சீதாப் பழம்
தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் பள்ளத்தாக்குப் பகுதிகளான பெரு, ஈக்வடாரைத் தாயகமாகக் கொண்டது சீதாப் பழம். இதன் தோல் பகுதி கடினமானதுபோல காணப்படினும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாகும்.
அன்னோநேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் அனோனோ செரிமோலோ என்பதாகும். 4 வகையான சீதாப் பழங்கள் இருப்பினும், இந்தியா உள்ளிட்ட தென்ஆசிய நாடுகளில் அனோனா ரெடிகுலாடா வகைப் பழங்களே விளைகின்றன.
சீதாப் பழம் மாம்பழத்திற்கு நிகரான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. 100 கிராம் பழச்சதையில் 75 கலோரி ஆற்றல் உள்ளது. கெட்ட கொழுப்பு இல்லை. நார்ச்சத்து 3 கிராம் உள்ளது. இது, குடல் பகுதியில் கெட்ட கொழுப்பினை உறிஞ்சி அகற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வைட்டமின் சி உள்ளது. ஆசிடோஜெனின் குழும துணை ரசாயனப் பொருள் சிறந்த நோய் எதிர்ப்புப் பொருளாகச் செயல்படுகிறது. புற்றுநோய் மற்றும் மலேரியா தடுப்பு ரசாயனப் பொருளான சைடோடாக்சின் மூலக்கூறு உள்ளது.
சோடியம், பொட்டாசியம், இரம்பு, மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் போன்ற தாது உப்புகள் சிறிதளவு உள்ளன. ரத்தத்தை விருத்தி செய்வதிலும் இரத்த சோகையைக் குணப்படுத்துவதிலும் பயன்படுகிறது. இதய நோய் வராமல் தடுப்பதுடன் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது.
தீமை தரும் பிரீ_ரேடிக்கல்களை உடலிலிருந்து அகற்றுகிறது. இதில் உள்ள வைட்டமின் பி மூளையின் செயல்பாட்டில் முக்கியப் பங்காற்றுவதுடன் மன அழுத்தத்தையும் குறைக்கவல்லது. வைட்டமின் ஏ கண் பார்வைக்கு உறுதுணையாக உள்ளது.