பெற்றோர் அறிவுதான் பிள்ளையின் அறிவா?
அறிவு என்பது பிறப்பால் வருவது என்ற பித்தலாட்டத்தின் மூலம், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அறிவுச் சுரண்டல் செய்தது ஆரியப் பார்ப்பனர் கூட்டம்.
இன்று அறிவியலாளர், அதிமேதாவி என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடியவர்கள்கூட பெற்றோர் அறிவு பிள்ளையின் அறிவைத் தீர்மானிக்கிறது என்று பிதற்றுகின்றனர்.
மரபணுக்கள் மதிநுட்பத்தைத் தீர்மானிக்கும் என்று அதற்கு அறிவியல் விளக்கம் அளிக்கவும் சிலர் முயற்சிக்கின்றனர்.
அப்பன் தொழில் பிள்ளைக்குச் சிறப்பாக வரும் என்று சங்கராச்சாரிகள்கூட ஓங்கி முழங்கி, குலக்கல்வியைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.
இவையெல்லாம் உண்மையா? பெரியவர்கள் மட்டுமன்றி பிஞ்சுகளும் சிந்தித்து ஒரு தெளிவான முடிவுபெற வேண்டும். இல்லையென்றால் ஆதிக்கவாதிகளின் வஞ்சக வலையில் சிக்கிச் சீரழிய நேரும் என்பதால் இதுகுறித்து பிஞ்சுகள் விழிப்புப் பெற வேண்டியது கட்டாயம்.
பிறப்பு என்பது ஆணின் விந்தணுவும் பெண்ணின் சினை அணுவும் சேர்ந்து கருவாகி, உருவாகி, குழந்தையாகி, 10 மாத முதிர்ச்சியில் வெளிவரும் நிகழ்வு.
ஆக, ஒரு பிள்ளையின் பிறப்பில் தாய், தந்தை இரண்டு பேரின் பங்களிப்பும் உண்டு. மரபு என்று வரும்போது
தாயின் மரபில் தலைமுறைகள் உண்டு, தந்தை மரபாலும் தலைமுறைகள் உண்டு. ஒரு பிள்ளையின் உடல், நிறம், நலம், குணம் இவற்றைத் தீர்மானிப்பதில் அய்ந்தாறு தலைமுறைகளின் தாக்கம்கூட பிள்ளைக்கு வரும். இப்படியிருக்க பிள்ளையின் அறிவு பெற்றோருக்கு என்பது உண்மையன்று; சரியுமன்று!
உடல்நலம், உள்ள இயல்பு, உடல் அமைப்பு பரம்பரைத் தாக்கத்தால் அமையும். ஆனால், அறிவு என்பது அப்படி வருவதல்ல; அமைவதல்ல; தீர்மானிக்கப்படுவதல்ல.
அறிவு என்பது அனுபவத்தால், அறிவதால் வருவது. அதனால்தான் அறிவைப் பட்டறிவு என்றும் படிப்பறிவு என்றும் பகுத்தனர். பிறப்பறிவு என்று பிறப்பால் அறிவு அமையும் என்று எவரும் கண்டுணர்ந்து கூறியதில்லை; கூறுவது-மில்லை.
ஒருவரது அறிவு என்பது அவரின் முயற்சியை _ பயிற்சியைப் பொறுத்தது. சுற்றுச்சூழலை, வாய்ப்பை, கற்பிப்போரை, பயிற்றுவிப்போரைப் பொறுத்தது.
நல்ல படித்த பெற்றோரின் பிள்ளைகள் கல்வியில் மிகவும் பின்தங்கி மண்டாக இருப்பதுண்டு; அறவே படிக்காத கைநாட்டுப் பேர்வழியின் பிள்ளைகள் சிறந்த கல்வியாளராக, ஆய்வாளராக மிளிர்வதும் உண்டு!
