர்ந்து ஆய்வு செய்தனர்; இந்த ஆய்வின் இறுதியில் எச்.டி. 209458 என்ற விண்மீன் தனக்குள் மூன்றுக்கும் மேற்பட்ட கோள்களைக் கொண்டுள்ளது தெரியவந்தது.
எச்.டி. 209458 என்பது பெகாசசு என்ற விண்மீன் குழுவில் எட்டாவது இடத்தில் உள்ள விண்மீன் ஆகும். இவ்விண்மீன் கிட்டத்தட்ட நமது சூரியனைப் போன்ற அளவுகொண்ட மஞ்சள் நிறமுள்ள சிறியவகை விண்மீனாகும். இந்த விண்மீன் 150 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளதால், சாதாரணமாக இதனை நாம் காண முடியாது.
அவற்றிற்கு முறையே எச். டி. 209458 A, B, C எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதில் எச்.டி. 209458B என்ற கோள் தனது வளிமண்டலத்தை நீராவியால் நிரப்பி உள்ளது. இங்கு தரைப்பகுதி கொதிநிலைக்கு ஏற்ப வெப்பமாக இருப்பதால் பனிக்கட்டிகள் ஆவியாகி இதன் ஈர்ப்பு விசை காரணமாக நீராவி மேகமாக மாறி இக்கோளை மூடியுள்ளது.
எச்.டி. 209458 விண்மீனும் அதன் கோளும்
தற்போதுவரை நமது அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பில் நமக்குத் தெரிய வந்தது இவ்வளவே. நமது பூமியில் இதே போன்ற வெந்நீர் ஊற்றுப்பகுதியில் உள்ள நீராவியாக இருக்கும் சூழலில் சில பாக்டீரியங்கள் வாழ்வதை வதைத்து. இந்தக் கோளில் பாக்டீரியங்கள் மற்றும் அதை ஒட்டிய பல செல் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளனர்
பெகாசசு என்றால் அரபு மொழியில் அடங்காமல் இருக்கும் குதிரை என்று பொருள், இம்மண்டலத்தில் உள்ள இதர விண்மீன்களின் பெயர்கள்:
மார்க்காபு (குதிரைச் சேணம்) என்ற ஆல்பா பெகாசசு α, சியாட் (கால்) என்ற பீட்டா பெகாசசு β, ஆல்ஜெனிப் (விலா) என்ற காமா பெகாசசு γ, எனிப் (குதிரையின் மூக்கு) என்ற எப்சிலான் பெகாசசு ε,, ஓமம் (உயர்ந்த சிறகு) என்ற சீட்டா பெகாசசு ξ, , மாட்டார் (தலை) என்ற ஏட்டா η,
, பாகம் (கால்கள்) என்ற தீட்டா θ .
நவம்பர் மாத இரவில் இந்த அழகிய இரண்டு விண்மீன் மண்டலங்களைக் கண்டு ரசித்துவிட்டு, இன்னும் அதிக தூரத்தில் பயணித்து நமது பால்வெளி மய்யத்தை அடையலாம்.