செவ்வாய் செல்லத் துடிக்கும் பிஞ்சு
செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய செவ்வாய்க் கலன் (மங்கள்யான்) சுற்றிக் கொண்டிருப்பதை கடந்த பெரியார் பிஞ்சு இதழில் படித்தபோது பலர் மனதிலும் பல்வேறு விதமான கனவுகள் கற்பனைகள் தோன்றியிருக்கும்.
அந்தக் கனவுகளை நனவாக்க முனைந்துள்ளார் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தைச் சேர்ந்த 13 வயதுப் பிஞ்சு அலிசா கார்சன். செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதுதான் இந்தப் பிஞ்சின் ஆசையாம். தனது ஆசையை நிறைவேற்றிச் சாதனை படைக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மய்யமான நாசாவில் பயிற்சி பெற்று வருகிறார் அலிசா கார்சன்.
மூன்று வயதிலேயே தன் தந்தையிடம் விண்வெளியினைப் பற்றிப் பல கேள்விகளை எழுப்பியுள்ளார் கார்சன். தொடர்ந்து இதுபற்றிப் பேசிய விவாதங்களின்போது ஒருநாள், தான் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளராக விரும்புவதாகத் தெரிவித்ததுடன், செவ்வாய் கிரகம் சென்று வந்த முதன்மையான நபராக தான் திகழ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளில் ஸ்பெயின், பிரான்சு மற்றும் சீனா ஆகிய நாடுகளில் நடைபெற்ற நாசா விண்வெளி முகாம்களில் கலந்துகொண்டு தனது விருப்பத்தைச் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தையும் உறுதியையும் கண்ட பன்னாட்டு நிறுவனங்கள் கார்சனுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரகப் பயணத்திற்குச் சரியான வயதுதான் கார்சனுக்கு ஆகிறது. ஒரு நல்ல விண்வெளி வீராங்கனையாக வலம் வருவார். அதற்குத் தற்போது சரியான முடிவு எடுத்துள்ளார். நாங்கள் சரியான வழிமுறைகளில் பயிற்சி கொடுத்து வருகிறோம் என்று நாசா செய்தித் தொடர்பாளர் பால் போர்மேன் கூறியுள்ளார்.
தந்தையுடன் அலிசா
கார்சனின் தந்தை பெர்ட், விண்வெளி ஆபத்துகள் குறித்து கார்சனிடம் கலந்து ஆலோசனை செய்துள்ளேன். அவரது முடிவில் திடமாகவும் 2034இல் தமது கனவுகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையோடும் கார்சன் இருக்கிறார். எனவே, நாங்கள் அவரது விருப்பத்தை அறிந்து முழுமையான ஊக்கத்தினை அளித்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.