ஒருகாலத்தில் படிக்கவே கூடாது என்று கல்வி மறுக்கப்பட்ட ஜாதிகளில் பிறந்த பிள்ளைகள், இன்று கல்வியில் உயர்நிலையில் முதல் தரத்தில் சிறப்புற்றுத் திகழ்வதையும்; கல்விக்கே உரிய ஜாதி என்று சொல்லிக் கொண்ட பார்ப்பன ஜாதிப் பிள்ளைகள் பின்தங்கி நிற்பதையும் நடப்பில் நாளும் காணலாம்.
பள்ளி இறுதித் தேர்வு முடிவாயினும், மேல்நிலைத் தேர்வாயினும், பல்கலைக்கழகத் தேர்வுகளாயினும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிள்ளைகள் – படிக்காத பெற்றோரின் பிள்ளைகள் முதல் தரத்தில் முதல் நிலையில் முந்தி நிற்பதை, சிறந்து விளங்குவதைக் காணலாம்.
ஒட்டுமொத்தமாக, சமையலுக்காகவே பிறந்தவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்ணினம், இன்றைக்கு கல்வியில், அறிவில், அறிவியலில் உயர்ந்து, சிறந்து நிற்பதைக் காணலாம்.
ஒவ்வோராண்டும் ஆண்களைக் காட்டிலும் பெண்களே கல்வியிலும், தரத்திலும் உயர்ந்து நிற்கின்றனர். அதிக மதிப்பெண்ணை வாங்கிக் காட்டுகின்றனர்.
ஆக, பரம்பரையாகப் படிக்கப் பிறந்தவர்கள் என்று பட்டயம் கட்டிநின்ற பார்ப்பனப் பிள்ளைகளைப் பின்னுக்குத் தள்ளி, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிள்ளைகள் கல்வியிலும், அறிவியலிலும், ஆற்றலிலும் முதலில் நிற்பதும்; அடுப்பூதவே தகுதியானவர்கள் என்று அடையாளப்-படுத்தப்பட்ட பெண்கள் ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி கல்வி, அறிவு, அறிவியலில் முன்னிலையில் சாதிப்பதும் எதைக் காட்டுகின்றன?
அறிவை, பிறப்பு தீர்மானிப்பதில்லை என்பதைத்தானே?
அதேபோல் அறிவை ஆண்டவன் தீர்மானிக்கிறான் என்பதும்; அவன் பிறந்த கிரகம் தீர்மானிக்கிறது என்பதும் அடிமுட்டாள்தனமான கருத்துகள்.
இவற்றைப் பிஞ்சுகளுக்கு ஏன் சொல்ல வேண்டியுள்ளது என்றால், பிஞ்சுகளின் உள்ளத்தில் உண்மைக்கு மாறான மூடக் கருத்துகள் புகுத்தப்பட்டு, அவர்களின் ஆர்வம், துடிப்பு, முயற்சி இவை ஒடுக்கப்படக் கூடாது என்பதற்காகவும், பிஞ்சுகள் மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு விழிப்போடு நின்று,
நமக்கும் அறிவு உண்டு, ஆற்றல் உண்டு, தகுதியுண்டு, திறமையுண்டு என்பதை உறுதியாய் நம்பி, ஊக்கத்தோடு முயன்று ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்.
அறிவு என்பது மண்ணில் கிடைக்கும் வைரம் போன்றது. அதை எந்த அளவிற்குத் தீட்டுகிறோமோ அந்த அளவிற்குக் கூர்மை பெறும்.
மூளை என்பது பிறப்பால் ஒன்றுதான். பட்டறிவாலும், கல்வியறிவாலும், பகுத்தறிவாலும் அறிவை வளர்த்து, விரிவாக்கி, கூர்மையாக்கி அறிவாற்றல் பெறுவது நம் கையில் என்பதை ஒவ்வொரு பிஞ்சும் நெஞ்சில் கொள்ள வேண்டும்.
பிறப்பால் அறிவு அமையாது. உழைப்பால் அறிவு அமையும்! அறிவை வளர்ப்போம்; ஆற்றல் பெறுவோம்! பிறப்பு பேதத்தை அறிவால் அகற்றுவோம்!